திங்கள், ஜூன் 29

மெளனத்தின் சாட்சியங்கள்- நூல் வெளியீட்டு விழா


கடந்த 26/6/2015 வெள்ளியன்று தோழர் சம்சுதீன் ஹீரா அவர்களின் மெளனத்தின் சாட்சியங்கள் நூல் வெளியீட்டு விழா பொன்னுலகம் பதிப்பகம் சார்பில் மதுரை V.R. கிருஷ்ணையர் சமூக அரங்கில் வெளியிடப்பட்டது. 2012ல் துவங்கப்பட்ட இந்த பதிப்பகமானது ஏற்கனவே மிளிர்கல், தறியுடன், எரியும் பனிக்காடு ஆகிய நூல்களை வெளியிட்டு பரவலான கவனத்தை ஈர்த்துள்ளனர். மாலை ஐந்து மணிக்கு தொடங்கவிருந்த நிகழ்வுக்கு வீட்டிலிருந்தே தாமதமாக ஐந்து மணிக்கு கிளம்பி ஆறு மணிக்கு விழா அரங்கை அடைந்தேன், நல்ல வேளையாக விழா இன்னும் தாமதமாக 6:30 க்கு தொடங்கியது. அரங்கு வாயிலிலேயே பல்வேறு இடதுசாரி அமைப்பினர் துண்டு பிரசுரங்கள் வழங்கியது, மாவோவின் நூறு பூக்கள் மலரட்டும் எனும் மேற்கோளை நினைவூட்டியது.தோழர் சம்சுதீன் முகநூல் நட்பு வட்டத்தில் உள்ளவர். கடந்த இரண்டு வருடங்களாய் நான் முகநூலில் அதிக செய்ல்பாட்டில் இல்லாதபொழுதும் , நான் அறிந்தவரையில் பல அதிதீவிர நிலைத்தகவல்கள் இட்டு தன்னை முகநூல் புரட்சியாளராக நிலை நிறுத்தி கொள்ளாதவர். கோவை குண்டுவெடிப்பு மற்றும் கலவரம் தொடர்பாக அவர் புத்தகம் எழுதுகிறார் என நண்பர்கள் வட்டத்தின் வாயிலாய் அறிந்த பொழுது ஆச்சரியமாக இருந்தது. பின்னர் நூல் வெளியீட்டு விழா என அறிந்த பொழுது மிக மகிழ்ச்சியாக இருந்தது. அவருடன் அதிகம் நெருங்கி பழகாதபோதும்

புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான் 

நட்பாங் கிழமை தரும்

எனும் குறளுக்கேற்ப ஒத்த கருத்துள்ள நண்பர் ஒருவரின் வெளியீட்டு விழாவை என்னுடைய விழாவாகவே எண்ணி மகிழ்ந்தேன், இருப்பினும் சில அவசர வேலைகள் காரணமாய் விழா முடிந்ததும் தோழரிடம் வாழ்த்து கூட சொல்லாமல் கிளம்பியது வருத்தமளித்தது. திருப்பூர் குணா, தோழர் மதிவாணன் என பேச விரும்பிய தோழர் எவரிடமும் பேசாமல் வந்ததும் வருத்தமே. சரி இனி விழாவிற்கு செல்வோம், தலைமை இரா. முருகவேள். சிறப்புரை த.மு.எ.க.ச வை சேர்ந்த தோழர் தமிழ்ச்செல்வன். இவர்கள் இருவரை பற்றி அதிகம் சொல்ல வேண்டியதில்லை, நீங்களே அறிந்த்திருப்பீர்கள். மற்ற பேச்சாளர்களின் விபரங்கள் அனைத்தும் அழைப்பிதழில் உள்ளது. கூடுதலாய் PUCL அமைப்பை சேர்ந்த்த முரளியும் வாழ்த்துரை வழங்கினார். இரா. முருகவேளின் சிறப்பான தலைமையுரையில் நிகழ்ச்சியில் முதலாவதாக நூலை தமிழ்ச்செல்வன் வெளியிட பேனா மனோகரன் பெற்றுக்கொண்டார். 


