வெள்ளி, ஜனவரி 6

நோய் முதல்நாடும் மருத்துவர்களே...


முதலில் மருத்துவர் சேதுலட்சுமியை படுகொலை செய்தவர்களை கடுமையாக கண்டிக்கிறேன். மிகவும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டிய செயலை செய்த குற்றாவளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு அவர்களுக்கான தண்டனை வழங்கப்படவேண்டும் இதில் எனக்கு எந்த மாற்று கருத்தும் இல்லை.

பொதுவாகவே மருத்துவர்கள் மீதான குற்றச்சாட்டு வைக்கப்படும்பொழுதெல்லாம், அது ஏதோ சில புல்லுறுவிகள் செய்யும் வேலை, ஒரு சிலர் செய்யும் தவறுக்கு அனைவரின் மீதும் குற்றம் சுமத்துவது நியாயமாகுமா? என்பது போன்ற கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன. அப்படி ஒருசிலர் தவறு செய்வது உண்மை என்பதாக நீங்களே ஒத்துகொள்கிறீர்கள், அம்மாதிரி தவறிழைப்பவர்களுக்கான தண்டனை இதுவரை என்ன கிடைத்துள்ளது. போராட்டத்தை கொச்சை படுத்துகிறார்கள் என்று சொல்லும் மருத்துவர்களே, இது என்ன ஒரே  நாளில் விளைந்த வெறுப்பா? இந்த வெறுப்பின் பின்னால் சில மருத்துவர்களின் அலட்ச்சியபோக்கும், பணம் பறிக்கும் எண்ணமும் இல்லையா? எந்த காரணமும் இன்றியா மக்கள் உங்களை வெறுக்கிறார்கள். தவறுக்கான நீதி கிடைக்காத போது, தவறு செய்த நபர் சார்ந்திருக்கும் கூட்டம் மீது மக்களின் வெறுப்பு படிவது இயல்பே! இம்மாதிரியான பிழையான நபர்களுக்கு கிடைக்கும் தண்டனையில்தான் மற்ற மருத்துவர்களின் கவுரவம் அடங்கியுள்ளது. தாங்கள் இழைக்கும் தவறுகளுக்கு சுயவிமரிசனம் ஏற்க்காத புனிதர்களின் கூட்டமாகத்தான் மருத்துவர்கள் எப்போதும் இருக்கிறார்கள். இந்த பொறுப்பற்ற தன்மையின் விளைவாய் வந்ததே, இன்றிருக்கும் மக்களின் வெறுப்பு. மருத்துவர்களின் மதிப்பை ஊடகங்கள் பொறுப்பற்ற வகையில் சிதைப்பதாக சொல்லுகிறீர்களே, ஊடகங்கள் உங்களின் புனித பிம்பத்தை கலைப்பதால்தானே இவ்வளவு கூச்சலும்.

எந்த விசயத்தையும் கருப்பு, வெள்ளை என்ற மனநிலையில் வைத்து நான் பார்க்க விரும்பவில்லை. ஆனால் வெள்ளை என்பதை காட்டிலும், கருப்பு எனும் பக்கங்கள் அதிகமாய் இருப்பதாகவே உணர்கிறேன். இலாப நோக்கற்ற பல மருத்துவர்கள் பணிபுரிந்து கொண்டிருப்பதை அறிவேன். அதே சமயம் மருத்துவத்தை வியாபரமாக்கும் போக்கும் சமீபத்தில் அதிகரித்துள்ளது, இதன் பயனாகவே மக்களுக்கு மருத்துவர்கள் மீதான வெறுப்பின் அளவு  கணிசமான அளவு அதிகரித்துள்ளது. மருத்துவ படிப்பு என்பது சேவைக்கான ஒன்றாக இருந்த காலம் ஒன்று இருந்தது, ஆனால் இப்போதும் யாரும் அம்மாதிரி நினைப்பதில்லை. மருத்துவ படிப்பை வருமானத்துக்கான வழியாகவே பார்க்கின்றனர்  மருத்துவத்தை காட்டிலும் எளிதாக வருமானம் அதிகமாய் பொறியியலில் கிடைப்பதால், மாணவர்கள் மருத்துவத்தை விட்டு பொறியியலுக்கு தாவுகின்றனர். பார்க்க செய்தி. , எல்லாவற்றையும் பணத்தின் அடிப்படையிலேயே சிந்திக்கும் இம்மாதிரியான மனிதர்கள்.  நாளை மருத்துவர்களானால், "நினைப்பதற்க்கே அச்சமாயுள்ளது". அரசும் திட்டமிட்டு அரசு மருத்துவமனைகளை புறக்கணித்து, தனியார் மருத்துவமனைகளை மறைமுகமாக ஊக்குவிக்கிறது. இதன் விளைவாக வருவதே தனியார் மருத்துவமனைகளின் இலாபவெறி. சமீபத்தில் பிரதமர் காரைக்குடியில் திறந்த மருத்துவமனைகள் ஏழைகளுக்கானது என்று சொன்னால் யார்தான் நம்புவார்கள்? இப்போது நடந்த கொலை சம்பவமும் கூட, அரசு மருத்துவமனையில் நடந்ததல்ல, அரசு மருத்துவரின் சொந்த மருத்துவமனையில் நடந்ததே.

