செவ்வாய், ஜூலை 7

கோவை குண்டுவெடிப்பும் கலவரங்களும்


எந்த ஒரு கலவரங்களையும், குண்டுவெடிப்புகளையும் பற்றி நம் பொதுப்புத்தியில் உறைந்திருப்பது என்ன? கலவரம் என்பது மக்களின் எதிர்பாராத கோபம், குண்டுவெடிப்பு என்பது தீவிரவாதத்தாக்குதல் என்றுதானே! ஆனால் உண்மை இத்தனை எளிதானல்ல, இவை அனைத்தும் ஏதோ திடீரென்று தற்செயலாக நடப்பவை கிடையாது, பல ஆண்டு முன் தயாரிப்புகள் இதற்கு பின்னால் இருக்கிறது. இசுலாமியருக்கு எதிரான எந்தவொரு கலவரத்திற்கு பின்னாலும் இந்து அடிப்படைவாத குழுக்களின் நீண்டநாள் தயாரிப்பு, போலிசு உள்ளிட்ட அரசு எந்திரத்தின் செயலற்ற  தன்மையும், பங்களிப்பும் உள்ளது. குண்டுவெடிப்பு என்பது இந்த சமூக அநீதிக்கு எதிரான, அதே சமயம் இந்து அடிப்படைவாதிகளுக்கு வலுசேர்க்கும் இசுலாமிய அடிப்படைவாதிகளின் முட்டாள்தனமான எதிர்வினை. பல சமயங்களில் கலவரங்கள் எளிதாக மறக்கப்பட்டு, குண்டு வெடிப்புகள்  மட்டும் நம் மனதில் தங்கவைக்கப்படுகின்றன. 1993 பம்பாய் குண்டுவெடிப்புக்கு முன்பு 1992 பம்பாய் கலவரங்களும், 1998 கோவை குண்டுவெடிப்புக்கு முன்பு 1997 நவம்பர் கலவரங்களும் நம்மில் எத்தனை பேருக்கு நினைவில் இருக்கிறது, இக்கலவரங்கள் பெரிதாய் ஊடகங்களில் கவனம் பெறுவதும் இல்லை, நீதியின் முன் அந்த கலவரத்தின் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதுமில்லை. இந்த அடிப்படையில் கோவை குண்டுவெடிப்பு மற்றும் கலவரங்களை பிண்ணனியாக கொண்டு பொன்னுலகம் பதிப்பகம் சார்பில் வந்துள்ள நூல்தான், ”மெளனத்தின் சாட்சியங்கள்”. இந்நூலை பற்றிய எனது பார்வையே இக்கட்டுரை.

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் பன்னிரெண்டு ஆண்டுகள் சிறைவாசத்திற்கு பின்பு விடுதலையாகி வரும் யாசர் எனும் இளைஞனின் நினைவிலிருந்து நாவல் துவங்குகிறது. வீடு கட்டும் கனவுடனும், தனது அக்கா ஆயிஷாவின் திருமணத்திற்கு பணம் சேர்க்கும் தேவையுடனும் இருக்கும் யாசிர் மற்றும் அவனது நண்பன் ஆரிப் ஒருபுறமும், மறுபுறம் செந்தில், கோபால், செழியன், அம்மாசி என அருந்ததியர் காலனியை சேர்ந்தவர்களுமென இரயில் தண்டவாளத்தில் செல்வது போல் நாவல் தடதடவென பயணிக்கிறது. இவை தவிர்த்து கம்யூனிஸ்டு அமைப்பு பெண் தோழர் ஒருவரின் மீது யாசருக்கு வரும் காதலும், வேறுபட்ட கம்யூனிஸ்டு அமைப்புகளை சேர்ந்த தோழர்களின் அரசியல் விவாதங்களும் நாவலில் வருகின்றன. இவை மட்டுமின்றி ஏராளமான சிறு சிறு பாத்திரங்களும் நாவல் முழுவதும் விரவி உள்ளன. இவர்கள் அனைவரையும் இணைக்கும் மைய இழையாக குண்டுவெடிப்பும், கலவரமும் உள்ளது.

