சனி, பிப்ரவரி 3

துபாய் மராத்தான் அனுபவங்கள்

எனது நண்பரும், உள்ளத்தனைய உடல் முகநூல் உடற்பயிற்சி குழுவின் உறுப்பினருமான திரு. சிவாச்சலம், சமீபத்தில் துபாயில் நடந்த மராத்தான் போட்டியொன்றில் கலந்து கொண்டார். முகநூலில் பகிர்ந்து கொண்ட அவரது அனுபவத்தை எனது வலைப்பதிவிலும் பகிர்கிறேன். நண்பரின் அனுபவம் கீழே.
______________________________________________________________________

நெருப்பெருச்சல் பஞ்சாயத்திலிருந்து துபாய் வரை.......

மாரத்தான் ஓடும் ஒவ்வொருவரின் கனவும் ஒருமுறையாவது துபாய் மாரத்தானில் ஓட வேண்டும் என்பதாகத் தானிருக்கும், அந்த பேராசை எனக்கும் உண்டு Jan 30ம் தேதி அதிகாலையில் துபாய் விமான நிலையத்தில் இறங்கியவுடன் சமீபத்தில் தான் துபாய் மாரத்தான் திருவிழா நிறைவுபெற்றதாக தெரியவந்ததும் கொஞ்சம் வருத்தமாகத்தான் இருந்தது, ஆனாலும் முயற்சியை தளரவிடாமல் வேறு ஏதாவது மாரத்தான் போட்டிகள் துபாய் நகரையொட்டிய பகுதியில் நடைபெறுகிறதா என தேட ஆரம்பித்தேன், ஏனெனில் பிப் 04வரை என் சகோதரி வீட்டில் தங்கியிருப்பதாக ஏற்பாடு. பிப் 02ம் தேதி Dubai Sports Council நடத்தும் ஒரு குறு மாரத்தான் போட்டி துபாய் நகரில் நடைபெறுவதாக அறிந்து உடனடியாக பதிவு செய்தேன்.

போட்டிக்கு இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே இருந்தன, கடந்த ஒருமாதமாக நான் எந்த ஓட்டப் பயிற்சியும் மேற்கொள்ளவில்லை, மேலும் ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டதால் சரியான சைவ உணவு கிடைக்காமல் காலம் தவறிய பொருந்தாத உணவு முறை, சரியான தூக்கமின்மை, மற்றும் தொடர் பயணங்கள், மற்றும் வியாபார சந்திப்புகள் மற்றும் அதையொட்டிய தயாரிப்பு பணிகள் என்று I lost my body fitness.
ஆனாலும் கிடைத்த இடைவெளியில் அடுத்தநாள் அதிகாலையில் sharja கடற்கரையொட்டிய பிரத்யோகமான ரப்பர் ஓடுதளத்தில் 3கிமீ ஓட்டப்பயிற்சி மேற்கொண்டேன், அதிகாலை குளிரையும் பொருட்படுத்தாமல் சில ஐரோப்பியர்களும் அரேபியர்களும் ஓட்டப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். என்னுடைய ஓட்டம் அன்று சிறப்பாக இல்லை என்றாலும் somehow I felt confident.

போட்டி நடைபெறும் இடம் நகர்புறத்தில் இருந்து சற்று தொலைவில் இருந்ததால் அதிகாலை 4.00 மணிக்கு புறப்பட்டோம். காரை ஸ்டார்ட் செய்தவுடன் outside Temperature 9 Degree என ஒற்றை இலக்க எண் பளிச்சிட்டது.