இந்த சம்பவத்திலுமே கூட கொலையுண்ட மருத்துவர் anesthetist மட்டுமே, அவர் மகப்பேறு மருத்துவரோ அல்லது அறுவைசிகிச்சையாளரோ அல்ல என்று டெக்கான் குரோனிக்கள் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. இந்த செய்தி உண்மையாயிருக்கும் பட்சத்தில் மருத்துவர் செய்தது கடும் குற்றமாகிறது. அதே சமயத்தில் தமிழ்நாடு முழுவதும் மருத்துவர்கள் நடத்திய போராட்டமும் முட்டாள்த்தனமாகிறது. 

இந்திய மருத்துவ துறையில் கடந்த காலத்தில் நடந்த  சில சம்பவங்களை இப்போது பார்ப்பது பொருத்தமாய் இருக்கும் என நினைக்கிறேன்.

66 பேரின் கண்ணை பறித்த ஜோசப் மருத்துவமனை இன்னும் இயங்கி கொண்டுதானே உள்ளது, ஜோசப் மருத்துவமனையின் தவறான சிகிச்சையால் பார்வையிழந்த நபர்களை கதையை கேட்டால் நம் கண்ணில் இரத்தம் வழியும்,பார்வையிழந்தோரில் பெரும்பாலானோர் கூலிவேலை செய்து பிழைக்கும் முதியோர். அவர்களுக்கு ஒரு இலட்சம் அளித்ததே, அரசு அப்போது தந்த இழப்பீடு. 2008ல் நடந்த இந்த சம்பவத்திற்க்கு மிகக்கடுமையான நீதிமன்ற போராட்டத்திற்க்கு பின்னரே வழக்கு சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றப்பட்டு 2011ல் மருத்துவர்கள் மீதும் அதிகாரிகள் மீதும் வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கு எப்போது முடியும்,தீர்ப்பு எப்போது வரும் என்பது இந்தியநீதித்துறையின் வேகத்தை அறிந்த பாமரர்களும் எளிதில் சொல்லிவிடலாம்.

முன்னேறிய நாடுகளை காட்டிலும் குறைந்த செலவில் மருத்துவம் பார்ப்பதாக சொல்லி வெளிநாட்டினரை கவர்ந்திழுத்து மருத்துவ சுற்றுலா நடத்தப்படும் இதே நாட்டில்தான், முறையற்ற பாதுகாப்பு வசதிகளை கொண்டு தொண்ணூறு உயிர்களை கருக்கிய கொல்கத்தா மருத்துவமனையும், ஒரே வாரத்தில் 11 குழந்தைகள் இறந்துபோன ஆந்திராவின் கர்னூலும், இரண்டே நாட்களில்  12 குழந்தைகள் உயிரிழந்த கொல்கத்தாவின் பி.சி.ராய் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையும் இருக்கிறது.

