சில
உடல் உபாதைகளுக்காக எனது தாயுடன் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச்
சென்றிருந்தேன். மருத்துவமனை நல்ல சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருந்தது. பொதுவாய்
தனியார் மருத்துவமனையின் சேவையே சிறப்பாய் இருப்பதாக ஒரு தவறான எண்ணம் நிலவுகிறது.
ஆனால் பல தனியார் மருத்துவமனைகளின் சேவை, அரசு ஆரம்ப சுகாதார மையங்களின் சேவையை விட மோசமாக இருக்கிறது, ஆரம்ப சுகாதார நிலையங்கள் அனைத்தும் நன்கு தூய்மையாக
பராமரிக்கப்படுகின்றன, பரிசோதனை முடிவுகளும் உடனுக்குடன் வருகின்றது, மருத்துவர்களும்
நோயாளியைச் சிறப்பாக கவனிக்கின்றனர். கடந்த ஒரு வருடமாகவே பல்வேறு உடல் உபாதைகளுடன்
காலம் தள்ளுவதால், சில தனியார் மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவமனைகளுடன் ஏற்பட்ட
பரிச்சியத்தின் விளைவாகவே எனது இந்தக் கூற்று வருகிறது. தனியார் மருத்துவமனைகளுடனான
எனது அனுபவத்தை எழுத ஆரம்பித்தால் அதுவே தனிக்கட்டுரையாகிவிடும். அதை பிறிதொரு சமயம்
பார்க்கலாம். அரசு சரியான முறையில் அரசு மருத்துவமனைகளை ஊக்குவித்தால், அவை இன்னும்
சிறப்பான சேவையை வழங்க முடியும்.
இங்கும்
மருத்துவர்கள் கவனமாக எனது பிரச்சனைகளை கேட்டறிந்து, மேலும் சில பரிசோதனைகளுக்காக உள்ளேயே
எழுதி அனுப்பினர். பரிசோதனை கூட வாயிலில் காத்திருந்தோம். 25 வயது மதிக்கத்தக்க இசுலாமிய
பெண்மணி ஒருவர் என் தாயின் அருகில் அமர்ந்தார். சிறு வயதிலேயே திருமணம் ஆகியிருக்கும்
போல, ஆறு வயது மகளையும் உடன் அழைத்து வந்திருந்தார். சிறிது நேரத்திலேயே என் அம்மாவிடம்
சரளமாக பேச ஆரம்பித்தார்.
”தொண்டிக்கும்
அங்கிட்டு இருந்து வர்றேம்மா, பஸ்சுக்கே 150 ரூவாய்க்கும் மேல ஆகுதும்மா… இங்க நல்லா
பாக்குறாங்க, ஒரு மாசத்துக்கு முன்னாடியே தைராய்டு ஆப்ரேசனுக்கு வந்தேன், சரியாய்டுச்சு.
இப்போ காதுல உணர்ச்சியே இல்லை, ஒரு பக்கமா கேட்கவே மாட்டேங்குது, அதான்மா வந்திருக்கேன்”
என சொன்னார்
ஏன்
என்ன ஆச்சு? என அம்மா கேட்க…
”ஒருத்தன்
அடிச்சுட்டான்மா, ஆப்ரேசன் ஆகி மூணுநாள்லயே என் புருசன் வேலைக்கு மெட்ராசுக்கு போயிட்டாரு.
நான் தர்காகுக்கு போயிட்டு வீட்டுக்கு வந்தேன். வந்த உடனே என்னைய அடிச்சுட்டான்மா அவன்”
என்றார்.
ஏம்மா?
நீ என்ன பண்ண? சும்மா இருக்குறப்பயா உன்னை அடிச்சான்?
”அம்மா
முதல்ல நாங்க வாடகை வீட்ல இருந்தோம், அப்புறம் என் வீட்டுகாரரு பாட்டி வழி வீடு ரிப்பேராகி
கிடந்தது. அதை ரிப்பேர் பண்ணி இப்ப அங்க இருக்கோம், நாங்க இருக்குறது குச்சு வீடு,
பக்கத்துல இருக்குற மச்சு வீட்டுகாரனுக்கு நாங்க வந்ததே பிடிக்கல. நாங்க வந்ததுல இருந்து
பிரச்சனை பண்ணிகிட்டே இருக்கான், அவரு இல்லாத நேரம் பாத்து அடிச்சுபுட்டான்மா” என வேதனையுடன்
தெரிவித்தார்.
“அவனை
சும்மாவா விட்ட?”
”நான்
என்னம்மா பண்னட்டும், அடிச்ச உடனே நான் மயங்கி விழுந்துட்டேன்”
”என்னம்மா
இப்படி சொல்ற, இப்படி அடிச்சு ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆயிருச்சுன்னா என்னம்மா பண்ண? என
அம்மா ஆதங்கத்துடன் வினவ…
அட
போங்கம்மா… அடிச்சது மட்டுமில்லாம, ”ஒரு அடிக்கு உயிரா போய்டும்னு அவன் சம்சாரம் கேட்குதும்மா”
திமிருதான்…போலிசுல
ஏதும் சொல்லலையா?