பறந்துவிரிந்த கோல்ப் மைதானம் அதையொட்டிய ஐந்து நட்சத்திர விடுதி, அதுவே போட்டியின் ஆரம்ப மையம். அந்த அதிகாலை குளிரையும் பொருட்படுத்தாமல் நிறைய ஐரோப்பியர்கள் அரேபியர்கள் மற்றும் சில ஆப்பிரிக்கர்கள், விரல்விட்டு எண்ணும் அளவில் இந்தியர்கள் குழுமியிருந்தனர். குளிர் உண்மையிலேயே கடுமையாக இருந்தது, அனைவரும் அதற்கேற்ற பிரத்யோகமாக நீண்ட காலுறை மற்றும் கையுறை அணிந்திருந்தனர். நான் மிகச்சாதாரணமாக ஸார்ட்ஸ் மற்றும் டி ஸர்ட் மட்டும் அணிந்திருந்தேன்.No shoes and socks
(வெறுங்காலுடன் நான்)
போட்டி துவங்குவதற்கு இன்னும் பத்து நிமிடங்கள் இருந்தது, போட்டியின் முதல்வரிசையில் தயாராக நின்றிருந்தேன். போட்டியை நடத்துபவர்கள் அங்கே குழுமியிருந்தனர், போட்டியை துவக்கிவைக்க ஸேக் ஒருவர் வரவழைக்கப்பட்டிருந்தார். அப்போது அந்தகூட்டத்தில் இருந்த ஒருவர் என்னைச் சுட்டிக்காட்டி ஏதோ சொன்னார்...உடனே அங்கிருந்த இரண்டு பேர் என்னைநோக்கி வந்தனர், அவர் என்னிடம் கேட்டார், எங்கள் உரையாடல் இப்படி இருந்தது,


Organiser:நீங்கள் காலணி எதுவும் அணியவில்லையா?

Me: No, I am Barefoot Runner,

Organiser: Is there any special reason?

Me: Nothing, BUT,I practiced such a way,

Organiser: Do you know its unhealthy and not safe?

Me: I know, but its convenient to me,

Organiser :But we cannot allow you for an unsafe run… I am sorry…

Me: மன்னிக்கவும், நீங்கள் இதைப்பற்றித் உங்கள் விதிமுறைகளில் தெளிவாக எதுவும் குறிப்பிடவில்லை, மேலும் நான் இதற்காக இந்தியாவிலிருந்து வந்துள்ளேன், என்னை நீங்கள் கண்டிப்பாக அனுமதிக்க வேண்டும் என்று மன்றாடினேன்.

Organiser: நீங்கள் இதற்குமுன் வெறும் காலில் ஓடியிருக்கிறீர்களா?

Me: சமீபத்தில் நடந்த சென்னை மாரத்தானில் 21.1கிமீ தூரத்தை 2.15 மணி நேரத்தில் வெறும்காலில் ஓடி நிறைவு செய்துள்ளேன்.

Organiser: without Injury?

Me: yes sir…

போட்டி நடத்துபவர்கள் அவர்களுக்குள்ளாக ஏதே பேசிக்கொண்டார்கள்... நான் அதற்குள் சுற்றி இருப்பவர்களை ஒருமுறை நோட்டமிட்டேன், அனைவரும் வெள்ளை வேளேர் என்ற வெள்ளரிபிஞ்சு தோல் சீவிய நிறத்தில் வாட்டசாட்டமான உயரத்தில் விலைஉயர்ந்த sports suit & shoe அணிந்து ஓட்டத்திற்கு தயாராக இருந்தனர். நான் மட்டும் வெறும்காலுடன் மிகச் சாதாரண உடையில் நின்றிருந்தேன்.

அப்போது அந்த வெள்ளைதோல் ஆசாமி என்னிடம் வந்து தெரிவித்தார், எங்கள் குழு நீண்ட ஆலோசனைக்குப் பிறகு, உங்களை அனுமதிப்பதென்று முடிவு செய்துள்ளோம், உங்கள் ஓட்டம் பாதுகாப்பானதாகவும் காயம் எதுவும் இன்றி அமைவதற்கும் எங்கள் வாழ்த்துக்கள் என்று கைகுலுகினார். I felt happy.