இரண்டாம் ஆட்ட திரைப்படத்திற்கு பின் நடக்கும் காவல்துறையின் சோதனை தொடங்கி, பாபர் மசூதி இடிப்பு, கலவரம், குண்டுவெடிப்பென நாவலின் ஆரம்பம் தொட்டு இறுதிவரை யாசர் பயத்துடன் ஓடிக்கொண்டே இருக்கிறான்  (பாபர் மசூதி இடிப்பிற்கு பின் தமிழகத்தில் கலவரம் நடந்த ஒரே இடம் கோவை என்பதை நினைவில் கொள்க). தொடர்ந்து இழைக்கப்படும் சமூக அநீதிக்கு பதிலின்றி போவதால், யாசரின் நண்பன் ஆரிப் உள்ளிட்ட பலரையும் இஸ்லாமிய அடிப்படை வாத அமைப்புகள் தன் பக்கம் இழுக்கின்றன. வன்முறைக்கு வன்முறை தீர்வல்ல என நம்பும் யாசரும்  ஒரு கட்டத்தில் இவ்வமைப்புகளை நோக்கி நகரும் பொழுது தோழர் வைஷ்ணவி புகட்டும் அரசியல் அறிவு அதை தடுக்கிறது. இறுதியில் பொய்யான குற்றச்சாட்டினால் ஏற்படும் சிறைவாசத்தினால் பகுதியளவு மனநிலைப்பிறழ்வுக்கும் உள்ளாகிறான் யாசர். இவை இன்றைய இஸ்லாமிய உலகின் யதார்த்த நிலையை காட்டுகின்றன. களத்தில் பணியாற்றும் முற்போக்கு, இடதுசாரி, ஜனநாயக சக்திகளின் போதாமையால் இந்துத்துவ அடிப்படைவாத அமைப்புகள் அருந்ததியர் காலனியில் வசிப்பவர்களை கலவரத்தில் ஈடுபடும் அடியாட்படையாக மாற்றுகிறது. கலவரத்திற்க்கு பின்பு அடிப்படைவாத அமைப்புகள் அவர்களை  கைவிடவும் சிறை, சித்ரவதை, வழக்குகள் என அவர்கள் அவதியுறுகிறார்கள். ஒரு கட்டத்தில் அடிப்படை வாதிகளை அறிந்து கொண்டு இஸ்லாமியரை கலவரத்தினின்றும் காக்கின்றனர்.

பொதுவாகவே எந்தவொரு நாவலோ அல்லது பிற படைப்புகளோ எளிய மனிதரின் பார்வையிலோ அல்லது அவரின் வாழ்க்கையையோ மையப்படுத்தி எழுதுவது அரிதாகவே உள்ளது. ஆனால் இந்நாவலோ லேத் மிஷின் ஆப்ரேட்டரான யாசிர் என்ற சாதாரன மனிதனைப் பற்றியது. குண்டுவெடிப்புகளிலும் கலவரங்களிலும் அலைக்கழிக்கப்படும் அவனது வாழ்க்கையை பற்றியது. மதவாத தலைவர் அல்லது முற்போக்கு இயக்கத்தின் உறுப்பினர் என கதையை கொண்டு செல்லாமல் சாதாரண நபரின் பார்வையில் கதையை நகர்த்தியிருப்பது சிறப்பு. இஸ்லாமிய இளைஞரின் வழியே நாவல் சென்றாலும் இரண்டு பக்கத்திலும் உள்ள அடைப்படைவாதம் மற்றும் நல்ல மனிதர்கள் பற்றி பக்கச்சார்பின்றி, உழைக்கும் மக்களின் அரசியல் சார்பில் நின்று சொல்லப்பட்டுள்ளது.

