வியாழன், ஜனவரி 14

கல்யாணத்துக்கு பின்னாடி நாங்க படுற கஷ்டம்...

இந்தக் கட்டுரையை படிப்பதற்கு முன்பு இணைப்பிலுள்ள முத்து சிவாவின் கட்டுரையைப் படித்து விடுங்கள். நாட்டில் யாராருக்கெல்லாமோ எதற்கெல்லாமோ போராடுகிறார்கள் ஆனால் பேச்சுலர்களுக்கு நடக்கும் கொடுமையை ஒருவரும் தட்டி கேட்கவில்லையெனப் புலம்புகிறார். இக்கரைக்கு அக்கரை பச்சை, கல்யாணமானவங்க பிரச்சனையை பத்திதான் இந்த பதிவு. பேச்சுலர்ஸாவது தைரியமா புலம்பிறலாம் ஆனா கல்யாணமானவங்க அதையும் கூட பொண்டாட்டி பக்கத்துல இருக்காளான்னு பாத்துட்டுதான் புலம்ப முடியும். என் ராசாவின் மனசிலே படத்தில் கவுண்ட மணி வீட்டினுள்ளே அடி வாங்கிவிட்டு வெளியே வந்து சவுண்டு விடுவாரே அது போலத்தான் உள்ளது கல்யாணமானவங்க நிலமை. கல்யாணத்துக்கு முன் பத்தி கட்டுரைல அவர் சொல்லிட்டாரு, கல்யாணத்துக்குப் பின்பு என்ன பிரச்சனைனு நம்ம பாப்போம்.
 1. தியேட்டர்ல சீட்டு மாறி உக்காற்ரதுதான் பேச்சுலர்க்கு பிரச்சனை, பொண்டாட்டி மேக்கப் பண்ணி, டிரெஸ் மாத்தி, குழந்தைகளை ரெடி பண்ணி போயிட்டு திரும்பி வற்ர வரை கல்யாணமான ஆண்களுக்கு எல்லாமே பிரச்சனை.
 2. நல்ல ஏரியாவுல வீடு கிடைச்சாலும் வீட்டு ஓனர் பிரச்சனை, தண்ணி பிரச்சனை, பிள்ளைங்க பள்ளிக்கூடம் பக்கத்துல இருக்கனும்னு ஏகப்பட்ட பிரச்சனை. அதோட பேச்சுலர்ஸ் எல்லாம் வாடகையை ஏத்தி விட்டுறீங்க அது வேற பிரச்சனையாகுது.
 3. சனி, ஞாயிறு ஆபிஸ் வேலையே பாத்துடலாம். வீட்டுக்கு வந்தா ஒட்டடை அடிச்சு, ஜன்னலெல்லாம் துடைச்சு,  சமையல்ல உதவி செஞ்சுனு நம்ம வேலை லிஸ்ட் நீண்டுகிட்டே போகுது. யாருயா உங்களுக்கு சொன்னது கல்யாணமானவங்க சனி, ஞாயிறு வீட்ல நிம்மதியா தூங்க முடியுதுன்னு…
 4. ஏன் கல்யாண்மானவங்க, இன்னுமா கல்யாணம் பண்ணலனு பேச்சுலர்ஸ கேட்குறாங்க… யாம் பெற்ற துன்பம் பெருக இவ்வையகம்னுதான். கல்யாணமானவனும் சொல்ல மாட்டான், சொன்னா பேச்சுலரும் நம்ப மாட்டான்.
 5. விசேசம்னு வந்தா முதல்ல கஷ்டபடுறது கல்யாணமானவந்தான்யா… சீரு, முறைனு, மொய்னு கடன்பட்டு செய்யுறது யாரு? அவந்தான்யா…
 6. கல்யாணமானா போனே பேச முடியாது. யார்ட்ட பேசுற, என்ன பேசுறேங்குற கேள்வி வீட்டுகாரம்மாட்ட இருந்து வந்துட்டே இருக்கும். இதைக்கூட தாங்கிக்கலாம் ஆனா கல்யாணம் ஆகுறதுக்கு முன்னாடி மட்டும் எவ்ளோ நேரம் எங்கூட பேசுன, இப்ப ஏன் பேசுறது இல்லைனு பண்ற டார்ச்சர மட்டும் தாங்கவே முடியாது. அதுக்கு அப்புறம் போன்ல பேசுற ஆசையே போய்டும். இது மட்டும் இல்லையா Fb, Google பாஸ்வேர்டு வாங்கி வச்சுட்டு நம்ம யாருக்கு லைக் போடுறோம், யாருக்கு Friend request கொடுக்குறோம், என்ன மெயில் அனுப்புறோம்னு உளவு பாக்குறது தனி. இந்தக் கொடுமையெல்லாம் அனுபவிச்சாதான் தெரியும்.