மிகக்கடுமையான குளிர், முதல்முறையாக பல்வேறு கண்டங்களைச் சேர்ந்த ஓட்டக்காரர்களுடன் அந்நிய தேசத்தில் ஓட்டம் ஆரம்பமானது. முதல் இருநூறு மீட்டர் மிகமோசமான சரளைக்கல் தளம். வெறும்கால் ஓட்டத்தை அனுமதிக்க அவர்கள் ஏன் தயங்கினார்கள் என்று எனக்குப் புரிந்தது. அதைக்கடந்தவுடன் மிக அருமையான ஓடுதளம், முதல் மூன்று கிமீ ஓட்டத்தை அனுபவித்து ஓடி முதல் சர்வீஸ் பாய்ண்டை அடைந்து தண்ணீர் பாட்டிலை வாங்கி தொண்டையை நனைத்துக்குகொண்டு மீண்டும் ஓட்டத்தை தொடர்ந்தேன். கடும்குளிரால் இடுப்புக்கு கீழே கால்வரை மரத்துப்போயிருந்தது, உடனடியாக வேகத்தைக் கூட்டமுடியவில்லை, அப்போதே கிட்டத்தட்ட 1000 பேர்களுக்குப் பின்தங்கியிருந்தேன்.

ஆறு கிமீ தூரத்தைக் கடந்தபோது குளிர் உடலுக்கு நன்கு பழக்கப்பட்டிருந்தது, கால்கள் நன்கு உணர்வுபெற்று நன்கு வேகத்தைக் கூட்டிஓட ஆரம்பித்தேன். இன்னும் ஓடவேண்டிய தூரம் 1.5 கிமீ என்ற நிலையில்,கணுக்கால் தசையில் லேசான வலி ஆரம்பமானது, இனி வேகத்தைக்கூட்டினால் கண்டிப்பாக தசைப்பிடிப்பு ஏற்படும், தசைப்பிடிப்பு ஏற்பட்டால் அடுத்து ஒருஅடிகூட எடுத்துவைக்க முடியாது, ஓட்டத்தையும் நிறைவு செய்ய இயலாது என்று மூளை அவசரமாக கட்டளையிட்டது.
உடனடியாக வேகத்தைக் குறைத்து மிகச் சாதாரண வேகத்தில் ஓடி, ஓட்டத்தை நிறைவு செய்தேன். எடுத்திகொண்ட நேரம் 56.50,Minutes. Its my personal Best time. இதற்கு முன் 10கிமீ தூரத்தை ஒருமணி நேரத்திற்கு குறைவாக ஒருமுறை கூட நான் நிறைவு செய்தது இல்லை.

என்னுடைய பிரிவில் (ஆண்கள், வயது 40 - 44) நான் பத்தாவது இடத்தைப் பிடித்து நிறைவு செய்திருந்தேன். பொதுப்பிரிவில் 97 ம் இடம். 


மருத்துவக்குழு உடனடியாக அழைத்துச் சென்று சர்க்கரை, மற்றும் இரத்த அழுத்தை பரிசோதனை செய்தனர், பல்வேறு வகையான Fruit pack, Energy Drink இலவசமாக வழங்கப்பட்டது,
ஒரு அழகிய shoulder bag, Runners water bottle, First Aid kid, Apple, Banana Dairy, அடங்கிய கிப்ட் கிட் ஒன்றை பரிசாக வழங்கினார்கள்.

ருசியான free Break fast .

இந்த போட்டியில் நான் கலந்துகொள்ள மிகவும் உறுதுணையாக இருந்த எங்கள் மாப்பிள்ளை குமார் அவர்களுக்கு இந்த பரிசை காணிக்கையாக்குகிறேன்.

