புதன், டிசம்பர் 14

கருகிய ரொட்டி


இந்த வலைப்பதிவை ஒரு ஜென்கதையோடு துவங்குவது பொருத்தமாய் இருக்கும் என நினைக்கிறேன், நீங்கள் ஏன் வலைப்பதிவு ஆரம்பிக்க கூடாது? என முகநூலில் என்னுடைய நண்பர்கள் கேட்கும்பொழுது (எண்ணிக்கை ஒரு கைவிரலுக்குள்ளே அடக்கம்) இந்த கதையின் மையக்கருத்தை ஒட்டியே அவர்களுக்கு பதிலளித்து கொண்டிருந்த்தேன். இந்த கதை நெடுநாட்களுக்கு முன் படித்தது இருந்தாலும் இன்னமும் என் நெஞ்சில் பசுமையாய் இருக்கிறது, இந்தளவு முன் அறிமுகம் போதுமானது என நினைக்கிறேன். படிக்கும் நபர்களை அதிகம் வெறுப்பேற்ற விரும்பவில்லை, கதைக்கு செல்வோம்.

ஒரு ஊரில் வசித்து வந்த தம்பதிகளுக்கு பலவருடங்களாய் குழந்தை இல்லாமல் இருந்து, பின்னர் ஒரு குழந்தை பிறந்தது. நாட்கள் நகர்ந்தது குழந்தை வளர வளர அவர்களுக்கு மற்றுமொரு துயரம் நேர்ந்தது, குழந்தை பேசாததே அது. அவர்களும் எத்தனையோ மருத்துவர்களிடம் காட்டியும் பலனில்லை, அனைத்து மருத்துவர்களும் சொல்லிவைத்தார்போல் இவன் உடலில் எந்த குறையும் இல்லை அதே சமயத்தில் இவன் ஏன் பேசவில்லை என்பது புரியாத புதிராகவே இருக்கிறது என்று கூறினர். அந்த தம்பதிகளும் தாங்க முடியாத துயரோத்தோடு நாட்களை கடத்தினர். குழந்தையும் வளர்ந்தான், அதே சமயத்தில் பேசவில்லை. ஒரு நாள் குழந்தையின் தாயார் ரொட்டி சுட்டுகொண்டிருக்கும்பொழுது கவனமின்மையின் காரணமாய் ரொட்டி கருக தொடங்கியது.




அப்பொழுது அருகிலிருந்த குழந்தை பேசத்தொடங்கினான் "அம்மா ரொட்டி கருகிறது"

தாய்க்கோ பயங்கர அதிர்ச்சியும்,ஆச்சரியமும் ஏற்பட்டது. "நீயா பேசியது” என்று கேட்டார்

அதற்கு மகனும் "ஆமம்மா நான் தான் பேசியது ரொட்டி கருகிறது, பாருங்கள்" என்றான்.

"உன்னால் பேசமுடியுமெனில் நீ இத்தனை நாட்களாய் ஏன் பேசாமல் இருந்தாய்" என தாய் கோபத்துடன் கேட்க

மகனோ "இத்தனை நாட்களாய் ரொட்டி கருகவில்லை, இன்றுதான் கருகுகிறது" என்றான்.

இவ்வளவுதான் கதை, இந்த அழகான கதை எல்லாம் சரியாக போய்க்கொண்டிருக்கும்பொழுது எதற்க்காக பேசவேண்டும் என்கிறது,  தேவையற்ற சமயத்தில் பேசாமல் இருப்பது சரிதானே! ஆனால் நமது சமூகத்தில் தினம் தினம் ரொட்டி கருகுகிறது, வலையுலகில் ஏராளமானேர் ரொட்டி கருகுவதை சரியாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள், அவர்களின் கருத்துக்கள் அனைவரையும் சென்றடைந்தாலே போதுமானது, நான் புதிதாக ஏதும் சொல்லத் தேவையில்லை என்பதுதான் என் எண்ணமாயிருந்தது. இருந்தாலும் எழுது,எழுது என்று என் அடிமனதிலிருந்து ஒரு குரல் அடிக்கடி என்னை தொந்தரவு செய்துகொண்டிருந்தது,அதன் பயனே இந்த முதல் பதிவும் இனிவரும் பதிவுகளும்.



17 கருத்துகள்:

  1. எங்கள் குழும நண்பர்களில் ஒருவர் வலைபதிவு உலகில் எழுத ஆரம்பித்து இருப்பது எங்களுக்கு பெருமையாக இருக்கிறது.

    எழுதுங்கள் உங்கள் எழுத்துக்கள் பலரை சென்றடைய வேண்டும். எப்போதும் எந்த நேரத்திலும் கைகொடுக்க நண்பர்கள் தயாராக இருக்கோம்.

    முதல் படைப்பு, முதல் பிரசவம் போல் தான்.

