வெள்ளி, டிசம்பர் 30

சதாம் உசேனும்- பேரழிவு ஆயுதங்களும்


இன்றிலிருந்து(December-30) சரியாய்  ஐந்து வருடங்களுக்கு முன்னர் தூக்கிலிடப்பட்ட, ஈராக்கின் 24 ஆண்டுகால அதிபரான சதாம் உசேனை பற்றிய  Interrogating Saddam எனும் நேஷனல் ஜியோகிராபிக்கின் ஆவணப்படத்தை பற்றிய ஒரு பார்வையே இந்த பதிவு.சதாம் உசேன் பிடிக்கப்பட்ட பின்னர் பேரழிவுஆயுதங்கள் குறித்தும்,அல்-குவைதாவுடனான தொடர்பு பற்றியும் நம்மிடம் பேசுவாரா? நமக்கு தேவையான தகவல்கள் அவரிடமிருந்து கிடைக்குமா என தொடங்கும் ஆவணப்படமானதுநடந்த விசாரணையின் 166 நாட்களை பற்றி FBI விசாரணை அதிகாரியான ஜார்ஜ் பைரோ வின் பார்வையில் இருந்து சொல்கிறது.

ஈராக்கில் பேரழிவு ஆயுதங்களும்,அல்-குவைதாவுடன் தொடர்பும் இருப்பதால், அமெரிக்கா மற்றும் உலகிற்க்கு மிகப்பெரிய ஆபத்தாக இருக்கும் ஈராக்கின் மேல் படையெடுப்பதாய் அண்டபுளுகர் ஜார்ஜ் புஷ் பேசுவதில் இருந்து ஆவணப்படம் வேகமெடுக்க தொடங்குகிறது. அமெரிக்கா ஈராக்கை முழுவதும் ஆக்கிரமித்தபின்னர் பேரழிவு ஆயுதங்கள் எங்கே? என உலகம் அமெரிக்காவை பார்த்து கேட்க்கத்தொடங்குகிறது. ஈராக் மொத்தமும் தேடியும் கிடைக்காத விசயம் இனி சதாமிடமிருந்து வரும் பதில்களில் இருந்து கிடைக்குமென நம்பும் அமெரிக்க அரசு விசாரணைக்கு ஜார்ஜ் பைரோ எனும் நபரை நியமிக்கிறது. இவர் உள்நாட்டு சண்டையால் லெபானானிலிருந்து பன்னிரண்டு வயதில் குடும்பத்துடன் அமெரிக்காவிற்க்கு புலம்பெயர்ந்தவர். பனிரெண்டாயிரத்திற்க்கும் மேற்ப்பட்ட அதிகாரிகள் நிரம்பிய FBI லிருந்து அரபி மிகச்சரளமாய் பேசத்தெரிந்த நபர்கள் பனிரென்டு அல்லது பதிமூன்று பேர்தான். இதன் விளைவாகவே இவருக்கு இந்த வாய்ப்பு கிடைக்கிறது.

முதலில் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்த சதாம், ஜார்ஜ் பைரோவின் வருகைக்குபின் மெல்ல,மெல்ல பேச ஆரம்பிக்கிறார். பல சமயங்களில் அவர், தான் இன்னும் ஈராக்கின் அதிபர் என்னும் நினைவிலேயே இருக்கிறார், விசாரணையின் போது வரும் சில சிக்கலான கேள்விகளுக்கு தன் உதவியாளர்களை பின்னால் பார்க்கும் பொழுதுதான் அவருக்கு நினைவு வருகிறது தான் ஈராக்கின் அதிபரல்ல,சிறைக்கைதியென்று. ஜார்ஜ் தன் பதவியை குறித்து சதாமிடம் எதுவும் கூறுவதில்லை அதே சமயத்தில் ஜார்ஜ்ஜின் வயது மற்றும் அனுபவத்தை குறித்து சதாமிடமிருந்து எள்ளல் வெளிப்படுகிறது.