வெள்ளி, ஜனவரி 26

மராத்தான் மோசடிகள்

மராத்தான்”- ஒரு சிறிய கிளர்ச்சியை இந்த பெயரை உச்சரிக்கும் பொழுது உள்ளே உணர முடியும், ஓட்டத்தை உடற்பயிற்சியாகவோ அல்லது பொழுதுபோக்காகவோ நீங்கள் செய்பவராக இருந்தால். இல்லாவிட்டாலுமே கூட 42.1 கி.மீ தொடர்ச்சியாக ஓடுவதென்பது எல்லாரையுமே சற்று துணுக்குறச் செய்யக் கூடிய தொலைவுதான். பைக், கார், பேருந்து, விமானம் என போக்குவரத்து வளர்ந்து விட்ட காலத்தில், ஓட்டமென்பதற்கு பொருளேதும் இல்லாவிட்டாலும், எல்லாராலும் முடிகிற காரியமில்லை மராத்தான். முடியாத காரியங்களை முயற்சித்து பார்க்கும் மனிதர்களின் இயல்போ என்னவோ, ஆண்டு தோறும் மராத்தான் ஓட்டக்காரர்களின் எண்ணிக்கை உலகமெங்கும் உயர்ந்து கொண்டே செல்கிறது, இந்தியாவும் இதில் உலகத்துடன் போட்டியிட்டு எட்டாவது இடத்தில் உள்ளது, கடந்த ஐந்து ஆண்டுகளில் (2009 -2014) மராத்தான் ஓடுபவர்களின் எண்ணிக்கை 154% உயர்ந்துள்ளது. 2012 சென்னை மராத்தானில் ஆறாயிரம் பேர் பங்கேற்க, 2017லிலோ அது 25,000ஆக உயர்ந்துள்ளது, ஆக தமிழர்கள் நாமும் இதில் பின் தங்கவில்லை என்பது மகிழ்ச்சியே!

ஓட்டம் என்னதான் கடினமானதாக இருந்தாலும், ஓடி முடித்த பின்பு அதை நண்பர்களிடத்து பகிர்வதும், “என்ன சார்? எப்படி அவ்வளவு தூரம் ஓடுனீங்க?” என அவர்களின் விழிகள் ஆச்சரியத்தில் விரிவதும், சமூக ஊடகங்களில் வரும் லைக்கும் கமெண்ட்டும் பல காலத்துக்கும் நம்மிடம் தங்கியிருக்கும் இனிமையான நினைவுகள். கடின உழைப்பும், அந்த உழைப்பின் பலனாய் நண்பர்களிடத்து கிடைக்கும் அங்கீகாரமும், பாராட்டுக்களும் யாருக்குத்தான் விருப்பமளிக்காது!! தொழில்முறை தடகள வீரர்களாக இல்லாத சாதாரண மக்களுக்கு, ஒரு பெருவீரனைப் போல் உணரச் செய்யும் இந்த மராத்தான் ஓட்டம், பெரிய மனவெழுச்சிதான். ஆனால் அந்த அனுபவமே பொய்யாக இருந்தால் என்ன செய்வது?? ஆச்சரியமாக உள்ளதா! இதிலும் மோசடியாவென்று? அரசியல் தொடங்கி ஆன்மீகம் வரை அனைத்திலுமே ஏமாற்றுக்காரர்கள் நிறைந்திருக்கும் இந்த காலத்தில் மராத்தான் ஓட்டத்தில் மட்டும் மோசடிகள் விதிவிலக்கா என்ன??