பின்னர் வாழ்த்துரை வழங்கியவர்களில் அனைவரது உரையையும் குறிப்பிட்டால் கட்டுரை மிகவும் நீண்டுவிடும். ஆகவே என்னை கவர்ந்த தோழர் ஃபெரோஸ் மற்றும் எழுத்தாளர் கனகவேல் ஆகிய இருவரின் உரையை மட்டும் பார்ப்போம். தோழர் ஃபெரோஸ் பேசும்பொழுது நாவலுக்கு பின்னுள்ள கடுமையான உழைப்பு தெரிந்தது. நாவல் எழுதி முடிக்கப்பட்ட பிறகு வெளியீட்டிற்க்காக சில பதிப்பகங்களை அணுகிய பொழுது, யாரும் சரியாக பதில் கூட அளிக்காத நிலையில், பொன்னுலகம் பதிப்பகத்தார் மகிழ்ச்சியுடன் வெளியிட முன்வந்ததையும் குறிப்பிட்டார். நடந்த வரலாற்று சம்பவத்தை ஒரு புனைவாக எழுதினாலும் அந்த காலகட்டத்தின் தனிப்பட்ட அனுபவங்கள், கலவரத்தில் பாதிக்கப்பட்ட, சிறையில் இருந்த நபர்களின் பேட்டிகள், கலவரம் குண்டுவெடிப்பு தொடர்பான ஆவணங்கள், என கடுமையான நான்கு வருட உழைப்பு இதன் பின்னே இருக்கிறது, இந்நாவலை முக்கியத்துவம் வாய்ந்ததாக்குவது இதுவே. பாபர் மசூதி இடிப்பிலிருந்து தொடங்கி, காவலர் செல்வராசு படுகொலை, கோவை குண்டுவெடிப்பு அதற்க்கு பின்னாலான கலவரம் வரையிலும் மொத்த நாவலும் ஒரு வரலாற்று தொகுப்பாய் மிளிர்வது அவரது பேச்சிலிருந்து உணர முடிந்தது. இந்த அனைத்து நிகழ்வுகளிலும் தனிப்பட்ட முறையில் ஃபெரோஸ் அவர்களும் பாதிக்கப்படிருந்ததை கேட்கும்பொழுது வருத்தமாக இருந்தது. ஏனா தானோவென்று எதையோ கிறுக்கி நூலாக வெளியிடும் இணைய புதுமுகங்களின் காலத்தில் சம்சுதீன் மற்றும் அவருக்கு துணையாக உதவிய ஃபெரோஸ் ஆகியோரின் உழைப்பு புதிதாய் வருபவர்கள் முன்னுதாரணமாய் கொள்ளத்தக்கது. இந்து, இசுலாம் என இரண்டு பக்கத்திலும் உள்ள அடிப்படைவாத அமைப்புகளில் உள்ள இருநூறு பேர் ஆறு லட்சம் மக்கள் தொகை கொண்ட கோவையை ஸ்தம்பிக்க செய்ததை அவர் கூறும்பொழுது களத்தில் இடதுசாரி, பெரியாரிய முற்போக்கு அமைப்புகளின் போதாமையை அதுகாட்டியது.

தோழர் கனகவேல் பேசும்பொழுது நாவலை இன்னும் சில புள்ளிகளில் விரித்து சென்றிருக்கலாம் என்றார். நாவலை படிக்கும் பொழுதும் எனக்கும் அதுவே தோன்றியது. நாவல் திடுமென முடிந்தது போல் ஓர் உணர்வு எஞ்சியது. இதைப்பற்றி பின்னர் பார்ப்போம். மேலும் இந்நாவல் இலக்கியப்பிரதியா இல்லையா எனும் வாதங்கள் எழும் என்றும் ஆனால் அது தேவையற்றது என்றார். என்னளவில் நாவல் நல்ல இலக்கியபிரதியென்று சொல்லப்பட்டு வெறும் பரிதாப உணர்ச்சியை மட்டும் கிளறுவதற்கு பதிலாக, உண்மையை அப்பட்டமாக கூறி படிப்பவர்களை சரியான அரசியலை நோக்கி தள்ளினால் போதுமானது. இன்றைய சமூக சூழ்நிலைகளில் மேதாவித்தனமான புத்தகங்களால் வரும் அழகுணர்ச்சியை விட, எளிமையான புத்தகங்களினால் வரும் அரசியல் உணர்ச்சியே மேலானது. அடிப்படைவாதிகளின் கையிலுள்ள ஆயுதங்களை விட, பிருந்தாகாரத்தின் நெற்றியிலுள்ள குங்குமம் தன்னை அச்சுறுத்துவதாக கூறி மிக முக்கியமான கேள்வியொன்றை ச.தமிழ்ச்செல்வனை நோக்கி வைத்து தனது உரையை முடித்து கொண்டார். 