எல்லா பிரச்சனைகளுக்கும் பின்னே வர்க்கங்கள் ஒளிந்திருப்பதை கம்யூனிஸ்டுகள் கூறினாலும் பலரும் அதை ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால் இதை இந்நாவல் போகிற போக்கில் உணர்த்துகிறது. ஆரம்ப காலங்களில் இந்து முசுலீம் வியாபார போட்டியினால் வரும் சிறு சண்டைகள் மத நிறுவனங்களின் பின்னால் வியாபாரிகள் போய் இணைவதில் முடிகிறது என அத்தியாயம் 17ல் வரும் உரையாடலில் யாசர் சொல்கிறான். உள்ளூரில் இருக்கும் தொழிலதிபர்களின் வியாபார போட்டியே மத நிறுவனங்களை வளர்க்க துணை போகிறதென்று அத்தியாயம் 33ல் யாசருக்கும் வைஷ்ணவிக்கும் இடையே நடக்கும் உரையாடல் இதை மீண்டும் உணர்த்துகிறது. உரையாடலின் ஊடே தகவலாய் சொல்லப்படும் இக்கருத்தானது சம்பவங்களின் ஊடே வாசகர் உணரும் படி நாவலில் பிண்ணப்பட்டிருந்தால் இன்னும் அழுத்தமாக இருந்திருக்கும். ஃபர்னிச்சர் கடை இந்து முதலாளி, முஸ்லிம் அமைப்பினர் கொடுக்கும் தொந்தரவினால் இந்துத்துவ அமைப்பில் சேர்ந்தாலும் இந்த ஒரு சம்பவம் மட்டும் தனித்த தீவாக நிற்கிறது.

இந்து மதவெறியை இஸ்லாமியர்கள் எதிர்கொள்வதெப்படி என்ற முக்கியமான கேள்விக்கும் நாவல் பல்வேறு இடங்களில் பதில் சொல்கிறது. யாசரின், ஏன் நமது பல்வேறு அடிப்படை கேள்விகளுக்கு பதிலளிக்கும் அத்தியாயம் 33ல் இதற்க்கும் பதில் வருகிறது. இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பில் சேரவிருக்கும் யாசருக்கு பெரும்பாண்மை உழைக்கும் மக்களை உங்கள் பக்கம் சேர்க்காமல். ஒருபோதும் உங்களால் வெற்றி பெற முடியாதென்று கூறி உண்மையை விளங்க வைக்கிறாள் வைஷ்ணவி. யாசரும் மனமாற்றம் பெற்று சரியான திசையில் பயணிப்பதாய் உறுதி கொள்கிறான். போக்குவரத்து காவலர் படுகொலைக்கு பின்னே வரும் கலவரத்தில் எம்.எம் மார்க்கெட்டில் இருக்கும் இஸ்லாமியர் கடைகள் மட்டும் தப்பிக்கின்றன, அங்குள்ள வியாபாரிகள் சங்கத்தில் இந்து, முஸ்லீம் வேறுபாடின்றி அனைவரும் உறுப்பினராக இருந்ததே காரணமென்று அத்தியாயம் 31ல் சொல்லப்படுகிறது. ஒரு பத்தியாக வரும் இதை இன்னும் சற்று விவரித்து எழுதியிருக்கலாம்.  மேலும் இஸ்லாமிய குடியிருப்பை தாக்க வரும் இந்து வெறியரிடமிருந்து, இஸ்லாமியரை முன்பு இந்து அமைப்பின் அடியாட்படையாக இருந்த அருந்ததிய மக்களே காக்கின்றனர். மிகுந்த நெகிழ்ச்சியும் உத்வேகமும் நான் பெற்ற இடம் இது. மொழி, இன, மத வெறி என எதுவாக இருந்தாலும், அதனால் பாதிக்கப்படும் சிறுபான்மையினர், பெரும்பாண்மை உழைக்கும் மக்களை தங்கள் போராட்டத்தில் துணைக்கழைத்து கொள்ளாமல் அவர்களின் போராட்டத்தில் ஒருபோதும் வெற்றி பெற முடியாது. இந்தியாவோ, ஈழமோ அல்லது வேறெந்த நாடுகளோ இதுவே பொதுவிதி. இக்கருத்தை அத்தியாயம் 40ல் மேற்குறிப்பிட்ட சம்பவத்தின் வாயிலாக நாவல் அழுத்தமாக விளக்கியுள்ளது.