இந்த சம்பவங்கள் என்றில்லை இது போன்று உதிரியான பல சம்பவங்களை காட்டலாம், உதாரணத்திற்க்கு சில,

11 வகுப்பு படிக்கும் தன் மகனை வைத்து பிரசவம் பார்க்க வைத்த மணப்பாறை மருத்துவ தம்பதியினர் முருகேசன் மற்றும்காந்திமதி,
சிவகங்கையில் தவறான முறையில் இரத்தம் எடுக்கப்பட்டதால் மரணமடைந்த இளைஞர் முத்துராஜா,  உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காமல் தாமதப்படுத்தியதால் உயிரிழந்த ஆலங்குடி மாணவி நிவேதா என ஏராளமான சம்பவங்கள் நம் நாட்டில் நடக்கிறது 

இம்மாதிரி எத்தனையோ சம்பவங்கள் நடைபெற்றாலும் மருத்துவர்கள் யாரும் எப்போதும் தண்டிக்கப்பட்டதாக செய்தி எதுவும் வருவதில்லை. மருத்துவர்களும் மனிதர்கள் தான் என்றால், தவறுக்களுக்கான சட்ட ரீதியான தண்டனை அவர்களுக்கு கிடைக்கிறதா என்பது பெரிய கேள்விக்குறியே. தடுப்பூசி உற்பத்தி செய்யும் பொதுத்துறை நிறுவனங்கள் மூடப்படுவது, அரசு மருத்துவமனைகளில் போதிய வசதியின்றி இருப்பது, மருத்துவர்,செவிலியர்,சுகாதார பணியாளர் மற்றும் உயிர்காக்கும் மருந்துகளின் பற்றாக்குறை, விலையேற்றம் என மருத்துவத்துறை நித்தம் நித்தம் எத்தனை பிரச்சனைகளை சந்திக்கிறது? இவற்றில் எத்தனை பிரச்சனைகளுக்காக மருத்துவர்களாகிய நீங்கள் போராடுகிறீர்கள்? இம்மாதிரி பிரச்சனைகளுக்கு மருத்துவ சங்கங்கள் கண்டணம் ஏதும் தெரிவிக்கிறதா? என தெரியவில்லை. சங்கம் என்பது ஊதிய உயர்வுக்கும், தங்களுக்கு பிரச்சனை என்று ஏதாவது வரும் பொழுது வேலைநிறுத்தம் செய்வதற்க்கும் மட்டும்தான் என்பது எரிச்சலூட்டுகிறது.



அலட்சியத்தையும், மரியாதையின்மையையும் நிறைய மருத்துவர்களிடம் எளிதாக காண முடியும். மருந்து நிறுவனக்களிடமிருந்து ஊக்கதொகை பெற்றுகொண்டு, அந்த மருந்துக்களை பரிந்துரைப்பது. அரசு மருத்தவர் தனியாக மருத்துவமனை நடத்தி அரசு மருத்துவமனையில் சரியாக சிகிச்சை அளிக்காதது, தேவையற்ற பரிசோதனைகளுக்கு பரிந்துரைப்பது என்று பல குற்றச்சாட்டுகள் மருத்துவர்கள் மீது தொடர்ச்சியாக வைக்கப்படுகிறது. மருத்துவ பரிசோதனைகள் செய்ய சொல்லும் மருத்துவர்கள் அந்த மருத்துவ பரிசோதனை ஏன் செய்யப்படுகிறது? அதற்க்கான தேவை என்ன என்பதையும் விளக்கலாமே? காரணமின்றி காரியமில்லை. எத்தனையோ நபர்கள் தினமும் இறந்தாலும், அத்தனை நபர்களும் மருத்துவர்களோடு சண்டைக்கோ அல்லது மருத்துவமனை முற்றுகைக்கோ போவதில்லை.

