வெள்ளி, ஜனவரி 26

மராத்தான் மோசடிகள்

மராத்தான்”- ஒரு சிறிய கிளர்ச்சியை இந்த பெயரை உச்சரிக்கும் பொழுது உள்ளே உணர முடியும், ஓட்டத்தை உடற்பயிற்சியாகவோ அல்லது பொழுதுபோக்காகவோ நீங்கள் செய்பவராக இருந்தால். இல்லாவிட்டாலுமே கூட 42.1 கி.மீ தொடர்ச்சியாக ஓடுவதென்பது எல்லாரையுமே சற்று துணுக்குறச் செய்யக் கூடிய தொலைவுதான். பைக், கார், பேருந்து, விமானம் என போக்குவரத்து வளர்ந்து விட்ட காலத்தில், ஓட்டமென்பதற்கு பொருளேதும் இல்லாவிட்டாலும், எல்லாராலும் முடிகிற காரியமில்லை மராத்தான். முடியாத காரியங்களை முயற்சித்து பார்க்கும் மனிதர்களின் இயல்போ என்னவோ, ஆண்டு தோறும் மராத்தான் ஓட்டக்காரர்களின் எண்ணிக்கை உலகமெங்கும் உயர்ந்து கொண்டே செல்கிறது, இந்தியாவும் இதில் உலகத்துடன் போட்டியிட்டு எட்டாவது இடத்தில் உள்ளது, கடந்த ஐந்து ஆண்டுகளில் (2009 -2014) மராத்தான் ஓடுபவர்களின் எண்ணிக்கை 154% உயர்ந்துள்ளது. 2012 சென்னை மராத்தானில் ஆறாயிரம் பேர் பங்கேற்க, 2017லிலோ அது 25,000ஆக உயர்ந்துள்ளது, ஆக தமிழர்கள் நாமும் இதில் பின் தங்கவில்லை என்பது மகிழ்ச்சியே!

ஓட்டம் என்னதான் கடினமானதாக இருந்தாலும், ஓடி முடித்த பின்பு அதை நண்பர்களிடத்து பகிர்வதும், “என்ன சார்? எப்படி அவ்வளவு தூரம் ஓடுனீங்க?” என அவர்களின் விழிகள் ஆச்சரியத்தில் விரிவதும், சமூக ஊடகங்களில் வரும் லைக்கும் கமெண்ட்டும் பல காலத்துக்கும் நம்மிடம் தங்கியிருக்கும் இனிமையான நினைவுகள். கடின உழைப்பும், அந்த உழைப்பின் பலனாய் நண்பர்களிடத்து கிடைக்கும் அங்கீகாரமும், பாராட்டுக்களும் யாருக்குத்தான் விருப்பமளிக்காது!! தொழில்முறை தடகள வீரர்களாக இல்லாத சாதாரண மக்களுக்கு, ஒரு பெருவீரனைப் போல் உணரச் செய்யும் இந்த மராத்தான் ஓட்டம், பெரிய மனவெழுச்சிதான். ஆனால் அந்த அனுபவமே பொய்யாக இருந்தால் என்ன செய்வது?? ஆச்சரியமாக உள்ளதா! இதிலும் மோசடியாவென்று? அரசியல் தொடங்கி ஆன்மீகம் வரை அனைத்திலுமே ஏமாற்றுக்காரர்கள் நிறைந்திருக்கும் இந்த காலத்தில் மராத்தான் ஓட்டத்தில் மட்டும் மோசடிகள் விதிவிலக்கா என்ன??

மராத்தான் மோசடி என சொல்லும் பொழுது உலகிற்கே நினைவுக்கு வரும் பெயர் ரோஸி ரூயிஸ். கியூப அமெரிக்கரான இவர். 1980ல் பாரம்பரியமிக்க பாஸ்டன் மராத்தான் எல்லை கோட்டை வெற்றிகரமாக முதல் ஆளாக அடைகிறார். அதுவும் 2 மணி நேரம் 31 நிமிடம் 56  விநாடிகளில். பாஸ்டன் மராத்தான் வரலாற்றிலேயே அந்த வேகத்தில் பெண் ஒருவர் மராத்தானை முடிப்பது அதுவே முதல்முறை, மேலும் உலகச் சாதனையிலும் மூன்றாவது இடத்தை அடைகிறார். வெற்றிக்கான மகுடமும், பதக்கமும், சாதனை புத்தகத்தில் அவர் பெயருக்கான இடமும் அளிக்கப்படுகிறது.  தடகள உலகில் அதுவரை பெரிதும் அறியப்படாத இவர், இதற்கு முன்பு நியூயார்க் மராத்தானில் மட்டுமே கலந்து கொண்டிருந்தார், அங்கு 2 மணிநேரம் 56 நிமிடம் 29 நொடியில் முடித்திருந்தார். ஒரு மராத்தான் இடைவெளியில் 25 நிமிட இடைவெளியை குறைத்து தமிழ் சினிமா பாணியிலான வெற்றியை சாத்தியமாக்கியிருந்தார். 35 கி.மீட்டருக்கும் மேல் முண்ணனியில் இருந்த கனடாவை சேர்ந்த ஜாக்குலின் காரேவ் எல்லை கோட்டை அடையும் போது பெருத்த ஏமாற்றமடைகிறார்ரோஸி முந்திச் செல்வதை அவரோ, அவரைச் சுற்றியிருந்த யாருமோ காணவில்லை. அவர் மட்டுமல்ல எல்லைக்கோட்டுக்கு 2 கி.மீ முன்பிருந்த மக்கள் யாருக்குமே அவரது முகமோ, அவர் கடந்து சென்றதோ நினைவில் இல்லை.