சில நாட்களுக்கு முன்பு ISIS பயங்கரவாதிகள் சிரிய விமானி ஒருவரை உயிரோடு கொளுத்தும் காட்சி இணையத்தில் வெளியாகி உலகெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதை விடவும் கொடூரமான விடயங்கள் நம் கோவையிலேயே . நடந்திருப்பதை அத்தியாயம் 24,25,26 ஆகியவை உணர்த்துகிறது. உயிரோடு இளைஞன் கொளுத்தப்படுவதும், ஆரிப் வெறியர்களால் மிதிக்கப்பட்டு நெஞ்செலும்பு உடைந்து கொல்லப்படுவதும் கொடுமையிலும் கொடுமை. குண்டுவெடிப்பின் கோரங்களை அத்தியாயம் 37,38,39 விளக்குகிறது. இந்த வெறியர்களின் பயங்கரவாதம் ஒருபுறமிருக்க இசுலாமியர்களையும், அருந்ததிய மக்களையும் சிறையில் மிக கொடூரமாய் சித்ரவதை செய்கிறது அரச பயங்கரவாதம். சிறையில் முககவசம் அணிந்த காவலர்களால் இவர்கள் கொடூரமாய் தாக்கப்படுவதை படிக்கும் பொழுது நெஞ்சம் பதை பதைக்கிறது, இனம் புரியாத வலி நம் நெஞ்சில் பரவுகிறது. பரபரப்பும், அதிர்ச்சியும் ஏற்படுத்தும் இவ்வத்தியாயங்களை தோழர் சம்சுதீன் தன் எழுத்தில் சிறப்பாய் வடித்துள்ளார்.


கலவரத்தின் பொழுது கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை வீட்டுக்குள் எடுத்து வர அனுமதிக்க மறுக்கும் கோபாலின் தந்தை, மருத்துவமனையில் ஆரிபின் அண்ணனை காப்பாற்றும் இந்து ஊழியர், கலவரத்தின் போது முஸ்லீம்களுக்கு இடமளித்து காக்கும் பழனி, அதே போல் இந்துக்களை காக்கும் இசுலாமியர்கள் என கலவரத்தினூடேயும் மனிதத்தன்மை இன்னும் முழுதாய் அற்றுப்போய்விடவில்லை என்பதை காட்டும் நெகிழ்ச்சியூட்டும் சம்பவங்களும் நாவலில் உள்ளன. தோழர்கள் பங்குபெறும் விவாதங்கள் நாவலில் சிறப்பாக இருந்தாலும் இன்னும் கூட விவாதத்தை கூர்மைப்படுத்தியிருக்கலாம். குறிப்பாக தோழர் மகேந்திரன் இந்துத்துவ அமைப்பின் உறுப்பினராய் இருக்கும் செந்திலை மடக்கும் விதமும், இஸ்லாமிய அடிப்படை வாத அமைப்பில் சேரவிருக்கும் யாசரை தன் வாதத்தினால் வைஷ்ணவி மாற்றும் இடமும் அருமை.

கலவரத்திற்க்கு முன்பும் பின்பும் முற்போக்கு, ஜனநாயக, இடதுசாரிகளின் பாத்திரம் சமூகத்தில் என்னவென்பதை பெரிதாக விளக்கவில்லை. தலைப்புக்கேற்றார் போல் இச்சக்திகள் அனைத்தும் நடப்பவற்றிற்கு மெளன சாட்சியங்களாகிவிட்டனவோவென்று தெரியவில்லை. களத்தில் அன்று பணியாற்றிய தோழர்கள்தான் இதை சொல்ல வேண்டும். வைஷ்ணவியின் மேல் யாசருக்கு வரும் காதல் சற்று சினிமாத்தனமாக இருக்கிறது, அவளைப் பார்க்கும் பொழுதெல்லாம் யாசருக்கு கவிதை வருகிறது. அடிக்கடி வழியும் யாசிரை தோழர் வைஷ்ணவி எதுவும் சொல்லாதது ஏனோ? கவிதைகள் வாசிக்கும் யாசிரை புத்தகங்கள் அல்லது ஆண் தோழரின் வழியே அரசியல் படுத்துவது போல் காட்டியிருக்கலாம். அத்தியாயம் 33ல் ஏற்கனவே நம்பிக்கை இழந்த்து போயிருக்கும் யாசரை நீதிமன்றம், அரசாங்கத்தின் மீது மீண்டும் நம்பிக்கை வைக்க சொல்கிறாள் வைஷ்ணவி, இது மட்டும் அந்த விவாதத்தில் பொருத்தமின்றி நிற்கிறது.

