வெள்ளி, ஜனவரி 6

நோய் முதல்நாடும் மருத்துவர்களே...


முதலில் மருத்துவர் சேதுலட்சுமியை படுகொலை செய்தவர்களை கடுமையாக கண்டிக்கிறேன். மிகவும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டிய செயலை செய்த குற்றாவளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு அவர்களுக்கான தண்டனை வழங்கப்படவேண்டும் இதில் எனக்கு எந்த மாற்று கருத்தும் இல்லை.

பொதுவாகவே மருத்துவர்கள் மீதான குற்றச்சாட்டு வைக்கப்படும்பொழுதெல்லாம், அது ஏதோ சில புல்லுறுவிகள் செய்யும் வேலை, ஒரு சிலர் செய்யும் தவறுக்கு அனைவரின் மீதும் குற்றம் சுமத்துவது நியாயமாகுமா? என்பது போன்ற கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன. அப்படி ஒருசிலர் தவறு செய்வது உண்மை என்பதாக நீங்களே ஒத்துகொள்கிறீர்கள், அம்மாதிரி தவறிழைப்பவர்களுக்கான தண்டனை இதுவரை என்ன கிடைத்துள்ளது. போராட்டத்தை கொச்சை படுத்துகிறார்கள் என்று சொல்லும் மருத்துவர்களே, இது என்ன ஒரே  நாளில் விளைந்த வெறுப்பா? இந்த வெறுப்பின் பின்னால் சில மருத்துவர்களின் அலட்ச்சியபோக்கும், பணம் பறிக்கும் எண்ணமும் இல்லையா? எந்த காரணமும் இன்றியா மக்கள் உங்களை வெறுக்கிறார்கள். தவறுக்கான நீதி கிடைக்காத போது, தவறு செய்த நபர் சார்ந்திருக்கும் கூட்டம் மீது மக்களின் வெறுப்பு படிவது இயல்பே! இம்மாதிரியான பிழையான நபர்களுக்கு கிடைக்கும் தண்டனையில்தான் மற்ற மருத்துவர்களின் கவுரவம் அடங்கியுள்ளது. தாங்கள் இழைக்கும் தவறுகளுக்கு சுயவிமரிசனம் ஏற்க்காத புனிதர்களின் கூட்டமாகத்தான் மருத்துவர்கள் எப்போதும் இருக்கிறார்கள். இந்த பொறுப்பற்ற தன்மையின் விளைவாய் வந்ததே, இன்றிருக்கும் மக்களின் வெறுப்பு. மருத்துவர்களின் மதிப்பை ஊடகங்கள் பொறுப்பற்ற வகையில் சிதைப்பதாக சொல்லுகிறீர்களே, ஊடகங்கள் உங்களின் புனித பிம்பத்தை கலைப்பதால்தானே இவ்வளவு கூச்சலும்.

எந்த விசயத்தையும் கருப்பு, வெள்ளை என்ற மனநிலையில் வைத்து நான் பார்க்க விரும்பவில்லை. ஆனால் வெள்ளை என்பதை காட்டிலும், கருப்பு எனும் பக்கங்கள் அதிகமாய் இருப்பதாகவே உணர்கிறேன். இலாப நோக்கற்ற பல மருத்துவர்கள் பணிபுரிந்து கொண்டிருப்பதை அறிவேன். அதே சமயம் மருத்துவத்தை வியாபரமாக்கும் போக்கும் சமீபத்தில் அதிகரித்துள்ளது, இதன் பயனாகவே மக்களுக்கு மருத்துவர்கள் மீதான வெறுப்பின் அளவு  கணிசமான அளவு அதிகரித்துள்ளது. மருத்துவ படிப்பு என்பது சேவைக்கான ஒன்றாக இருந்த காலம் ஒன்று இருந்தது, ஆனால் இப்போதும் யாரும் அம்மாதிரி நினைப்பதில்லை. மருத்துவ படிப்பை வருமானத்துக்கான வழியாகவே பார்க்கின்றனர்  மருத்துவத்தை காட்டிலும் எளிதாக வருமானம் அதிகமாய் பொறியியலில் கிடைப்பதால், மாணவர்கள் மருத்துவத்தை விட்டு பொறியியலுக்கு தாவுகின்றனர். பார்க்க செய்தி. , எல்லாவற்றையும் பணத்தின் அடிப்படையிலேயே சிந்திக்கும் இம்மாதிரியான மனிதர்கள்.  நாளை மருத்துவர்களானால், "நினைப்பதற்க்கே அச்சமாயுள்ளது". அரசும் திட்டமிட்டு அரசு மருத்துவமனைகளை புறக்கணித்து, தனியார் மருத்துவமனைகளை மறைமுகமாக ஊக்குவிக்கிறது. இதன் விளைவாக வருவதே தனியார் மருத்துவமனைகளின் இலாபவெறி. சமீபத்தில் பிரதமர் காரைக்குடியில் திறந்த மருத்துவமனைகள் ஏழைகளுக்கானது என்று சொன்னால் யார்தான் நம்புவார்கள்? இப்போது நடந்த கொலை சம்பவமும் கூட, அரசு மருத்துவமனையில் நடந்ததல்ல, அரசு மருத்துவரின் சொந்த மருத்துவமனையில் நடந்ததே.