மராத்தான் மோசடி என சொல்லும் பொழுது உலகிற்கே நினைவுக்கு வரும் பெயர் ரோஸி ரூயிஸ். கியூப அமெரிக்கரான இவர். 1980ல் பாரம்பரியமிக்க பாஸ்டன் மராத்தான் எல்லை கோட்டை வெற்றிகரமாக முதல் ஆளாக அடைகிறார். அதுவும் 2 மணி நேரம் 31 நிமிடம் 56  விநாடிகளில். பாஸ்டன் மராத்தான் வரலாற்றிலேயே அந்த வேகத்தில் பெண் ஒருவர் மராத்தானை முடிப்பது அதுவே முதல்முறை, மேலும் உலகச் சாதனையிலும் மூன்றாவது இடத்தை அடைகிறார். வெற்றிக்கான மகுடமும், பதக்கமும், சாதனை புத்தகத்தில் அவர் பெயருக்கான இடமும் அளிக்கப்படுகிறது.  தடகள உலகில் அதுவரை பெரிதும் அறியப்படாத இவர், இதற்கு முன்பு நியூயார்க் மராத்தானில் மட்டுமே கலந்து கொண்டிருந்தார், அங்கு 2 மணிநேரம் 56 நிமிடம் 29 நொடியில் முடித்திருந்தார். ஒரு மராத்தான் இடைவெளியில் 25 நிமிட இடைவெளியை குறைத்து தமிழ் சினிமா பாணியிலான வெற்றியை சாத்தியமாக்கியிருந்தார். 35 கி.மீட்டருக்கும் மேல் முண்ணனியில் இருந்த கனடாவை சேர்ந்த ஜாக்குலின் காரேவ் எல்லை கோட்டை அடையும் போது பெருத்த ஏமாற்றமடைகிறார்ரோஸி முந்திச் செல்வதை அவரோ, அவரைச் சுற்றியிருந்த யாருமோ காணவில்லை. அவர் மட்டுமல்ல எல்லைக்கோட்டுக்கு 2 கி.மீ முன்பிருந்த மக்கள் யாருக்குமே அவரது முகமோ, அவர் கடந்து சென்றதோ நினைவில் இல்லை.

ஓட்டத்தை  முடித்தவுடன் அன்றலர்ந்த மலர்போல் இருந்த முகமும், கலையாத கேசமும், வியர்வையில் நனையாத உடலும், இளைப்பில்லாத மூச்சும், ஆரம்பத்திலிருந்தே அவரது வெற்றியில் பலருக்கும் சந்தேகத்தை கிளப்பி விடுகிறது. பருத்த, தளர்வான அவரது கால்களும் ஓட்டக்காரருக்கு உரியதாக இல்லை. வெற்றிக்கு பிறகு நடந்த செய்தியாளர் பேட்டியின் போதும், சோர்வின்றி இருப்பதற்கான காரணத்தையும் சரியாக அவரால் கூறமுடியவில்லை, அத்துடன் ஓட்டத்தில் வேகத்தை அதிகரிப்பதற்க்கு எடுக்கும் அடிப்படையான பயிற்சிகளான இண்டெர்வெல் (சிறு தொலைவுகளுக்கிடையே அதிவேகத்தில் ஓடுவது), ஸ்பிளிட் ( மொத்த தூரத்தை சிறு பிரிவுகளாக்கி வேகத்தை அதிகரிப்பது) பற்றியும் அவருக்கு ஒன்றும் தெரியவில்லை. ஒரு சில மராத்தான் வீரர்கள் அவரின் தோற்றத்தை வைத்தே, இவர் மராத்தானே ஓடியிருக்க மாட்டாரென்ற முடிவுக்கு வருகிறார்கள். இவையனைத்தும் சந்தேகத்தை கிளப்ப பாஸ்டன் மராத்தான் கமிட்டி விசாரணையில் இறங்குகிறது.
 