விசாரணையின் போது சதாமை எந்த விதத்திலும் தான் சித்தரவதை செய்யவில்லையென்றும், அப்படி செய்வது FBI யின் நடைமுறைக்கு எதிரானது என்றும் குறிப்பிடுகிறார். பார்க்கும் எனக்கோ ஈராக்கின்  அபுகிரைப், குவாந்தனாமோ சிறைச்சாலை சித்ரவதைகள் நினைவுக்குவந்து போகின்றது. பெரும்பாலும் உளவியல் சார்ந்திருக்கும் இந்த விசாரணையை உளவியல் போர் என்றே அமெரிக்க அதிகாரி ஜார்ஜ்பைரோ குறிப்பிடுகிறார். விசாரணை நாட்களின் போது எல்லாவிதமான மனித தொடர்புகளும் சதாம் உசைனுக்கு மறுக்கப்படுகிறது, சதாம் தொடர்பு கொள்ளும் ஒரே நபர் ஜார்ஜ்பைரோ மட்டுமே. தனி அறையில் அடைக்கப்பட்ட வேறெந்த வெளியுலக தொடர்புகளும் இல்லாத சதாமுக்கு முன் இருக்கும் ஒரே வாய்ப்பு ஜார்ஜ் பைரோ மட்டுமே. தினமும் ஐந்திலிருந்து ஏழு மணிநேரம்வரை சதாமிடம், ஜார்ஜ் நேரத்தை செலவிடுகிறார். குர்திஷ் இனப்படுக்கொலை போன்ற சிக்கலான  கேள்விகளுக்கு சதாம் சரியான பதிலேதும் அளிப்பதில்லை. ஆச்சரியப்படத்தக்க வகையில் சதாம் கவிதை எழுதுவதிலும் அந்த கவிதையை விளக்கி பேசுவதிலும் ஆர்வமுடையவராய் இருக்கிறார். எர்னஸ்ட் ஹெமிங்வேயின் – The Old man and the sea எனும் கவிதை தொகுப்பு சதாமுக்கு பிடித்தமானது.




சதாம் கைது செய்யப்பட்ட பின்னும் ஈராக்கில் கலவரங்கள் கட்டுக்குள் வருவதில்லை, குண்டுவெடிப்புகள் தொடர்கதையாகிறது. உலகம் மீண்டும் பேரழிவு ஆயுதங்கள் எங்கேயென கேள்வி கேட்கதொடங்குகிறது, இது விசாரணை அதிகாரியின் மீது கூடுதல் அழுத்தமேற்ப்படுத்துகிறது. இதற்க்கிடையில் சிறையில் சதாம் நடத்தும் உண்ணாவிரத போராட்டம், அமெரிக்க தேர்தல், சதாமுக்கு வரும் உடல்நல குறைவு என பல விசயங்கள் நடக்கிறது.நாட்கள் குறைகிறது,மிக குறைவான நேரமே உள்ளது.ஒருநாள் சதாமின் கவிதையை பற்றி பேசிக்கொண்டிருக்கும் பொழுது, ஒருவழியாக அதிகாரி சதாமின் ஆயுதங்கள் குறித்த ஒரு பேச்சை மேற்கோள் காட்டி பேரழிவு ஆயுதங்கள் குறித்து கேட்டுவிடுகிறார். ஈராக்கின் மிகப்பெரிய எதிரி ஈரானென்றும், ஈரானை பற்றிய அச்சத்தினால் சொல்லப்பட்ட ஒரு பொய்யான கதையே பேரழிவு ஆயுதங்கள் என சதாம் சொல்கிறார். இறுதியாக அனைத்து வழிகளிலும்  இப்போது உறுதிசெய்யப்பட்டுவிட்டது "ஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள் இல்லையென்று". இன்னும் கேட்க மிச்சமொரு கேள்வி இருக்கிறது, அது அல்குவைதாவுடனான தொடர்பு. அதையும் கேட்கிறார், இதற்க்கு பதிலளிக்கும் சதாம் "பின்லாடனை மதவாதி என்கிறார்". மதமும்,அரசியலும் ஒன்றோடொன்று கலக்க கூடாதென்றும், தனித்து இருக்க வேண்டியதென்றும் சொல்கிறார். எனக்கு மிகவும் பிடித்த காட்சி இது. அல்-குவைதாவுடனான தொடர்பும் இல்லையென்றாகிவிட்டது இரண்டு காரணமும் இல்லையே, அப்புறம் எதுக்குதான்யா? ஈராக் மேல படையெடுத்தீங்கன்னு நமக்கு கேட்க தோன்றுகிறது. அதிகாரிகளோ  இதை கறுப்பு,வெள்ளை மனநிலையில் பார்க்க கூடாதென்றும், சதாமிடம் தொழில்நுட்பம் இருப்பதால் வரும்காலத்தில் எப்போது வேண்டுமானாலும் சதாம் ஆயுதம் தயாரிக்ககூடுமென்றும் சொல்கின்றனர். இதனால் ஈராக் மேல் படையெடுத்தது சரி என வாதிடுகிறார்கள். FBIஅதிகாரிகளிடம் வேறு விதமான வார்த்தைகளை நாம் எதிர்பார்க்க முடியாது

