வெள்ளி, ஜனவரி 29

உடல்நலம் மேம்பட செய்ய வேண்டியது என்ன?

உடல்நலம் என்றால் என்ன?

உடல்நலம் என்பது நோயற்றிருப்பதோ அல்லது பலவீனமாக இல்லாதிருப்பது மட்டுமல்ல, முழுமையான உடல்,உள்ளம் மற்றும் சமூக நலத்துடன் இருப்பது என உலக சுகாதார நிறுவனம் வரையறுக்கிறது. பொதுவாகக்  காட்சி மற்றும் அச்சு ஊடகங்கள் நோய் என்பதைத் தனிப்பட்ட மனிதரின் பிரச்சனையாகவும் அவரின் தனிப்பட்ட பொறுப்பாகவும் வெட்டிச் சுருக்கிவிடுகின்றன. ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி, யோகா என்பதை அடிக்கடி விளம்பரப்படுத்துகின்றன, இவை தேவையற்றவை என்பதல்ல என் கூற்று, இவை மட்டும் போதுமானதா என்பதே என் கேள்வி? இதையும் தாண்டினால் நோயாளி மற்றும் மருத்துவரின் கேள்வி பதிலுடன் முடித்துக் கொள்கின்றன. உண்மையில் உடல்நலன் என்பது இந்த வட்டத்திற்குள் மட்டும் சுற்றி வருவதா?

நோய்களும் இறப்புகளும் ஓர் உலகளாவிய பார்வை

உலக சுகாதார நிறுவன அறிக்கையின் படி 1. இருதய அடைப்பு 2. பாரிசவாதம் 3. சுவாசப்பை தொற்றுகள் 4. சுவாசப்பை அடைப்புகள் ஆகிய நான்கு நோய்களே உலகளவில் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்துவதானாலும் இதில் அதிக வருமானமுள்ள நாடுகளுக்கும் குறைந்த வருமானமுள்ள நாடுகளுக்கும் பாரிய வேறுபாடுகள் உள்ளன. அதிக வருமானமுள்ள நாடுகளில் நிகழும் பத்து மரணங்களில் ஏழு மரணங்கள் எழுபது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவராய் இருக்க, குறைந்த வருமானமுள்ள நாடுகளில் இது பத்திற்கு இரண்டாக உள்ளது மீதமுள்ள எட்டில் நான்கு மரணங்கள் 15 வயதிற்கும் குறைந்த சிறுவர்களாவர். வளர்ந்த நாடுகளிலோ 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் மரணம் 100 ல் 1 ஆக உள்ளது.

வளர்ந்த நாடுகள் தொற்றல்லாத நோய்களினாலேயே அதிகம் பாதிக்கப்படுகிறது (87%). சுவாசத்தொற்று நோய்கள் மட்டுமே இங்குப் பெரிதும் ஆதிக்கம் செலுத்துகின்றன. இதுவே இந்தியா போன்ற வளரும் நாடுகளில் 57% ஆகவும் இன்னும் ஏழ்மையான நாடுகளில் 37% ஆகவும் உள்ளது. ஏழ்மையான மற்றும் வளரும் நாடுகள் மலேரியா,வயிற்றுப்போக்கு, காசநோய் உள்ளிட்ட தொற்று நோய்களாலேயே அதிகம் பாதிக்கப்படுகின்றன. மேலே கண்ட புள்ளி விவரங்களிலிருந்து நாம் அறிவதென்ன? வளர்ந்த நாடுகளில் இருப்போருக்கும் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் மற்றும் ஏழை நாடுகளில் இருப்போரின் உடல்நலத்திற்கு இடையே பாரிய வேறுபாடுகள் உள்ளன. நம் போன்ற நாடுகளில் உள்ளோரின் உடல்நலத்தை மேம்படுத்த வேண்டுமென்றால் அடிப்படை சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டும் அதோடு சேர்ந்து மருத்துவ வசதிகளையும் மேம்படுத்த வேண்டும்.

இந்தியாவின் நிலை

சர்வதேச மருத்துவ இதழான “லான்செட்”, “இந்திய அரசு ஆண்டொன்றுக்குக் குறைந்தபட்சம் ஒன்றரை இலட்சம் கோடி ரூபாய் நிதியை மருத்துவம்-பொது சுகாதாரத்திற்கு ஒதுக்கீடு செய்தால் மட்டுமே, அடுத்த 20 ஆண்டுகளில் தொற்று நோய்களால் ஏற்படும் இழப்பு, தாய்-சேய் இறப்பு விகிதம் ஆகியவற்றை உலகத்தரத்திற்கு ஈடாகக் குறைக்க முடியும்” எனத் தெரிவிக்கிறது ஆனால் கடந்த 2015ல் நிதிநிலையில் பொதுச் சுகாதாரத்திற்கென்று ஒதுக்கப்பட்ட தொகை வெறும் 33,152 கோடி மட்டுமே. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுகாதாரத்திற்கென்று ஒதுக்கப்படும் தொகை வெறும் 1.3% மட்டுமே. நம் அருகில் உள்ள சைனாவில் இது 3%, அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் முறையே 7.6%,8.1% ஒதுக்கப்படுகிறது. இந்திய நோயாளிகளின் கடலிலிருந்து சில துளிகள்

500:1 என்ற விகிதத்தில் இருக்க வேண்டிய மக்கள்-மருத்துவர் விகிதம், 500:0.3 ஆக உள்ளது. இந்த விகிதமும் 29 சதவீத கிராமப்புற மக்களுக்குக் கிடைப்பதில்லை.