படம்: இணையம்
மராத்தான் கண்காணிப்பாளர்கள் அனைவரும் ஓடி வந்த முதல் பிரிவு பெண்களில் ரோஸியை காணாததை உறுதி செய்கிறார்கள். இருப்பினும் அதை மட்டும் ஆதாரமாக கொள்ளாமல் நிகழ்வை படமெடுத்த நாளிதழ், தொலைக்காட்சி நிருபர்கள் மற்றும் அதிகாரப்பூர்வமான புகைப்பட கலைஞர்களின் ஆயிரக்கணக்கான புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் ஆராயப்படுகிறது. கடைசி இரண்டு கி.மீட்டரை தவிர வேறெதிலும் ரோஸி பதிவாகாமல் இருப்பது கண்டறியப்படுகிறது. சில தினங்களுக்கு பின்னர் பார்வையாளர்கள் இருவர் ரோஸி கடைசி இரண்டு கி.மீட்டருக்கும் முன்னதாக, கூட்டத்தில் இருந்து ஓட்டத்தில் இணைந்ததை பார்த்ததாக தெரிவிக்கிறார்கள். பாஸ்டன் விசாரணை இவ்வாறு சென்று கொண்டிருக்கும் பொழுதே இவரது நியூயார்க் மராத்தான் ஓட்டத்தின் மீதும் சந்தேகம் எழுந்து அங்கும் விசாரணை தொடங்குகிறது. நியூயார்க்கில் போட்டி நடந்த தினத்தன்று ரோஸியை புகைப்படக்காரர் ஒருவரும் இன்னும் சிலரும் சுரங்க இரயிலில் பார்த்ததை உறுதி செய்கிறார்கள். அவர்களிடம் தான் காயமடைந்ததாகவும், போட்டியின் இறுதியை காணச் செல்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இவற்றையெல்லாம் வைத்து இவர் முழுமையாக பந்தயத்தை முடித்திருக்க முடியாதென்று கருதி, நியூயார்க் மராத்தான் கமிட்டி இவரை தகுதி நீக்கம் செய்கிறது. சில தினங்களுக்கு பின்னர் பாஸ்டன் மராத்தான் கமிட்டியும் மேற்குறிப்பிட்ட ஆதாரங்களின் அடிப்படையில் அவரை தகுதி நீக்கம் செய்கிறது. கனடாவிலிருந்து ஜாக்குலின் காரேவ்வை அழைத்து பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் பரிசளிக்கப்படுகிறது.

இத்தனைக்கு பிறகும் ரோஸி தனது குற்றத்தை ஒப்பு கொள்ள மறுத்ததோடல்லாமல், பாஸ்டனில் வென்ற அதே நேரத்தில் மீண்டும் மராத்தானை முடித்தால் 15000$ தருவதாக சொல்லப்பட்ட சவாலை துணிச்சலாக ஏற்றுக் கொண்டு, கடைசி நேரத்தில் புத்திசாலித்தனமாக அதை செய்ய மறுத்து விடுகிறார். இதன் பின்னர் ரோஸியின் தனிப்பட்ட வாழ்வு ஒன்றும் அத்தனை சிறப்பானதாக அமையவில்லை. அவர் பணிபுரிந்த நிறுவனத்தில் அறுபதாயிரம் டாலர் கையாடல் செய்த வழக்கிலும், பின்னர் போதைப்பொருள் வழக்கொன்றிலும் சிக்கி கொண்டு தண்டனைக்குள்ளாகிறார்..

இம்மாதிரியான மோசடிகளை ஆரம்பித்த முதல் நபரே ரோஸி அல்ல 1904ன் கோடைக்கால ஒலிம்பிக்கில், ப்ரெட்ரிக் லார்ஸ் என்பவர் 15 கி.மீட்டர் தூரத்தை தனது மேலாளரின் காரில் கடந்தது தெரிய வந்து வாழ்நாள் தடை பெற்றதும், பின்னர் மன்னிப்பு கோரி அது விலக்கிகொள்ளப்பட்டதும் தனிக்கதை.

முதலிடம் பெறுவதற்குத்தான் மோசடி என்றில்லை, இன்றும் எத்தனையோ பேர் முழுமையாக முடிக்காமலேயே பாதி தொலைவில் விலகி கொண்டு குறுக்கு வழியில் இறுதியில் இணைந்து கொள்கின்றனர். குறைந்த பட்சம் அமெரிக்காவில் நடக்கும் ஒவ்வொரு மராத்தானிலும் ஐம்பது பேர்களாவது இம்மாதிரி மோசடி செய்வதாக அங்குள்ள ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். பிப் எனப்படும் மிண்ணணு சிப்களின் உதவியால் இப்பொழுதெல்லாம் இம்மாதிரி மோசடிகளை எளிதில் கண்டறிய முடிகிறது. இந்த பிப்பினால் 2007 பெர்லின் மராத்தானில் மாட்டி கொண்ட பிரபலம், மெக்சிகோவின் முன்னாள் அதிபர் வேட்பாளர் ரூபர்ட்டோ மர்டாஸோ. இந்த பிப்களையும் முறியடிக்கும் விதமாக மனைவியின் பிப்பில் கணவன் ஓடிய நிகழ்வெல்லாம் கூட நடந்துள்ளது. கள்ளன் பெருசா, காப்பான் பெருசா எனும் முதுமொழிக்கேற்ப தொழில்நுட்பம் பெருக, பெருக அதை முறியடிக்கும் மனிதர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.