166 நாட்டகள் நடந்த நீண்ட விசாரணையின் முடிவில் ஜார்ஜ் விடைபெற்று செல்லும் பொழுது சதாம் மிகவும் நெகிழ்ச்சியாகிவிடுகிறார். சதாம் உணர்வு ரீதியாக விசாரணை அதிகாரியுடன் நெருங்கியதன் விளைவாக சதாமின் கண்களிலிருந்து கண்ணீர் திரள்கிறது. நகைச்சுவையாக சில வார்த்தைகளும் பேசுகிறார். பின்னர் 2006ல் புத்தாண்டு கொண்டாட்டத்தில் இருக்கும் அதிகாரிக்கு தெரியவருகிறது, சதாமை தூக்கிலிட்டுவிட்டனரென்று. அவர் அந்த செய்திக்காக மகிழ்ச்சியடையாமல் புத்தாண்ட்டு கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள செல்வதோடு ஆவணப்படம் முடிவடைகிறது

சதாமின் சர்வாதிகாரம் நிறைந்த காலகட்டங்கள் இந்த படத்தில் இல்லை, அனைத்து அதிகாரங்களையும் இழந்து சிறைக்கைதியாய் இருக்கும் வேளையில்,சதாமின் மனிதத்தன்மை மிகுந்த காட்சிகளே இதில் உண்டு.இந்த ஆவணப்படத்தை பார்த்து முடித்த பொழுது எனக்கு தோன்றிய கேள்வி இதுதான், "ஆயிரக்கணக்கான குர்திஷ் இன மக்களை கொன்றதற்க்காக சதாம் தூக்கிலிடப்பட்டாரென்றால், அதே மாதிரியான குற்றத்தை ஆயிரக்கணக்கான ஈராக்கியர்கள் மீது நிகழ்த்திய ஜார்ஜ் புஷ்ஷின் கழுத்தின் மீது எப்போது சுருக்கு கயிறு விழும்?"


5 கருத்துகள்:

  1. //அல்குவைதாவுடனான தொடர்பு. அதையும் கேட்கிறார், இதற்க்கு பதிலளிக்கும் சதாம் "பின்லாடனை மதவாதி என்கிறார்". மதமும்,அரசியலும் ஒன்றோடொன்று கலக்க கூடாதென்றும், தனித்து இருக்க வேண்டியதென்றும் சொல்கிறார்.// எனக்கும் மிக பிடித்த காட்சி.... :(

    பதிலளிநீக்கு
  2. மிகவும் சரளமான நடை. கட்டுரையின் கருப்பொருளில் இருக்கும் அரசியல் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று! //எர்னஸ்ட் ஹெமிங்வேயின் – The Old man and the sea எனும் கவிதை தொகுப்பு சதாமுக்கு பிடித்தமானது// சதாமின் அன்றைய நிலைமைக்கு பொருத்தமான விஷயம்! //விசாரணையின் போது சதாமை எந்த விதத்திலும் தான் சித்தரவதை செய்யவில்லையென்றும், அப்படி செய்வது FBI யின் நடைமுறைக்கு எதிரானது என்றும் குறிப்பிடுகிறார். பார்க்கும் எனக்கோ ஈராக்கின் அபுகிரைப், குவாந்தனாமோ சிறைச்சாலை சித்ரவதைகள் நினைவுக்குவந்து போகின்றது// இந்த வரிகளின் பாதிப்பு எனக்குள்ளும் எழுந்தது! மேலும் கட்டுரையின் மொத்த ஆளுமையும் இந்த வரிகளில் வெளிப்பட்டுவிடுவதும் நன்று! நிறைய கட்டுரைகள் தொடர்ந்து எழுதுங்கள்!!

    பதிலளிநீக்கு
  3. சதாமின் பல கருத்துகள், முற்போக்கானவை! முஸ்லிம் அடிப்படை வாதிகள் அவருக்கு எதிராக இருந்தது அமெரிகாவுக்கு வசதியாக இருந்தது! சதாம் இன்று இருந்தால், வளைகுடா நாடுகள் மேலும்பலமும் வளமும் பெற்று இருக்கும் என்பது என் கருத்து!

    பதிலளிநீக்கு
  4. நல்லதொரு கட்டுரை...

    தொடர்க உங்களது வலைப்பணி...

    ‘கருகிய ரொட்டி’ கதை உங்களின் மனதை படம் பிடித்து காட்டுகிறது என்பது உண்மையானால் தமிழ் வலையுலகத்திற்கு நல்லதொரு பதிவர் கிடைத்து இருப்பதில் நான் அகமகிழ்கிறேன்.

    உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்திய ”நாற்று” நிருபன் அவர்களுக்கும் நன்றி...

    தமிழார்வன்.

    பதிலளிநீக்கு
  5. உங்கள் பதிவுகள் மின்னஞ்சல் மூலமாக எங்களுக்கு கிடைக்க அந்த இணைப்புப் பட்டையை இணைத்தால் நாங்கள் பயனடைவோம்...

    தமிழார்வன்.

    பதிலளிநீக்கு

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது! :)