பார்ப்பனிய இந்து மதம் காலந்தோறும் ஒடுக்கப்பட்ட மக்களை உபயோகப்படுத்தி கொள்வது மகேந்திரன், செந்தில் விவாதத்தின் போது லேசான விமர்சனத்தோடு முடிந்து விடுகிறது. இவை பற்றி இன்னும் கடுமையான விமர்சனங்கள் தேவையென்றே நினைக்கிறேன். அதே போன்று அருந்ததியரை இயக்கும் பார்ப்பனிய ஆதிக்க சக்திகள் குறித்து நாவலில் எதுவுமே இல்லை, எய்தவன் இருக்க அம்பான அருந்ததியர் பற்றியே முழுமையாக இருக்கிறது. இவ்வாறு இருப்பது குற்றத்தின் முழுப்பொறுப்பையும் அருந்ததியரின் மீதே செலுத்துவது போன்ற தொனியை உண்டாக்கலாம். இந்த கலவரங்களில் மார்வாரிகளுக்கு பெரிய பங்கு இருப்பதாக ஒரு கருத்து இருப்பதும், இந்த இடத்தில் நினைவுக்கு வருகிறது. மேலும் நீதிமன்றங்கள் குறித்து நாவலில் சுத்தமாக விமர்சனம் எதுவும் இல்லை, கோவைக் கலவரத்தை குண்டுவெடிப்பின் தூண்டுதல் வழக்காக கருத தவறியது, போலிசார் தனது அண்ணனுக்கு எதிராக இலஞ்சம் கொடுத்து பொய்சாட்சி சொல்ல தூண்டியதை, தம்பியே நீதிமன்றத்தில் இலஞ்ச பணத்துடன் அம்பலப்படுத்தியது, சாட்சிகளுக்கு குற்றவாளியை அடையாளம் காட்டிய போலிசின் செய்கையை நீதிபதி அமைதியாக வேடிக்கை பார்த்தது, மதானியின் மீதான குற்றச்சாட்டுக்கு சாட்சியம் இல்லாதபோதும் பிணை வழங்க மறுத்தது என ஏராளமான சம்பவங்கள் இருந்தும் நீதிமன்றத்தை இலேசில் விட்டது ஏமாற்றமளிக்கிறது.

மதவெறி எவ்வளவு குரூரமானது என .அத்தியாயம் 40- தொடங்கும் ஆசிரியர், அத்தியாயம் 48-லோ வைஷ்ணவியின் வழியாக இஸ்லாமிய மதவெறி என சொல்வதை கண்டிக்கிறார். ஏன் இந்த முரண்பாடு என்று தெரியவில்லை. போக்குவரத்து காவலர் படுகொலைக்கு பின்னே வரும் கலவரம் இந்து மதவெறி என்றால், குண்டுவெடிப்பு இசுலாமிய மதவெறிதானே? இதை ஏன் குறிப்பிட்ட பெயரிட்டு கண்டிக்க கூடாது? இதில் அனைத்து இசுலாமியரையும் பொறுப்பாக்குவது எங்கிருந்து வருகிறது? நத்தம் காலனி சம்பவமோ அல்லது தென் மாவட்ட சாதி கலவரங்களோ வன்னிய சாதிவெறி, தேவர் சாதிவெறி என்று பெயரிட்டு அம்பலப்படுத்துவதுதானே சரியானதாக இருக்க முடியும்.