 7. தம்பி, பொண்ணுங்கல்லாம்தான் இப்ப குப்பைல புரண்டுகிட்டு இருக்குங்க. கல்யாணமான ஆம்பளைங்கதான் வீடு கூட்டிட்டு இருக்காங்க. அதனாலதான் உங்க நண்பர் உங்களை ஏன் வீடு குப்பையா இருக்குன்னு கேட்குறாரு.
 8. ஹையோ, ஹையோ இன்னும் இந்தத் தம்பி பச்ச புள்ளையாட்டமே பொண்ணுங்க எல்லா வீட்டு வேலையும் செய்யும்னு நம்பிகிட்டு இருக்குறாரு. ரூம் கூட்டுறது, துணி துவைக்குறது முதற்கொண்டு கக்கூசு கழுவுற வரை எல்லாமே பசங்கதான்யா பண்றாங்க.
 9. பாயிண்ட் நம்பர் நாலுல சொன்னதுதான். திருப்பி அதை ஒரு நாலுவரி கதைல பாத்துடலாம். ஒரு காட்டுக்கு நாலு நண்பர்கள் போனாங்களாம், அங்க ஒரு கை மட்டும் உள்ள போற மாதிரி சின்ன பொந்து இருந்துதாம். முதல்ல ஒருத்தன் அதுல கைவிட்டானாம், உள்ள இருந்த தேள் அவனை கொட்டிருச்சாம். என்னடா இருக்குனு அடுத்தவன் கேட்க அவன் சொன்னானாம் உள்ள ஜிலு ஜிலுனு காத்து வருதுன்னு. அதை நம்பி ஒவ்வொருத்தனும் கையை உள்ள விட, வரிசையா கையை விட்ட எல்லாருமே தேள்கிட்ட கொட்டு வாங்குனாங்களாம். ஒருத்தன் கூட இன்னொருத்தனுக்குத் தேள் இருக்குற உண்மைய சொல்லலையாம். அந்த மாதிரிதான் கல்யாணமானவங்க எப்போ கல்யாணம்னு பேச்சுலர்ச பாத்து கேட்கிறது. அதுக்கு மறைமுகமான அர்த்தம் நீ அடுத்து எப்ப கொட்டு வாங்க போறேன்னுதான்.
 10. பாஸூ கல்யாணமானவங்கல்ல ரொம்ப பேரு கேண்டீன்லதான் சாப்பிடுறாங்க. வீட்டுச் சாப்பாட்டுக்கு கேண்டீன் சாப்பாடு எவ்வளவோ தேவலம். வீட்டு சாப்பாடு சாப்பிடுறவங்க எல்லாம் மைனாரிட்டிதான். அந்த மைனாரிட்டிலியும் மெஜாரிட்டி கேண்டீன் சாப்பாடு வெட்டி செலவு, அது உங்களுக்கு ஒத்துகாதுன்னு மனைவி இம்சை பண்ணி சாப்பாடு அனுப்புறதால சாப்பிடுறவங்க.
 11. சமைக்குறது மட்டுமில்லயா வீட்டுக்கு போய் பாத்திரத்தை கழுவறதும் கல்யாணமான ஆம்பிளங்கைதான்யா… ஏன்யா வயித்தெரிச்சலை கிளப்புறீங்க.
 12. நாங்களும் நண்பனோட படம் பாக்கத்தான் ஆசைப்படுவோம், ஆனா எங்களுக்கு அனுமதி கிடைக்கனுமே… போகக்கூடாதுன்னா போகக்கூடாது அப்படின்னு வீட்டுக்காரம்மா சொன்ன பின்னாடி நாங்க எப்படிய்யா வர்றது? தியேட்டர்ல இல்லையா, வீட்டுல கூட நமக்கு பிடிச்ச மாதிரி, யூ டியூப்ல கூட ஒரு படம் தனியா பாக்க முடியாது.
 13. பாயிண்ட் நம்பர் நான்கு மற்றும் ஒன்பதைத் திரும்ப படிக்கவும்.
 14. கல்யாணமானவங்களுக்கு ஞாயிற்றுக் கிழமை என்ன சமைக்குறதுங்குற பிரச்சனையே இல்லை. ஒன்னு நாங்கதான் சமைக்கனும் அது ஒரு வேளை போரடிச்சா ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு ஹோட்டலுக்கு கூட்டிட்டு போகனும். அந்த ஹோட்டல்ல சாப்பாடு சரி இல்லைனாலும் நாங்கதான் திட்டு வாங்கனும்.