இந்தியாவில் மருத்துவர்களை கண்காணிக்க சட்டம் ஏதும் உள்ளதா?அப்படி இருந்தால் தவறான சிகிச்சை அளித்த  எத்தனை மருத்துவர்கள் அந்த சட்டத்தின் பயனாய் தண்டிக்கப்பட்டுள்ளார்கள்? மருத்துவர்கள் பணியில் தவறு செய்தால், அவர்களை கடுமையாக தண்டிக்கும் சட்டங்கள் உருவாக்கப்படவேண்டும். மருத்துவர்களும் மனிதர்கள்தான் என்பதை நான் ஒத்துகொள்கிறேன், அதே சமயம்  அந்த மனிதர்கள் தவறு செய்தனரா இல்லையா என்று  சாதாரண மனிதர்களாகிய நாங்கள் எப்படி கண்டறிவது? ஒரு நோயாளிக்கு தனக்கு அளிக்கப்படும் சிகிச்சை சரியானதுதானா என்று அறிந்து கொள்ளும் உரிமை இருக்கிறதா? இல்லையா? முதலில் நோயாளிக்கும்,மருத்துவர்களுக்குமான இடைவெளி களையப்பட வேண்டும். மருத்துவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் சரியாக விசாரிக்கப்படவேண்டும், தவறு செய்யும் மருத்துவர்கள் தண்டிக்கப்படுவார்கள் எனும் நம்பிக்கை மக்களின் மனதில் வரவேண்டும். அடிக்கடி தொலைக்காட்சிகளில் தவறான சிகிச்சை அளித்ததால் மக்கள் மருத்துவமனையை முற்றுகை எனும் செய்தி வருகிறது, அதன்பின் அந்த மருத்துவமனை மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பது மட்டும் வருவதே இல்லை. தவறிழைப்பவர்களின் மீது எடுக்கப்படும் சரியான நடவடிக்கை மூலமே மக்களுக்கு, மருத்துவர்கள் மீதான நம்பிக்கையும்,மதிப்பும் வளர வாய்ப்புள்ளது. தங்கள் மீது சுமத்தப்படும் குற்றங்களுக்கு பதிலளிப்பதை விடுத்து, அந்த குற்றச்சாட்டுகளுக்கு பின்னர் உள்ள உண்மையான தவறை கண்டறிந்து அதை திருத்தி கொள்வதற்க்கான செயலை செய்ய மருத்துவர்கள் முன்வர வேண்டும். வேலை நிறுத்தம் செய்வதில் தங்கள் ஒற்றுமையை காட்டும் மருத்துவர்கள், அதே ஒற்றுமையை தங்கள் கூட்டத்திலிருந்து தவறிழைக்கும் சில மருத்துவர்களை தண்டிப்பதிலும் காட்ட வேண்டும். ஏனெனில் விலைமதிப்பற்ற எங்களின் உயிர் என்றும் உங்கள் கைகளில்தான் உள்ளது.

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் 
வாய்நாடி வாய்ப்பச் செயல்.


முடிவாக மக்களின் வெறுப்பென்னும் நோயோடு போராடாமல், அந்நோய்க்கான காரணத்தை கண்டறிந்து அதை தீர்க்கும் வழியை பாருங்கள்.

24 கருத்துகள்:

  1. உங்கள் கேள்விகளில் இருக்கும் நியாயம் என்னை மிகவும் பாதித்துவிட்டது நண்பரே! குறிப்பாய், ஒருவரை கொலை செய்து விட்டார் என்பதற்காக போராடும் இவர்கள், ஏன் மருத்துவமனைகளில் அடிப்படை வசதி இல்லாததற்கு போராடுவதில்லை என்ற கேள்வி அருமை! இந்த கட்டுரையை என்னால் முடிந்த அளவு நான் பலரிடமும் பகிர்ந்து கொள்வது ஒன்றுதான் உங்கள் நியாயமான கேள்விக்கு நான் அளிக்கக்கூடிய பதிலாக இருக்கும்! மேலும் கட்டுரைக்காக நீங்கள் காட்டிய உதாரனங்களும், அதற்கான உங்கள் உழைப்புக்கும் ஒரு நண்பனாக பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  2. மிகசிறந்த கட்டுரை இது இந்த பதிவு உங்களின் சமுக கண்ணோட்டத்தினை தெளிவு படுத்துகிறது. தொடருங்கள் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. //இந்த சம்பவத்திலுமே கூட கொலையுண்ட மருத்துவர் anesthetist மட்டுமே, அவர் மகப்பேறு மருத்துவரோ அல்லது அறுவைசிகிச்சையாளரோ அல்ல என்று டெக்கான் குரோனிக்கள் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது// அவர் எம்பிபிஎஸ் முடித்தவர். எம்பிபிஎஸ் என்பது மருத்துவம், அறுவை சிகிச்சை, மகப்பேறு சிகிச்சைக்கு வழங்கப்படும் இளங்கலைப்பட்டம். அதை முடித்து பின்னர் அனஸ்தீசியாவில் முதுகலைப் பட்டயம் பெற்றவர். டெக்கான் கிரானிக்கல் வெளியிட்ட செய்தி முற்றிலும் திசைதிருப்பும் நோக்கத்திலானாது.