”சொன்னோம்மா,
அவங்க ஒரு நியாயம் சொல்லுவாங்கன்னு பாத்தா…. அலைய விட்டுட்டே இருக்கான்மா, அதான் குடுத்த
கேசயும் வாபஸ் வாங்கிட்டோம்.” போலிசு என்றைக்கு உழைக்கும் வர்க்கத்துக்கு துணையாக இருந்த்திருக்கிறது
என நினைத்து கொண்டேன்.
”ஆண்டவந்தான்
நம்மளை காப்பாத்தனும், ஆனா துஷ்டனை கண்டா தூர விலகுங்குறத, அந்த ஆண்டவந்தான் சரியா
பண்றான். கெட்டவங்கிட்ட போறதே இல்லை, நல்லவங்களைதான் எப்பவும் சோதிக்கிறான்”, என்றார்
அம்மா.
ஆமாம்மா..
“நல்லவங்களுக்கே காலமில்ல, ஆண்டவன் எங்க நல்லவங்கள காப்பத்துறார்” என்றார். பொதுவாய்
இசுலாமியர் என்றாலே மதநம்பிக்கை ஆழமாக இருக்கும் என்பதற்கு மாறாக, ஆச்சரியப்படுத்தும்
விதமாக இருந்தது அவர் பதில்..
”ஏற்கனவே
எங்ககிட்ட இருந்த சொத்தையெல்லாம், அபகரிச்சுட்டாம்மா, இப்ப இருக்குறது இந்த ஒரு வீடுதான்,
இதையும் எப்படியும் புடிங்கிறாலும்னு பாக்குறான்மா”
”வாடகை
வீடுன்னாலும் எங்கயாவது நீ போயிறலாம்மா…சொந்த வீடை விட்டுட்டு எங்க போவீங்க நீங்களும்,
சரி எப்படியாவது சமாதானமா போக பாருங்க” என்றார் அம்மா வருத்ததுடன்
”நான்
எதுவுமே பேசறது இல்லைமா, பேசுனாதான பிரச்சனைனு வாயே தொறக்குறது இல்லம்மா, எப்ப இதெல்லாம்
விடியப்போகுதோ தெரியலை”
அடிச்சது
உங்க சொந்தக்காரனா?
இல்லம்மா,
சொந்தம் இல்லை…
உங்காளுங்களா
அப்ப?
இல்லைம்மா…
எங்காளுங்க இல்லை..
முஸ்லீம்
இல்லையா? அப்ப இந்துவா உங்களை அடிச்சது?
இல்லைம்மா
அவன் முஸ்லீம்தான்…
என்னம்மா
சொல்ற? முஸ்லீம்ங்குற.. ஆனா உங்க ஆளுங்க இல்லைனு சொல்ற?.
”அம்மா
அவனும் முஸ்லீம்தான், நாங்களும் முஸ்லீம்தான். ஆனா அவங்க பணக்கார ஜாதி, நாங்க ஏழை ஜாதிம்மா…
நாங்க இரண்டுபேரும் எப்படி ஒண்ணாக முடியும்” என்றார் சம்மட்டியடியாக..
”ஆமாம்மா
நீ சொல்றது சரிதான்” என அம்மாவும் அந்த உண்மையை ஒத்து கொண்டார்.
முஸ்லீம்களை
பொது அடையாளத்தின் கீழ் திரட்ட முடியாது என்பதே இந்துத்துவவாதிகளின் குற்றச்சாட்டாக
இருக்கிறது. இஸ்லாமியர்கள் மிகுதியும் இஸ்லாமிய இயக்கங்களிலேயே இருப்பதால் அவர்களை
பொது அடையாளத்தின் கீழ் திரட்டுவது கடினமென்றே பலரும் நினைக்கின்றனர். இதையே காரணம்
காட்டி வர்க்கம் என்ற ஒன்று இருப்பதையே சில அறிவுஜீவிகள் ஒத்துக் கொள்வதில்லை. வர்க்கமாய்
மக்கள் ஒன்றிணைய வேண்டுமென நாம் முழங்கும் போதெல்லாம், அடிப்படைவாதிகள் முஸ்லீம்கள்
முஸ்லீம்களுடனேயே இனைய வேண்டும், இந்துக்கள் இந்துக்களுடனேயே இணைய வேண்டும், தமிழர்கள்
தமிழர்களுடனேயே இணைய வேண்டும் என்கின்றனர். மதம், இனம், மொழி, ஜாதி என எத்தனையெத்தனை
விசயங்கள் மக்களை வேறுபடுத்தினாலும், அவர்கள் அனைவரும் ஒன்றிணைவது வர்க்கம் எனும் இந்தப்
புள்ளியில்தான். பாட்டாளி வர்க்கம் இதை இயல்பாகவே உணர்ந்திருக்கிறது, இந்த வர்க்க உணர்வைத்தான்
இசுலாமிய பெண்மணியும் தன் வார்த்தைகளால் உணர்த்துகிறார். ”மக்களிடமிருந்து கற்று கொள்ளுங்கள்,
மக்களுக்குக் கற்றுக்கொடுங்கள்” எனும் மாவோவின் மேற்கோள் உணர்த்தும் பொருளும் இதுதான்.
படம் உதவி: தி இந்து
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது! :)