இன்று தமிழ் இந்துவில்
வந்த இரண்டு செய்திகள், இரண்டும் தனித்தனியானவை போன்று இருந்தாலும் இரண்டும் ஒன்றுடன்
ஒன்று தொடர்பு உடையவையே.
இந்த சல்மான் தஸீர்
பாகிஸ்தானின் மதநிந்தனை சட்டத்தை திருத்த வேண்டும் என சொன்னதிற்காகவும், கிறிஸ்துவ
பெண்ணிற்கு ஆதரவாக இருந்ததிற்காகவும் தனது சொந்த மெய்க்காப்பாளராலேயே சுட்டு கொல்லப்பட்டார்.
கண்டிக்கப்பட வேண்டிய இந்த கொலையில், பாகிஸ்தானின் பெரும்பான்மை இஸ்லாமிய மக்கள் கொலையாளியின்
பக்கமே நின்றுள்ளனர், என்பதை சுட்டு கொல்லப்பட்ட ஆளுநர் தஸீர் மகனின் கட்டுரையின் வாயிலாய்
அறிகையில் வருத்தமே மிஞ்சுகிறது. மக்களின் இத்தகைய தவறான போக்கிலிருந்தே கொலையாளிகளும்,
தீவிரவாதிகளும் தங்களுக்கான ஊக்கத்தை பெறுகின்றனர். மும்பை தாக்குதலில் ஈடுபட்ட அஜ்மல்
கசாப்க்கும் அங்கு ஆதரவு உண்டென்பதை நினைவில் கொள்க. நம் நாட்டை போலவே தொலைக்காட்சி
நெறியாளர்களும், மதவாதிகளும் சல்மான் தஸீருக்கு எதிராக பொதுக்கருத்தை மக்களிடம் உருவாக்குவதில்
வெற்றி பெற்றுவிட்டனர் என்பதை கட்டுரையின் சில வரிகளில் இருந்து அறிய முடிகிறது. அர்னாப்
கோஸ்வாமி மற்றும் பாண்டே போன்ற தொலைக்காட்சி நெ(வெ)றியாளர்கள் குறித்து நாம் கவனமாக
இருக்க வேண்டிய காலமிது.
கொலையாளி காத்ரியின்
இறுதிச்சடங்கில் லட்சக்கணக்கில் மக்கள் அஞ்சலி செலுத்துவதற்கு திரண்டுள்ளனர். மதவெறி
என்பது பாகிஸ்தானில் மக்களிடமும் பரவி விட்டது என்பதற்கு சாட்சி இது. மத பயங்கரவாதத்தினால்
அதிகம் பாதிக்கப்படும் பாகிஸ்தானில் மக்கள் மத அடிப்படைவாதத்திற்கு எதிராக கிளர்ந்தெழ
வேண்டும் ஆனால் நிலமையோ இதற்கு நேர்மாறாக இருக்கிறது. பெஷாவரில் 132 பள்ளிகுழந்தைகளின்
பலியானது முதல் நேற்று கிறிஸ்துவர்களின் மீதான லாகூர் பூங்கா தாக்குதல் வரையிலான கோரச்சம்பவங்கள்
நிகழ்வது இம்மாதிரி மதவெறி பரவியுள்ளதின் விளைவே. மதம் என்பது தனிப்பட்ட நபர்களின்
நம்பிக்கையாக இருப்பது வரை பிரச்சனையில்லை, அதுவே செல்வாக்கு பெற்று அரசியல், சமூகம்,
பண்பாடு, பொருளாதாரம் என அனைத்திலும் ஆதிக்கம் செலுத்த முனைவது அந்த சமூகத்தின் பாதுகாப்பிற்கும்
வளர்ச்சிக்கும் ஊறு விளைவித்துவிடும். மதவெறியை எதிர்க்கும் வகையிலான சுகந்திர சிந்தனைகளோ,
இடதுசாரி கருத்துக்களோ பாகிஸ்தானில் செல்வாக்கு செலுத்தாதது அதன் மிகப்பெரிய பலவீனம்.
அதே சமயம் கொலையாளியை தூக்கிலிட்டது, மதவெறிக்கு எதிராய் பாகிஸ்தான் அரசு எடுத்துள்ள
ஒரு உறுதியான நடவடிக்கையே. இந்தியாவில் இது போன்று நடக்குமா என்பது சந்தேகமே!
தாத்ரியின் அக்லாக்
தொடங்கி சமீபத்தில் ஜார்கண்டில் கொல்லப்பட்ட இரு இஸ்லாமியர்கள் வரை இந்தியாவிலும் முன்
எப்போதும் இல்லாத வகையில் இந்து மதவெறி வேகமாக
பரவி வருகிறது. பாகிஸ்தானை போன்றே மதம் இங்கும் சமூகத்தில் செல்வாக்கு பெற்று வருகிறது.
என்ன அங்கு இஸ்லாமென்றால் இங்கு இந்து மதம். இந்தியாவின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும்
இது மிகப்பெரிய அச்சுறுத்தல். இந்து மதவெறிக்கு
மிகப்பெரிய தடைக்கல்லாய் நம் சமூகத்தில் பரவியுள்ள பெரியாரிய, அம்பேத்கரிய, இடதுசாரி
சிந்தனைகளை இந்த நேரத்தில் நாம் நன்றியுடன் நினைவில் கொள்வதோடு மட்டுமில்லாமல் அதை
சமூகத்தில் இன்னும் தீவிரமாக எடுத்துச் செல்ல வேண்டும். இதுவே இந்துத்துவம் வேகமாக
பரவிவரும் இன்றைய காலத்தின் தேவை.
சல்மான் தஸீர்
தொடர்பாக வினவில் முன்பு வந்த கட்டுரை.