    தயவு செய்து இதனை உங்கள் கட்டுரையில் செய்தி கொடுத்துள்ள இடத்திலேயே சேர்த்து வெளீயிட வேண்டுகிறேன்.

    முதுகலை மகப்பேறு பட்டம் பெற்றவர் மட்டுமே மகப்பேறு வைத்தியம் பார்க்க வேண்டும், இளங்கலை பெற்றவர் பார்க்க கூடாது என்பது அபத்தம் . குறிப்பிட்ட ஒரு துறையில் சிறப்பு பெற்று விட்டதால் அவர் வாங்கிய எம்பிபிஎஸ் பட்டம் இல்லை என்று ஆகிவிடாது..,

    பதிலளிநீக்கு
  4. //11 வகுப்பு படிக்கும் தன் மகனை வைத்து பிரசவம் பார்க்க வைத்த மணப்பாறை மருத்துவ தம்பதியினர் முருகேசன் மற்றும்காந்திமதி,// இந்தப் பிரச்சனையில் முதலில் நடவடிக்கை எடுத்தது. இந்திய மருத்துவச் சங்கம்தான். அதன் பிறகே செய்தித்தாள்களில் செய்தி வந்தது என்பதை பதிவு செய்ய விரும்புகிறேன்

    பதிலளிநீக்கு
  5. //12ம் தேதி இவருக்கு ரத்தி பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் ரத்தம் எடுக்கப்பட்டுள்ளது. அப்போது காற்று உள்ளே சென்றதால், கையில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. // இதற்கு வாய்ப்பே கிடையாது, அர்த்த மற்ற அபத்தமான குற்றச் சாட்டு

    பதிலளிநீக்கு
  6. //66 பேரின் கண்ணை பறித்த ஜோசப் மருத்துவமனை இன்னும் இயங்கி கொண்டுதானே உள்ளது, ஜோசப் மருத்துவமனையின் தவறான சிகிச்சையால் பார்வையிழந்த நபர்களை கதையை கேட்டால் நம் கண்ணில் இரத்தம் வழியும்,பார்வையிழந்தோரில் பெரும்பாலானோர் கூலிவேலை செய்து பிழைக்கும் முதியோர். அவர்களுக்கு ஒரு இலட்சம் அளித்ததே, //

    அவர்கள் என்ன காரணத்துக்காக அறுவை சிகிச்சை செய்ய வந்தார்கள் என்று யோசித்துப் பாருங்கள். ஏற்கனவே கண்பார்வை இல்லாதவர்கள், அறுவை சிகிச்சை மூலம் பார்வை பெற வந்தவர்கள். அவர்களுக்கு அறுவை சிகிச்சை பலனிக்கவில்லை. ஏன் பலனளிக்கவில்லை என்று ஆராயப் பட்டது. அரசாஙகத்தால் ஒரு தொகை நிவாரணமாக வழங்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  7. //இந்தியாவில் மருத்துவர்களை கண்காணிக்க சட்டம் ஏதும் உள்ளதா?அப்படி இருந்தால் தவறான சிகிச்சை அளித்த எத்தனை மருத்துவர்கள் அந்த சட்டத்தின் பயனாய் தண்டிக்கப்பட்டுள்ளார்கள்? //

    உள்ளது. உதாரணம் மணப்பாறை தம்பதியின்ர்.