ஓட்டத்தை  முடித்தவுடன் அன்றலர்ந்த மலர்போல் இருந்த முகமும், கலையாத கேசமும், வியர்வையில் நனையாத உடலும், இளைப்பில்லாத மூச்சும், ஆரம்பத்திலிருந்தே அவரது வெற்றியில் பலருக்கும் சந்தேகத்தை கிளப்பி விடுகிறது. பருத்த, தளர்வான அவரது கால்களும் ஓட்டக்காரருக்கு உரியதாக இல்லை. வெற்றிக்கு பிறகு நடந்த செய்தியாளர் பேட்டியின் போதும், சோர்வின்றி இருப்பதற்கான காரணத்தையும் சரியாக அவரால் கூறமுடியவில்லை, அத்துடன் ஓட்டத்தில் வேகத்தை அதிகரிப்பதற்க்கு எடுக்கும் அடிப்படையான பயிற்சிகளான இண்டெர்வெல் (சிறு தொலைவுகளுக்கிடையே அதிவேகத்தில் ஓடுவது), ஸ்பிளிட் ( மொத்த தூரத்தை சிறு பிரிவுகளாக்கி வேகத்தை அதிகரிப்பது) பற்றியும் அவருக்கு ஒன்றும் தெரியவில்லை. ஒரு சில மராத்தான் வீரர்கள் அவரின் தோற்றத்தை வைத்தே, இவர் மராத்தானே ஓடியிருக்க மாட்டாரென்ற முடிவுக்கு வருகிறார்கள். இவையனைத்தும் சந்தேகத்தை கிளப்ப பாஸ்டன் மராத்தான் கமிட்டி விசாரணையில் இறங்குகிறது.
 
படம்: இணையம்
மராத்தான் கண்காணிப்பாளர்கள் அனைவரும் ஓடி வந்த முதல் பிரிவு பெண்களில் ரோஸியை காணாததை உறுதி செய்கிறார்கள். இருப்பினும் அதை மட்டும் ஆதாரமாக கொள்ளாமல் நிகழ்வை படமெடுத்த நாளிதழ், தொலைக்காட்சி நிருபர்கள் மற்றும் அதிகாரப்பூர்வமான புகைப்பட கலைஞர்களின் ஆயிரக்கணக்கான புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் ஆராயப்படுகிறது. கடைசி இரண்டு கி.மீட்டரை தவிர வேறெதிலும் ரோஸி பதிவாகாமல் இருப்பது கண்டறியப்படுகிறது. சில தினங்களுக்கு பின்னர் பார்வையாளர்கள் இருவர் ரோஸி கடைசி இரண்டு கி.மீட்டருக்கும் முன்னதாக, கூட்டத்தில் இருந்து ஓட்டத்தில் இணைந்ததை பார்த்ததாக தெரிவிக்கிறார்கள். பாஸ்டன் விசாரணை இவ்வாறு சென்று கொண்டிருக்கும் பொழுதே இவரது நியூயார்க் மராத்தான் ஓட்டத்தின் மீதும் சந்தேகம் எழுந்து அங்கும் விசாரணை தொடங்குகிறது. நியூயார்க்கில் போட்டி நடந்த தினத்தன்று ரோஸியை புகைப்படக்காரர் ஒருவரும் இன்னும் சிலரும் சுரங்க இரயிலில் பார்த்ததை உறுதி செய்கிறார்கள். அவர்களிடம் தான் காயமடைந்ததாகவும், போட்டியின் இறுதியை காணச் செல்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இவற்றையெல்லாம் வைத்து இவர் முழுமையாக பந்தயத்தை முடித்திருக்க முடியாதென்று கருதி, நியூயார்க் மராத்தான் கமிட்டி இவரை தகுதி நீக்கம் செய்கிறது. சில தினங்களுக்கு பின்னர் பாஸ்டன் மராத்தான் கமிட்டியும் மேற்குறிப்பிட்ட ஆதாரங்களின் அடிப்படையில் அவரை தகுதி நீக்கம் செய்கிறது. கனடாவிலிருந்து ஜாக்குலின் காரேவ்வை அழைத்து பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் பரிசளிக்கப்படுகிறது.