இந்த சம்பவத்திலுமே கூட கொலையுண்ட மருத்துவர் anesthetist மட்டுமே, அவர் மகப்பேறு மருத்துவரோ அல்லது அறுவைசிகிச்சையாளரோ அல்ல என்று டெக்கான் குரோனிக்கள் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. இந்த செய்தி உண்மையாயிருக்கும் பட்சத்தில் மருத்துவர் செய்தது கடும் குற்றமாகிறது. அதே சமயத்தில் தமிழ்நாடு முழுவதும் மருத்துவர்கள் நடத்திய போராட்டமும் முட்டாள்த்தனமாகிறது. 

இந்திய மருத்துவ துறையில் கடந்த காலத்தில் நடந்த  சில சம்பவங்களை இப்போது பார்ப்பது பொருத்தமாய் இருக்கும் என நினைக்கிறேன்.

66 பேரின் கண்ணை பறித்த ஜோசப் மருத்துவமனை இன்னும் இயங்கி கொண்டுதானே உள்ளது, ஜோசப் மருத்துவமனையின் தவறான சிகிச்சையால் பார்வையிழந்த நபர்களை கதையை கேட்டால் நம் கண்ணில் இரத்தம் வழியும்,பார்வையிழந்தோரில் பெரும்பாலானோர் கூலிவேலை செய்து பிழைக்கும் முதியோர். அவர்களுக்கு ஒரு இலட்சம் அளித்ததே, அரசு அப்போது தந்த இழப்பீடு. 2008ல் நடந்த இந்த சம்பவத்திற்க்கு மிகக்கடுமையான நீதிமன்ற போராட்டத்திற்க்கு பின்னரே வழக்கு சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றப்பட்டு 2011ல் மருத்துவர்கள் மீதும் அதிகாரிகள் மீதும் வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கு எப்போது முடியும்,தீர்ப்பு எப்போது வரும் என்பது இந்தியநீதித்துறையின் வேகத்தை அறிந்த பாமரர்களும் எளிதில் சொல்லிவிடலாம்.

முன்னேறிய நாடுகளை காட்டிலும் குறைந்த செலவில் மருத்துவம் பார்ப்பதாக சொல்லி வெளிநாட்டினரை கவர்ந்திழுத்து மருத்துவ சுற்றுலா நடத்தப்படும் இதே நாட்டில்தான், முறையற்ற பாதுகாப்பு வசதிகளை கொண்டு தொண்ணூறு உயிர்களை கருக்கிய கொல்கத்தா மருத்துவமனையும், ஒரே வாரத்தில் 11 குழந்தைகள் இறந்துபோன ஆந்திராவின் கர்னூலும், இரண்டே நாட்களில்  12 குழந்தைகள் உயிரிழந்த கொல்கத்தாவின் பி.சி.ராய் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையும் இருக்கிறது.

இந்த சம்பவங்கள் என்றில்லை இது போன்று உதிரியான பல சம்பவங்களை காட்டலாம், உதாரணத்திற்க்கு சில,

11 வகுப்பு படிக்கும் தன் மகனை வைத்து பிரசவம் பார்க்க வைத்த மணப்பாறை மருத்துவ தம்பதியினர் முருகேசன் மற்றும்காந்திமதி,
சிவகங்கையில் தவறான முறையில் இரத்தம் எடுக்கப்பட்டதால் மரணமடைந்த இளைஞர் முத்துராஜா,  உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காமல் தாமதப்படுத்தியதால் உயிரிழந்த ஆலங்குடி மாணவி நிவேதா என ஏராளமான சம்பவங்கள் நம் நாட்டில் நடக்கிறது 