என்னோட நண்பன் ஒருத்தன்கிட்ட எப்படி உனக்கு பொண்ணு வேணும்னு கேட்டேன்? அதுக்கு அவன் சொன்னான், நல்லா சமைச்சு போடனும், துணி துவைக்கனும், வீடு கூட்டனும், கை கால் அமுக்கனும், வாரா வாரம் நல்லா எண்ணைய் தேய்ச்சு விடனும்னு. நான் மனசுக்குள்ளேயே சிரிச்சுகிட்டேன், இரு மகனே இருன்னு. இப்ப அவனுக்கு கல்யாணமாகி அழுதுகிட்டே அந்த வேலையேல்லாம் அவனே பாத்துகிட்டு இருக்கான். ஆசைப்படாதே, அவதிப்படாதே… யாரோ ஒருத்தர் ஒரு பட்டிமன்றத்துல சொன்னாரு, கல்யாணம் நிச்சயம் பண்ணி, கல்யாணம் ஆகுற வரைதான் ஆம்பளைக்கு சந்தோசம். கல்யாணம் ஆகுறதுக்கு முன்னாடி ஆகலையேன்னு கவலை, ஆன பின்னாடி ஆயிருச்சேன்னு கவலை. அது முற்றிலும் உண்மை.

ஆகவே கல்யாணம் ஆகாத தம்பிகளே, கல்யாணமான ஆம்பிளையா இருக்குறது ஒண்ணும் சாதாரண விஷயம் இல்ல. எத்தனை சிக்கல், எத்தனை டென்ஷன், எத்தனை கண்ணீர், எத்தனை நன்றி, எத்தனை மன்னிப்பு, எத்தனை புகழ்ச்சி, எத்தனை சகிப்புதன்மை, எத்தனை வேலை இன்னும் எத்தனை எத்தனையோ...   

யாருப்பா அது விழுந்து விழுந்து சிரிக்கிறது? ஓ பேச்சுலரா.. உங்களுக்கும் கல்யாணம் ஆகும், அப்ப படிச்சு பாருங்க ஆனந்த கண்ணீரே வரும். 

பி.கு: இக்கட்டுரை என்னை சுற்றி நடப்பவைகளை (என் தனிப்பட்ட வாழ்வையல்ல :p ) வைத்து எழுதியது. சமூகத்தின் உண்மையான நிலைகள் வேறு மாதிரியும் இருக்கலாம். யாரையும் புண்படுத்தும்/இழிவுபடுத்தும் நோக்கமுடையதல்ல. 


9 கருத்துகள்:

 1. எந்தப் பெரிய நகைச்சுவைக்குப் பின்னாலும் ஒரு பெரும் சோகம் இருக்கும் என்பார்கள்... அது உண்மைதான் என்பதை உலகப் புகழ்பெற்ற சார்லிசாப்ளின் வரலாறே சொல்லும்..நான் இனி வேறென்ன சொல்ல..? தொடருங்கள், தொடர்வேன். வணக்கம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கருத்திற்க்கு நன்றி முத்து நிலவன்...

   நீக்கு
 2. பெயரில்லாஜனவரி 14, 2016

  அனைத்து விதமான அடிமைத்தனங்களையும் ஒழிப்பதுதான் உண்மையான விடுதலை என்று மார்க்ஸ் சொல்வதுதான் இந்த திருமணமாகாதவர் vs திருமணமானவர் பிரச்சனைகளில் ஞாபகத்துக்கு வருகிறது.ஆண் பெண் இருபாலரும் பல்விசயங்களில் அடிமைகளாக உள்ள போது எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியும் .இந்திய சமூகத்தில் பெண்கள் நிலை மோசம் இந்த நிலை மாறாமல் திருமணத்திற்கு பின்பு வாழ்கை மகிழ்ச்சியாக இருக்க முடியும்

  பதிலளிநீக்கு
 3. கருத்தளித்தமைக்கு நன்றி! ஆமாம் ஆண், பெண் என எல்லாவிதமான ஆதிக்கம் மற்றும் அடிமைத்தனத்திற்க்கும் முற்றுபுள்ளி வைக்க வேண்டும் என்பது சரியே. மேலும் சமூக சூழ்நிலைகளே இந்த அடிமைத்தனத்தை உருவாக்குவதில் பெரும்பங்கு வகிக்கிறது என்பதும் உண்மை.

  பதிலளிநீக்கு
 4. உஙகள் அனுபவத்தை தெரிந்து கொண்டேன்...நன்றி!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதான் நீங்க கல்யாணமே பண்ணிக்கலையா தோழர்...

   நீக்கு
  2. அதுக்கு பல காரணங்கள் இருக்கிறது தோழரே... என் பதிவில் அனுபவம் என்ற குறிச் சொல்லில் படித்தால் தாங்கள் தெரிந்து கொள்ளலாம் தோழரே...

   நீக்கு

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது! :)