    எப்போது வேண்டுமானாலும் நுகர்வோர் நீதி மன்றத்தை அனுகலாம். இப்போது செய்யப் படும் சில பரிசோதனைகள் நுகர்வோர் நீதி மன்றங்களுக்கு பதில் சொல்லும் பொருட்டே

    பதிலளிநீக்கு
  8. //முதலில் நோயாளிக்கும்,மருத்துவர்களுக்குமான இடைவெளி களையப்பட வேண்டும். மருத்துவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் சரியாக விசாரிக்கப்படவேண்டும்,//

    கண்டிப்பாக.., பொது மக்கள் ஒரெ மருத்துவரை அனுகும் வழக்கத்தை கைக்கொள்ள வேண்டும். சிறப்பு மருத்துவத்திற்கு அவர் பரிந்துரைக்கும் மருத்துவரிடம் மட்டுமே செல்ல வேண்டும். அல்லது அவரது அலோசனை கேட்டுச் செல்லலாம். ஓரிரு ஆண்டுகள் பழக்கத்தில் உங்களுக்கு அந்த மருத்துவரின் நம்பகத்தன்மை தெரிந்து விடுவதால் தைரியமாக அவரை நீங்கள் நம்பலாம்

    பதிலளிநீக்கு
  9. //அடிக்கடி தொலைக்காட்சிகளில் தவறான சிகிச்சை அளித்ததால் மக்கள் மருத்துவமனையை முற்றுகை // மக்கள் முற்றுகை என்பது சரியெ, பொதுவாக நோயாளியின் உடல்நிலை சரியில்லை என்னும்போது உறவினர்கள் கூடுவதும் உணர்ச்சி வசப்படுவதும் இயல்பு. அந்த உணர்ச்சிவசப் பட்ட கூட்டத்திற்கு இது தவறான சிகிச்சைத்தான் என்று கொஞ்சம்கூட ஆராயமல் கூறுவதுதான் பலபிரச்சனைகளுக்குக் காரணம். உதாரணம் டெக்கான் கிரானிக்கல் செய்தி.

    பதிலளிநீக்கு
  10. //நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
    வாய்நாடி வாய்ப்பச் செயல்.


    முடிவாக மக்களின் வெறுப்பென்னும் நோயோடு போராடாமல், அந்நோய்க்கான காரணத்தை கண்டறிந்து அதை தீர்க்கும் வழியை பாருங்கள்.//


    நோய் மருத்துவரின்மீது வெறுப்பு
    நோயின் முதல்:- மருத்துவரை திட்டினால் கிடைக்கும் ஹீரோயிசம், மீடியா...,

    அது தணிக்கும் வாய்;-
    எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள்
    மெய்பொருள் காண்ப தறிவு

    என்ற தெய்வப்புலவரின் வாய் சொல்..,

    ஓரிருவர் யோசிக்கிறீர்கள். அவர்களிடம் எல்லாம் முடிந்தவரை நிலமையை விளக்க போராடுகிறோம். இல்லையென்றால் கொலையாளி, இந்தியன் தாத்தாவாக, அந்நியனாக கிளம்பி, மீடியா கிளப்பும் வதந்திகளுக்கு மருத்துவர்கள் பலியாக நேரிடும் என்ற பயம்தான்.

    நீங்கள் சொன்னது போல நோயாளிகளின் உறவினர்களின் முற்றுகை பல நேரங்களில் எல்லை மீறுகிறது. அப்போதெல்லாம் நோயாளியின் நிலை கருதி லேசான எதிர்ப்பு தெரிவித்தோம். இன்று இந்த நிகழ்வினை அப்படியே விட்டுவிட்டால் பலரும் தங்களை இந்தியன் தாத்தாவாக நினைத்துக் கொண்டு கிளம்பி விடுவார்கள் என்ற பயத்தில்தான் போராடுகிறோம்