கடந்த ஒரு வருடமாக ஓட்டப் பயிற்சி செய்து வருபவன் என்ற முறையில், இம்மாதிரி நிகழ்வுகளை படிப்பதே மிகக் கடினமாக உள்ளது. தொலை ஓட்டங்களில் முதலிடம் பெறுவதல்ல, தூரத்தை நிறைவு செய்வதையே வெற்றியாக கருதுகிறேன். ஏனென்றால் இது சோம்பலானவர்களுக்கானதல்ல! எளிமையானதோ, அல்லது அர்ப்பணிப்பின்றி செய்யக்கூடியதுமல்ல. மற்ற குழு விளையாட்டுக்களை போல ஓட்டமென்பது நீங்கள் அடுத்தவருடன் போட்டியிடுவதல்ல, ஓட்டம் என்பது உங்களுடன் நீங்களே விளையாடும் விளையாட்டு. உங்கள் வலிமையின் எல்லையை சோதிக்கும் ஒரு சவால். ஒரு ஓட்டத்திற்கும் இன்னொரு ஓட்டத்திற்கும் பத்து விநாடி முன்னேற்றம் பெற்றால் கூட, அந்த பத்து விநாடிகள் அளிக்கும் மகிழ்ச்சியும், திருப்தியுமே தனி! அந்த உழைப்பின் களிப்பை, மோசடியான முதலிடத்தால் ஒரு போதும் அளிக்க முடியாது. 

திங்கள், மார்ச் 28

மதவெறி - பாகிஸ்தானும், இந்தியாவும்

இன்று தமிழ் இந்துவில் வந்த இரண்டு செய்திகள், இரண்டும் தனித்தனியானவை போன்று இருந்தாலும் இரண்டும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு உடையவையே.



இந்த சல்மான் தஸீர் பாகிஸ்தானின் மதநிந்தனை சட்டத்தை திருத்த வேண்டும் என சொன்னதிற்காகவும், கிறிஸ்துவ பெண்ணிற்கு ஆதரவாக இருந்ததிற்காகவும் தனது சொந்த மெய்க்காப்பாளராலேயே சுட்டு கொல்லப்பட்டார். கண்டிக்கப்பட வேண்டிய இந்த கொலையில், பாகிஸ்தானின் பெரும்பான்மை இஸ்லாமிய மக்கள் கொலையாளியின் பக்கமே நின்றுள்ளனர், என்பதை சுட்டு கொல்லப்பட்ட ஆளுநர் தஸீர் மகனின் கட்டுரையின் வாயிலாய் அறிகையில் வருத்தமே மிஞ்சுகிறது. மக்களின் இத்தகைய தவறான போக்கிலிருந்தே கொலையாளிகளும், தீவிரவாதிகளும் தங்களுக்கான ஊக்கத்தை பெறுகின்றனர். மும்பை தாக்குதலில் ஈடுபட்ட அஜ்மல் கசாப்க்கும் அங்கு ஆதரவு உண்டென்பதை நினைவில் கொள்க. நம் நாட்டை போலவே தொலைக்காட்சி நெறியாளர்களும், மதவாதிகளும் சல்மான் தஸீருக்கு எதிராக பொதுக்கருத்தை மக்களிடம் உருவாக்குவதில் வெற்றி பெற்றுவிட்டனர் என்பதை கட்டுரையின் சில வரிகளில் இருந்து அறிய முடிகிறது. அர்னாப் கோஸ்வாமி மற்றும் பாண்டே போன்ற தொலைக்காட்சி நெ(வெ)றியாளர்கள் குறித்து நாம் கவனமாக இருக்க வேண்டிய காலமிது.