மேலும் சில துளிகள்

இரா. முருகவேள் பேசும்பொழுது சமகால வரலாற்று நிகழ்வுகளை குறித்து நம்மிடம் மிகக்குறைவான நூல்களே உள்ளன. அதற்க்கான முயற்சிகளும் அரிதாகவே உள்ளன அந்த வகையில் இம்முயற்சி முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது என்றார். கோவை குண்டுவெடிப்பு கலவரங்களுக்கு பின்னர் PUCL ன் உண்மை கண்டறியும் குழுவில் இருந்த முரளி நாவலப்பற்றி கூறும் பொழுது கலவரங்கள் நடந்த பிறகு எடுக்கப்பட்ட குறிப்புகளையும், அந்த காலத்தையும், சம்பவம் நடந்த இடங்களையும் நாவல் பல சமயங்களில் கண் முன் கொண்டுவந்து நிறுத்தியது என்றார். இது நாவலுக்கு கிடைத்த மிக முக்கியமான அங்கீகாரமாகும். பிருந்தாகாரத் நெற்றியிலிருந்த பொட்டு பற்றிய விமர்சனத்துக்கு பதில் கூறிய ச.தமிழ்ச்செல்வன், நாட்டில் பெரும்பான்மையினர் இந்து மக்களாக இருப்பதால் நாமும் இந்து அடையாளத்தை ஏற்றுகொள்வது தவறல்ல என்றும் பொட்டு மட்டுமல்ல தேவையெனில் நாமமும் போட்டு கொள்வோம் என்று ஒரே போடாக போட்டுவிட்டார். மக்களை அவர்களின் வழியிலேயே சென்று திருத்துவதென்பது இதுதானாம்! மேலும் விடுதலை இராசேந்திரனே இந்து அடையாளத்தை பயன்படுத்துவோம் என சரிநிகர் அமைப்பில் கூறினாரென்று அவரையும் துணைக்கழைத்துக்கொண்டார். மேலும் நாமே நினைத்தாலும் அடையாள அரசியலை தவிர்க்க முடியாதென்றும், என்னதான் சொன்னாலும் சம்சுதீன் பாயாகவே (இஸ்லாமியராக) சமூகத்தில் உணர்ப்படுவாரென்று அவருக்கு மதச்சான்றிதழ் வேறு அளித்துவிட்டு சென்றார். இதற்க்கு பின்னால் பேசிய சம்சுதீனோ, திருப்பூர் குணாவோ இதற்க்கு பதிலளிக்காதது வருத்தமளித்தது. மதம் மக்களுக்கு அபினி எனும் மார்க்ஸின் கூற்றை தமிழ்ச்செல்வன் மறந்தாலும், நாம் மறக்கலாமா? விழாவில் பேசிய அனைவரும், களத்தில் இடதுசாரி முற்போக்கு அமைப்புகளின் போதாமையையும், இன்னும் தீவிரமாக செயல்பட வேண்டிய சமூக நிலமைகளையும், கம்யூனிஸ்டு அமைப்புகளின் ஐக்கிய முண்ணனி கட்ட வேண்டிய தேவையையும் பொதுவாக ஒப்புகொண்டனர்.அரங்கில் அனைவருக்கும் தேநீர் வழங்கி கொண்டிருந்த நபர் மேடையேறிய பின்னரே, அவர்தான் பதிப்பாளர் திருப்பூர் குணா என்று தெரிந்தது. இறுதியாக சம்சூதீன் ஹீரா முன்பு உரையாற்றியோரின் விமர்சனத்துக்கும் கேள்விகளுக்கும் பதிலளித்தார். மறுபதிப்பில் இவற்றையெல்லாம் கவனத்தில் கொள்வதாகவும் கூறினார். விழாவில் முத்தாய்ப்பாக தன் மனைவி மற்றும் மகளின் நேரத்தை சுரண்டிதான் தான் இந்த படைப்பை உருவாக்கியதாகவும் அதற்க்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்ததும் சிறப்பு. இத்துடன் விழா இனிதே நிறைவடைந்தது.

நூல் விமர்சனம் விரைவில்…. 

படங்கள் உதவி: வீரா பாலு

1 கருத்து:

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது! :)