    அன்புடன்
    குழும நண்பர்கள் - வளைகுடா வாழ் தமிழ் நண்பர்கள் குழுமம்.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சகோ... தங்களை வருக வருக என வரவேற்பதில் பெருமகிழ்வடைகிறேன்...

    அருமையான கதை ஒன்றுடன் ஆரம்பித்தீர்கள்...

    இதே வேகமும் உத்வேகமும் என்றும் தொடரட்டும்...

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    ஊரைப் பிரிந்த புலம்பெயர் தமிழனின் ஏக்கம் என்ன?

    பதிலளிநீக்கு
  3. சகோ என்ன உதவி தேவைாயனாலும் கேளுங்கள்...

    முதலில் வேட்வெரிபிக்கேசனை நீக்குங்கள்...

    அத்துடன் வாக்குப் பட்டைகளை இணையுங்கள்... விரைவில் பல பார்வையாளர்களைப் பெறலாம்...

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் சகோ..!
    உங்களை வருக வருக என்று வரவேற்கிறேன்..!! வாழ்த்துக்கள்..!

    பதிலளிநீக்கு
  5. என்னை வலைபதிவு ஆரம்பித்து எழுத சொன்ன உங்களுக்குள் இப்படி ஒரு உத்வேகம் பிறந்தது பாராட்டுக்கு உரியது நண்பரே.... ""உங்கள் மனதில் உதிக்கும் எண்ணங்களை கர்வம் இல்லாமல் மற்றவர்களின் பார்வைக்கு வைக்கும்போதுதான் அதன் (உங்கள் எண்ணங்களின்) உண்மையான விலை தெரியும்"", எப்போதோ, எங்கேயோ படித்த வரிகள் (பிடித்ததும் கூட..). உங்கள் எழுத்து பணிக்கு என் உளமார்ந்த வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  6. வாழ்த்துகள் சகோ

    தொடர்ந்து பல நல்ல விஷயங்களை பகிருங்கள்

    பதிலளிநீக்கு
  7. வருகை தந்து கருத்து கூறிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  8. வாங்க தலைவா! வணக்கம்!!
    கருகிய ரொட்டியோடு
    தன் கலைப்பயணத்தை
    தொடங்கிய கலைஞனே!
    நீ இனி சுடப் போகும்
    ரொட்டிகள் தங்க ரொட்டியாய் மாற
    தமிழனாகிய என்
    தணியாத ஆசை!

    பதிலளிநீக்கு
  9. வாழ்த்துக்கள்...தமிழர்களின் சிறப்புக்களை தயவு செய்து வெளியிடுங்கள்..நன்றி..

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் நண்பா,
    எம்முடைய பல பதிவுகளின் நிலை குறித்து விமர்சனம் வழங்கி, எம்மையெல்ல்லாம் ஊக்கப்படுத்திய நீங்கள் இன்று வலையுலகிற்கு உங்கள் வலைப் பதிவினூடாக அடியெடுத்து வைத்திருக்கிறீங்க!
    அனைத்துத் தமிழ்ச் சொந்தங்களோடும் கரங் கோர்த்து உங்களை வருக வருக என்று வரவேற்கிறேன்!

    அப்புறம் ரொட்டி கதை பதிவுலக யதார்த்தத்தினை மறைமுகமாகச் சொன்னாலும், நீங்களும் எழுதினால் தானே கருகிய ரொட்டிகளுக்குள் நாம எப்போதாவது ஓர் நல்ல ரொட்டியைச் சாப்பிட்ட பீலிங் கிடைக்கும்!

    பதிலளிநீக்கு
  11. அண்ணே, ப்ளாக்கிற்கு பாலோவர் விட்ஜெட் வைக்கலையா?

    பதிலளிநீக்கு
  12. //எழுது,எழுது என்று என் அடிமனதிலிருந்து ஒரு குரல் அடிக்கடி என்னை தொந்தரவு செய்துகொண்டிருந்தது,அதன் பயனே இந்த முதல் பதிவும் இனிவரும் பதிவுகளும்.//
    வருக சகோதரரே.உங்கள் பதிவுலகப் பயணம் வெற்றிகரமாகப் பயணிக்க என் நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  13. வருகை தந்து கருத்து கூறிய ganelishan,ajarje,kulu,eswar,நிரூபன்,சித்தாரா மகேஷ் அனைவருக்கும் நன்றிகள் பல!

    பதிலளிநீக்கு
  14. "ஆனால் நமது சமூகத்தில் தினம் தினம் ரொட்டி கருகுகிறது"

    ரொட்டி ஏன் கருகுகிறது என்பதைப் பேச வேண்டும். பேசவில்லை என்றால் ரொட்டி யாருக்கும் பயன்படாது.

    வாழ்த்துகளோடு வரவேற்கிறேன்!

    பதிலளிநீக்கு

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது! :)