கொலையாளி காத்ரியின் இறுதிச்சடங்கில் லட்சக்கணக்கில் மக்கள் அஞ்சலி செலுத்துவதற்கு திரண்டுள்ளனர். மதவெறி என்பது பாகிஸ்தானில் மக்களிடமும் பரவி விட்டது என்பதற்கு சாட்சி இது. மத பயங்கரவாதத்தினால் அதிகம் பாதிக்கப்படும் பாகிஸ்தானில் மக்கள் மத அடிப்படைவாதத்திற்கு எதிராக கிளர்ந்தெழ வேண்டும் ஆனால் நிலமையோ இதற்கு நேர்மாறாக இருக்கிறது. பெஷாவரில் 132 பள்ளிகுழந்தைகளின் பலியானது முதல் நேற்று கிறிஸ்துவர்களின் மீதான லாகூர் பூங்கா தாக்குதல் வரையிலான கோரச்சம்பவங்கள் நிகழ்வது இம்மாதிரி மதவெறி பரவியுள்ளதின் விளைவே. மதம் என்பது தனிப்பட்ட நபர்களின் நம்பிக்கையாக இருப்பது வரை பிரச்சனையில்லை, அதுவே செல்வாக்கு பெற்று அரசியல், சமூகம், பண்பாடு, பொருளாதாரம் என அனைத்திலும் ஆதிக்கம் செலுத்த முனைவது அந்த சமூகத்தின் பாதுகாப்பிற்கும் வளர்ச்சிக்கும் ஊறு விளைவித்துவிடும். மதவெறியை எதிர்க்கும் வகையிலான சுகந்திர சிந்தனைகளோ, இடதுசாரி கருத்துக்களோ பாகிஸ்தானில் செல்வாக்கு செலுத்தாதது அதன் மிகப்பெரிய பலவீனம். அதே சமயம் கொலையாளியை தூக்கிலிட்டது, மதவெறிக்கு எதிராய் பாகிஸ்தான் அரசு எடுத்துள்ள ஒரு உறுதியான நடவடிக்கையே. இந்தியாவில் இது போன்று நடக்குமா என்பது சந்தேகமே!

தாத்ரியின் அக்லாக் தொடங்கி சமீபத்தில் ஜார்கண்டில் கொல்லப்பட்ட இரு இஸ்லாமியர்கள் வரை இந்தியாவிலும் முன் எப்போதும் இல்லாத வகையில்  இந்து மதவெறி வேகமாக பரவி வருகிறது. பாகிஸ்தானை போன்றே மதம் இங்கும் சமூகத்தில் செல்வாக்கு பெற்று வருகிறது. என்ன அங்கு இஸ்லாமென்றால் இங்கு இந்து மதம். இந்தியாவின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் இது மிகப்பெரிய அச்சுறுத்தல்.  இந்து மதவெறிக்கு மிகப்பெரிய தடைக்கல்லாய் நம் சமூகத்தில் பரவியுள்ள பெரியாரிய, அம்பேத்கரிய, இடதுசாரி சிந்தனைகளை இந்த நேரத்தில் நாம் நன்றியுடன் நினைவில் கொள்வதோடு மட்டுமில்லாமல் அதை சமூகத்தில் இன்னும் தீவிரமாக எடுத்துச் செல்ல வேண்டும். இதுவே இந்துத்துவம் வேகமாக பரவிவரும் இன்றைய காலத்தின் தேவை.


சல்மான் தஸீர் தொடர்பாக வினவில் முன்பு வந்த கட்டுரை.