இதே போன்று அத்தியாயம் 35ல் புர்கா அணிவது, தாடி வைப்பது போன்ற கலாச்சார அடையாளங்களை பற்றிய விவாதத்தில் ஃபெரோஜ்ஜின் வாதமே சரி என்று எனக்கு படுகிறது. ஆனால் மகேந்திரனின் வாதத்திற்கு பின் அவர் அமைதியாகி விடுகிறார். உடை உள்ளிட்ட அனைத்தும் அந்தந்த சமூக மக்களின் உரிமை என்றாலும், 90-களுக்கு பின்னரான வஹாபிய இயக்கங்களின் பங்கு என்பது இதில் இல்லையா? எனது சிறுவயதில் புர்கா அணிந்த இசுலாமிய பெண்களை எனது ஊரில் நான் கண்டதில்லை ஆனால் இன்றோ புர்கா அணியாமல் செல்லும் பெண்களை கண்டிக்க, கண்காணிக்க ஊருக்கு ஊர் கலாச்சார காவலர்கள் முளைக்கவில்லையா? இம்மாதிரியான செய்கைகள் இஸ்லாமியரை பொது நீரோட்டத்திலிருந்து பிரிப்பதாகாதா? ஒடுக்கப்பட்ட மக்கள் உள்ளிட்ட அனைவரையும் ஒற்றை இந்து அடையாளத்திலும் பண்பாட்டிலும் திணிக்க இந்துத்துவ அமைப்புகள் முயல்வதை போலவே வஹாபியர்களும் ஒற்றை இசுலாமிய பண்பாட்டு கலாச்சார அடையாளத்தில் இசுலாமியர்களை திணிக்க முயல்வதில்லையா? இதைப்பற்றி சற்று ஆழமான விவாதம் அந்த இடத்தில் அமைந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். தற்காலத்தில் இஸ்லாத்தின் போதாமை குறித்தும், வாஹாபிய இயக்கங்கள் இசுலாமியரின் மீது ஏற்படுத்தும் கலாச்சார, பண்பாட்டு தாக்கங்கள் குறித்தும் தீவிர விமர்சனங்கள் நாவலில் இல்லை.

ஆங்காங்கே விவாதத்தின் போது வரும் இந்த சிறு முரண்பாடுகள் நாவல் செல்லும் வேகத்தில் பெரிதாக தெரிவதில்லை. கோவை குண்டுவெடிப்பு மற்றும் கலவரத்திற்கான காரணங்களையும், முற்போக்கு இயக்கங்களின் தேவையையும் கூறும் இந்நாவலை படித்து முடிக்கும் பொழுது நடந்து முடிந்த சமூக அநீதிக்கும், குண்டுவெடிப்பில் பலியானோருக்கும், சிறையில் பொய்யான குற்றச்சாட்டில் வாடும் யாசர் போன்ற எண்ணற்ற அப்பாவிகளின் தொலைந்து போன வாழ்க்கைக்கும், பதிலேதும் சொல்ல முடியாமல் நமது மனது பாரத்தில் அழுந்துகிறது. நடந்து முடிந்த இக்கொடுமைகளுக்கு நாம் மெளன சாட்சியாகி போனது போலல்லாமல், இனியாவது மக்களை விழிப்படையவைத்து, சாதி, மத, இன வாத சக்திகளுக்கு நம் மக்கள் பலியாவதை தடுக்க வேண்டும் எனும் சிந்தனைகளை நமது மனதில் தூண்டும் அருமையான இந்நூலை நமக்கு வழங்கிய தோழர் சம்சுதீன் ஹீரா அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

படங்கள் : புதிய ஜனநாயகம்- மார்ச் 1998  


2 கருத்துகள்:

  1. மிகவும் ஆழமான அருமையான விமர்சனம் தோழர். மிக்க மகிழ்ச்சி. உங்கள் ஆதரவு எனக்கு மிகுந்த நம்பிக்கையை கொடுக்கிறது. மேலும் நீங்கள் சுட்டிக்காட்டியுள்ள குறைகளை அடுத்த பதிப்பில் பரிசீலனை செய்கிறேன் தோழர். நன்றி..

    பதிலளிநீக்கு
  2. நல்ல விமர்சனம் .இசுலாமிய பெண்கள் புர்கா அணிவதை பற்றிய பெரோஷ் உடனான வைஷ்ணவியின் விவாதத்தில் எனக்கும் சற்று நெருடல் இருந்தது .தீவிர வாஹாபியிசத்தின் வெளிப்பாடே பெண்கள் மீது திணிக்கப்பட்ட புர்க்கா கலாச்சாரம் ஆகும்.

    பதிலளிநீக்கு

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது! :)