இத்தனைக்கு பிறகும் ரோஸி தனது குற்றத்தை ஒப்பு கொள்ள மறுத்ததோடல்லாமல், பாஸ்டனில் வென்ற அதே நேரத்தில் மீண்டும் மராத்தானை முடித்தால் 15000$ தருவதாக சொல்லப்பட்ட சவாலை துணிச்சலாக ஏற்றுக் கொண்டு, கடைசி நேரத்தில் புத்திசாலித்தனமாக அதை செய்ய மறுத்து விடுகிறார். இதன் பின்னர் ரோஸியின் தனிப்பட்ட வாழ்வு ஒன்றும் அத்தனை சிறப்பானதாக அமையவில்லை. அவர் பணிபுரிந்த நிறுவனத்தில் அறுபதாயிரம் டாலர் கையாடல் செய்த வழக்கிலும், பின்னர் போதைப்பொருள் வழக்கொன்றிலும் சிக்கி கொண்டு தண்டனைக்குள்ளாகிறார்..

இம்மாதிரியான மோசடிகளை ஆரம்பித்த முதல் நபரே ரோஸி அல்ல 1904ன் கோடைக்கால ஒலிம்பிக்கில், ப்ரெட்ரிக் லார்ஸ் என்பவர் 15 கி.மீட்டர் தூரத்தை தனது மேலாளரின் காரில் கடந்தது தெரிய வந்து வாழ்நாள் தடை பெற்றதும், பின்னர் மன்னிப்பு கோரி அது விலக்கிகொள்ளப்பட்டதும் தனிக்கதை.

முதலிடம் பெறுவதற்குத்தான் மோசடி என்றில்லை, இன்றும் எத்தனையோ பேர் முழுமையாக முடிக்காமலேயே பாதி தொலைவில் விலகி கொண்டு குறுக்கு வழியில் இறுதியில் இணைந்து கொள்கின்றனர். குறைந்த பட்சம் அமெரிக்காவில் நடக்கும் ஒவ்வொரு மராத்தானிலும் ஐம்பது பேர்களாவது இம்மாதிரி மோசடி செய்வதாக அங்குள்ள ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். பிப் எனப்படும் மிண்ணணு சிப்களின் உதவியால் இப்பொழுதெல்லாம் இம்மாதிரி மோசடிகளை எளிதில் கண்டறிய முடிகிறது. இந்த பிப்பினால் 2007 பெர்லின் மராத்தானில் மாட்டி கொண்ட பிரபலம், மெக்சிகோவின் முன்னாள் அதிபர் வேட்பாளர் ரூபர்ட்டோ மர்டாஸோ. இந்த பிப்களையும் முறியடிக்கும் விதமாக மனைவியின் பிப்பில் கணவன் ஓடிய நிகழ்வெல்லாம் கூட நடந்துள்ளது. கள்ளன் பெருசா, காப்பான் பெருசா எனும் முதுமொழிக்கேற்ப தொழில்நுட்பம் பெருக, பெருக அதை முறியடிக்கும் மனிதர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.


கடந்த ஒரு வருடமாக ஓட்டப் பயிற்சி செய்து வருபவன் என்ற முறையில், இம்மாதிரி நிகழ்வுகளை படிப்பதே மிகக் கடினமாக உள்ளது. தொலை ஓட்டங்களில் முதலிடம் பெறுவதல்ல, தூரத்தை நிறைவு செய்வதையே வெற்றியாக கருதுகிறேன். ஏனென்றால் இது சோம்பலானவர்களுக்கானதல்ல! எளிமையானதோ, அல்லது அர்ப்பணிப்பின்றி செய்யக்கூடியதுமல்ல. மற்ற குழு விளையாட்டுக்களை போல ஓட்டமென்பது நீங்கள் அடுத்தவருடன் போட்டியிடுவதல்ல, ஓட்டம் என்பது உங்களுடன் நீங்களே விளையாடும் விளையாட்டு. உங்கள் வலிமையின் எல்லையை சோதிக்கும் ஒரு சவால். ஒரு ஓட்டத்திற்கும் இன்னொரு ஓட்டத்திற்கும் பத்து விநாடி முன்னேற்றம் பெற்றால் கூட, அந்த பத்து விநாடிகள் அளிக்கும் மகிழ்ச்சியும், திருப்தியுமே தனி! அந்த உழைப்பின் களிப்பை, மோசடியான முதலிடத்தால் ஒரு போதும் அளிக்க முடியாது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது! :)