3 வயதுக்கும் கீழ் உள்ள குழந்தைகளில் 60 சதவிகிதத்தினர் குறைவான ஊட்டச்சத்து கொண்டுள்ளனர். ஆப்ரிக்க நாடுகளை விட இஃது அதிகமாகும்.

ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளில் மூன்றில் ஒன்று இந்திய குழந்தையாகும்.

உலகின் மொத்த காசநோயாளிகளில் 20% பேர் இந்தியர்கள்

நமது மருத்துவ அமைப்பு முறை

மக்கள் மருத்துவரை தெய்வமாக பார்த்த காலகட்டம் முடிந்து போய், மக்களைக் கண்டு மருத்துவர்கள் அஞ்சி தங்களையும் தங்கள் சொத்துக்களையும் அரசை நிர்ப்பந்தித்து சட்டமியற்றி காத்துக்கொள்ளும் படியான காலகட்டம் தற்போது ஏற்பட்டுள்ளது. சேவை என்பதை மறந்துவிட்டு லாபமீட்டும் ஒரு தொழிலாக மருத்துவதுறை மாறியதே இதற்குக் காரணம். நாற்பது ஆண்டுகள் அமெரிக்காவிலும் கேரளாவிலும் பணியாற்றிய குழந்தை மருத்துவர் திரு அலெக்ஸாண்டர் மேத்யூ அவர்களின் அனுபவத்தைச் சுருக்கமாக இங்கே பார்ப்போம். குறைவான மருந்துகள், குறைவான பரிசோதனைகள் எனப் பல குழந்தைகளின் ஆரோக்கியத்தை அவர் உறுதிப்படுத்தினாலும் நிர்வாகத்தின் இலாபத்தில் துண்டு விழுந்த காரணத்தால் பல மருத்துவமனைகளிலிருந்து வெளியேற்றப்படுகிறார் (ஆதாரம்: தி இந்து: ஆகஸ்ட்18, 2013).

2008-ல் திருச்சி ஜோசப் மருத்துவமனை, 2008-ல் மத்திய பிரதேசம் மண்டாலாவில் யோகிராஜ் மருத்துவமனை, 2010-ல் மத்திய பிரதேசம் இந்தூரில், 2011-ல் சத்தீஸ்கரில், 2014-ல் பஞ்சாப் அம்ருத்சரில் என்று ஒவ்வொரு கூட்டு அறுவை சிகிச்சை விபரீதங்களால் முடமானோர், உயிரிழந்தோரின் பட்டியல் நீண்டது. நாளொன்றுக்கு ஒரு மருத்துவர் 30 அறுவை சிகிச்சைகள் மட்டுமே செய்ய வேண்டும் என்கிறது உலக சுகாதார நிறுவனம். ஒரே அறுவை அரங்கில், சரியாய் கிருமி நீக்கம் செய்ய இயலா நிலையிலும் நாளென்றொக்கு பல பத்து அறுவை சிகிச்சைகளை இலக்காக வைத்து அவர்களை நிர்பந்தபடுத்தும் நிர்வாகத்தின் உத்தரவுக்கு அடிபணிந்து மருத்துவர்கள் அறுவை இயந்திரங்களாய் மாறி விடுகின்றனர். இம்மாதிரி சமயங்களில் கிளர்ந்தெழுந்து மக்களின் பக்கம் மருத்துவர்கள் நிற்க வேண்டும். எல்லா விதங்களிலும் மக்களுக்குப் பொறுப்பானவர்கள் மருத்துவர்களே

இவை தவிர கோடி கோடியாய் இலஞ்சம் பெற்று கொண்டு மருத்துவக் கல்லூரிகளை ஆரம்பிக்க உத்தரவளித்த கேதான் தேசாய், மருத்துவக் கல்லூரி அனுமதியில் மட்டும் ஆண்டுக்கு 10,000 கோடி புழங்கும் கருப்பு பணம் (டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி Dec 18, 2014), நம் மக்களிடம் சரியான தகவலைச் சொல்லாமல், புதிய மருந்துகளை அவர்கள் மேல் பிரயோகித்து அவர்களை சோதனைச்சாலை எலிகளாக்கும் பன்னாட்டு மருந்து நிறுவனங்கள், உடலுறுப்பு திருட்டு (சென்னையில் இருக்கும் கிட்னிவாக்கத்தை நினைவில் கொள்க), காப்புரிமை சட்டத்தையே வளைக்கும் திறனுள்ள மருந்து நிறுவனங்கள் என நம்முடைய அமைப்பு முறையில் உள்ள குறைகள் ஏராளம். இவற்றையெல்லாம் விரித்துக் கொண்டே போனால் ஒவ்வொன்றும் ஒரு நூல் எழுதும் அளவுக்கு பெரியவை.