இம்மாதிரி எத்தனையோ சம்பவங்கள் நடைபெற்றாலும் மருத்துவர்கள் யாரும் எப்போதும் தண்டிக்கப்பட்டதாக செய்தி எதுவும் வருவதில்லை. மருத்துவர்களும் மனிதர்கள் தான் என்றால், தவறுக்களுக்கான சட்ட ரீதியான தண்டனை அவர்களுக்கு கிடைக்கிறதா என்பது பெரிய கேள்விக்குறியே. தடுப்பூசி உற்பத்தி செய்யும் பொதுத்துறை நிறுவனங்கள் மூடப்படுவது, அரசு மருத்துவமனைகளில் போதிய வசதியின்றி இருப்பது, மருத்துவர்,செவிலியர்,சுகாதார பணியாளர் மற்றும் உயிர்காக்கும் மருந்துகளின் பற்றாக்குறை, விலையேற்றம் என மருத்துவத்துறை நித்தம் நித்தம் எத்தனை பிரச்சனைகளை சந்திக்கிறது? இவற்றில் எத்தனை பிரச்சனைகளுக்காக மருத்துவர்களாகிய நீங்கள் போராடுகிறீர்கள்? இம்மாதிரி பிரச்சனைகளுக்கு மருத்துவ சங்கங்கள் கண்டணம் ஏதும் தெரிவிக்கிறதா? என தெரியவில்லை. சங்கம் என்பது ஊதிய உயர்வுக்கும், தங்களுக்கு பிரச்சனை என்று ஏதாவது வரும் பொழுது வேலைநிறுத்தம் செய்வதற்க்கும் மட்டும்தான் என்பது எரிச்சலூட்டுகிறது.அலட்சியத்தையும், மரியாதையின்மையையும் நிறைய மருத்துவர்களிடம் எளிதாக காண முடியும். மருந்து நிறுவனக்களிடமிருந்து ஊக்கதொகை பெற்றுகொண்டு, அந்த மருந்துக்களை பரிந்துரைப்பது. அரசு மருத்தவர் தனியாக மருத்துவமனை நடத்தி அரசு மருத்துவமனையில் சரியாக சிகிச்சை அளிக்காதது, தேவையற்ற பரிசோதனைகளுக்கு பரிந்துரைப்பது என்று பல குற்றச்சாட்டுகள் மருத்துவர்கள் மீது தொடர்ச்சியாக வைக்கப்படுகிறது. மருத்துவ பரிசோதனைகள் செய்ய சொல்லும் மருத்துவர்கள் அந்த மருத்துவ பரிசோதனை ஏன் செய்யப்படுகிறது? அதற்க்கான தேவை என்ன என்பதையும் விளக்கலாமே? காரணமின்றி காரியமில்லை. எத்தனையோ நபர்கள் தினமும் இறந்தாலும், அத்தனை நபர்களும் மருத்துவர்களோடு சண்டைக்கோ அல்லது மருத்துவமனை முற்றுகைக்கோ போவதில்லை.

இந்தியாவில் மருத்துவர்களை கண்காணிக்க சட்டம் ஏதும் உள்ளதா?அப்படி இருந்தால் தவறான சிகிச்சை அளித்த  எத்தனை மருத்துவர்கள் அந்த சட்டத்தின் பயனாய் தண்டிக்கப்பட்டுள்ளார்கள்? மருத்துவர்கள் பணியில் தவறு செய்தால், அவர்களை கடுமையாக தண்டிக்கும் சட்டங்கள் உருவாக்கப்படவேண்டும். மருத்துவர்களும் மனிதர்கள்தான் என்பதை நான் ஒத்துகொள்கிறேன், அதே சமயம்  அந்த மனிதர்கள் தவறு செய்தனரா இல்லையா என்று  சாதாரண மனிதர்களாகிய நாங்கள் எப்படி கண்டறிவது? ஒரு நோயாளிக்கு தனக்கு அளிக்கப்படும் சிகிச்சை சரியானதுதானா என்று அறிந்து கொள்ளும் உரிமை இருக்கிறதா? இல்லையா? முதலில் நோயாளிக்கும்,மருத்துவர்களுக்குமான இடைவெளி களையப்பட வேண்டும். மருத்துவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் சரியாக விசாரிக்கப்படவேண்டும், தவறு செய்யும் மருத்துவர்கள் தண்டிக்கப்படுவார்கள் எனும் நம்பிக்கை மக்களின் மனதில் வரவேண்டும். அடிக்கடி தொலைக்காட்சிகளில் தவறான சிகிச்சை அளித்ததால் மக்கள் மருத்துவமனையை முற்றுகை எனும் செய்தி வருகிறது, அதன்பின் அந்த மருத்துவமனை மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பது மட்டும் வருவதே இல்லை. தவறிழைப்பவர்களின் மீது எடுக்கப்படும் சரியான நடவடிக்கை மூலமே மக்களுக்கு, மருத்துவர்கள் மீதான நம்பிக்கையும்,மதிப்பும் வளர வாய்ப்புள்ளது. தங்கள் மீது சுமத்தப்படும் குற்றங்களுக்கு பதிலளிப்பதை விடுத்து, அந்த குற்றச்சாட்டுகளுக்கு பின்னர் உள்ள உண்மையான தவறை கண்டறிந்து அதை திருத்தி கொள்வதற்க்கான செயலை செய்ய மருத்துவர்கள் முன்வர வேண்டும். வேலை நிறுத்தம் செய்வதில் தங்கள் ஒற்றுமையை காட்டும் மருத்துவர்கள், அதே ஒற்றுமையை தங்கள் கூட்டத்திலிருந்து தவறிழைக்கும் சில மருத்துவர்களை தண்டிப்பதிலும் காட்ட வேண்டும். ஏனெனில் விலைமதிப்பற்ற எங்களின் உயிர் என்றும் உங்கள் கைகளில்தான் உள்ளது.

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் 
வாய்நாடி வாய்ப்பச் செயல்.


முடிவாக மக்களின் வெறுப்பென்னும் நோயோடு போராடாமல், அந்நோய்க்கான காரணத்தை கண்டறிந்து அதை தீர்க்கும் வழியை பாருங்கள்.