இன்னும் இருக்கிறது ஏராளம்!

வளர்ந்த உலக நாடுகளில் தடை செய்யப்பட்ட பூச்சி கொல்லி மருந்துகளை நம் பயிரில் தெளிப்பதில், புலால் உணவை, அதிக புரதமளிக்கும் மாட்டிறைச்சியை மறுக்கும் பார்ப்பனிய கலாச்சாரத்தில், முட்டை மற்றும் இறைச்சியை மாநிலம் மாநிலமாய் தடை செய்யும் அதன் அரசியலில், பாரம்பரிய உணவுகளை ஒழித்து பீட்சா, உருளைக் கிழங்கு வறுவல் எனத் திணிக்கும் பன்னாட்டு நிறுவனங்களின் லாபத்தில், கோடிக்கணக்கான மக்களுக்கு முறையான கழிப்பிட வசதி இல்லாத சூழலில், பெருநகரங்களின் சுற்றுச்சூழல் சீர்கேட்டில், கோடிக்கணக்கான தொழிலார்களின் பாதுகாப்பற்ற பணிச்சூழலில், வீதிக்கு வீதி திறந்திருக்கும் டாஸ்மாக்கை ஒழிப்பதில் இருக்கிறது நம் மக்களின் உடல் நலம்.

தீர்வுதான் என்ன?

மருத்துவம் என்பது அரசின் கையில் எப்பொழுதும் இருக்க வேண்டியது, அமெரிக்காவைத் தவிர்த்த கனடா உள்ளிட்ட மேற்குலக நாடுகளில் அரசின் கைகளிலேயே மருத்துவம் என்பது இன்றளவும் உள்ளது. அங்குள்ள மக்களும் சிறப்பான மருத்துவ சேவையை இலவசமாகப் பெறுகின்றனர். மாறாக அமெரிக்காவிலோ காப்பீடு உள்ளவர்கள் கூட சரியான மருத்துவ சேவையை பெற முடியாமலும், காப்பீடு இல்லாதவர்கள் நோயற்று இருப்பதற்குப் பிரார்த்தனையிலும் கழிக்கின்றனர். (காண்க மைக்கேல் மூரின்: Sicko.) மேற்கு ஆப்பிரிக்க நாடுகள் மிகப்பெரும் மருத்துவ நெருக்கடியான எபோலாவில் சிக்கித் தவித்து கொண்டிருந்த பொழுது மருத்துவம் சமூக மயமாக்கப்பட்ட கியூபாவில் இருந்துதான் 456 மருத்துவர்கள் எபோலாவால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்குச் சென்றனர். அதே சமயத்தில் அமெரிக்காவிலிருந்து வெறும் 10 மருத்துவர்களும், பிரிட்டனிலிருந்து 30 பேர் மட்டுமே சென்றது குறிப்பிடத்தக்கது. 2005ல் காஷ்மீரில் (பாகிஸ்தான்) நிலநடுக்கம் ஏற்பட்ட பொழுது கூட கியூபா 2400 மருத்துவர்களை அனுப்பி வைத்தது. கியூபாவின் 50,000 மருத்துவர்கள் உலகின் 60 ஏழை நாடுகளில் பணிபுரிகிறார்கள். தன் நாட்டில் மட்டுமல்லாது உலகின் பல்வேறு நாடுகளில் இருக்கும் ஏழைகளின் துயர் துடைக்கும் இவர்களே உண்மையான மருத்துவர்கள், இதுவே சிறப்பான மருத்துவ அமைப்பு முறை.


உடல்நலம் காப்பதிலும் நோயை விரட்டுவதிலும் தனி மனிதனின் பங்கென்பது மிகக்குறைவே. நாளொன்றுக்கு ஒரு வேளை உணவு உண்பவர்கள் கோடிக்கணக்கில் வாழும் நாட்டில் உடற்பயிற்சியும், யோகாவும், தனி மனித சுகாதாரமும் அவர்களின் உடல்நலனில் பெருமளவு மாற்றத்தை ஏற்படுத்தாது. ஊரெங்கும் கொடூரமான தொற்றுநோய் பரவியிருக்கும் பொழுது நம்மை மட்டும் நாம் காத்து கொள்ளலாம் என்பது எவ்வளவு புத்திசாலித்தனமானது! அது போன்றதே இன்று இருக்கும் வாழ்க்கை சூழலில் தனிப்பட்ட ஒருவரின் உடல்நலத்தை மட்டும் காத்து கொள்ளலாம் என்பது. நமது மருத்துவ துறை வளர்ச்சி அடைய, மக்களின் உடல்நலனைக் காக்க, நோய் வராமல் தடுக்க வேண்டுமானால், தனியார் பங்களிப்பை படிப்படியாக மருத்துவ துறையில் இருந்து குறைத்து கொண்டு அரசின் பங்களிப்பை அதிகரிக்கச் செய்ய மருத்துவர்கள், பொதுமக்கள் என அனைவரும் இணைந்து  போராடுவதே ஒரே வழி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது! :)