    பதிலளிநீக்கு
  11. //இவற்றில் எத்தனை பிரச்சனைகளுக்காக மருத்துவர்களாகிய நீங்கள் போராடுகிறீர்கள்? இம்மாதிரி பிரச்சனைகளுக்கு மருத்துவ சங்கங்கள் கண்டணம் ஏதும் தெரிவிக்கிறதா? // மருத்துவச் சங்களின் இணையத் தளங்களைப் பாருங்கள். முடிந்தால் இது போன்ற போராட்டங்களில் கை கொடுங்கள். ஆதரவாக இணையங்களில் எழுதுங்கள். அப்போதும் கூட முக நூல, கீச்சு, இணைய தள எழுத்தாளர்கள் மருத்துவர்கள் போராட்டங்களால் அப்பாவிகள் பாதிக்கப்படுகீறார்கள் என்று கடுமையாகத்தான் தீட்டிவார்கள்

    பதிலளிநீக்கு
  12. //இப்போது நடந்த கொலை சம்பவமும் கூட, அரசு மருத்துவமனையில் நடந்ததல்ல, அரசு மருத்துவரின் சொந்த மருத்துவமனையில் நடந்ததே.// நாளை எங்கு வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால் இவ்வளவு பதட்டம்

    பதிலளிநீக்கு
  13. //இதன் விளைவாக வருவதே தனியார் மருத்துவமனைகளின் இலாபவெறி. சமீபத்தில் பிரதமர் காரைக்குடியில் திறந்த மருத்துவமனைகள் ஏழைகளுக்கானது என்று சொன்னால் யார்தான் நம்புவார்கள்?// அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு வருமான வரி விலக்கும் கூட,,,,

    நிறைய எழுதுங்களேன்..

    பதிலளிநீக்கு
  14. கணேசன்,என்ன செய்ய போகிறோம், சுரேஷ் தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்விற்க்கும் நன்றி. நண்பர் சுரேஷ் எம்.பி.பி.எஸ் எந்தெந்த துறைகளில் மருத்துவம் பார்க்கலாம் என்பது குறித்து நான் தேடிக்கொண்டிருக்கிறேன்.நீங்களும் இணைப்புகள் ஏதும் இருந்தால் கொடுங்கள், தவறான தகவலாய் இருக்கும் பட்சத்தில் மாற்றி விடுகிறேன். சிவகங்கையில் நடந்த சம்பவம் உண்மைதான், அப்போது நாளிதழ்களிலும் இது வந்துள்ளது. ஜோசப் மருத்துவமனை விவகாரத்தில் மருத்துவர்கள் மீது எந்த தவறுமே இல்லையா? முன்னேறிய மேற்குலக நாடுகளில் இதுபோன்று கூட்டாய் பல பேருக்கு கண்பார்வை போயிருந்தால் மருத்துவமனை மற்றும் மருத்துவர்களின் கதி என்னவாயிருக்கும்? உங்கள் வாதத்தை படிக்கையில் மருத்துவர்கள் எந்த தவறும் இழைக்காதது போலவும், 100% மக்களின் தவறான புரிதல் என்பது போலவும் உள்ளது. இது சரியா,தவறா என்பதை படிப்பவர்களின் சிந்தனைக்கே விட்டுவிடுவோம்.

    பதிலளிநீக்கு
  15. //ஜோசப் மருத்துவமனை விவகாரத்தில் மருத்துவர்கள் மீது எந்த தவறுமே இல்லையா? //

    தவறு இருக்கிறது. அது கண்ணைப் பறித்தது அல்ல., கண்பார்வை திருப்பி அளிக்கத் தவறியது. அவர்களுக்கு ஏற்கனவே கண்பார்வை கிடையாது. அதற்குத்தான் அறுவை சிகிச்சை செய்ய வந்தவர்கள்.

    கண்ணைப் பறித்தவர்கள் என்ற சொல்லாடலை நான் எதிர்க்கிறேன். அவர்கள் அறுவை சிகிச்சை செய்யாமல் இருந்திருந்தாலும் இப்போது இருப்பது போலத்தான் இருப்பார்கள்.

    தவறு நிகழாமல் அறுவை சிகிச்சை முடிந்திருந்தால் பார்வை கிட்டி இருக்கக்கூடும்.

    பதிலளிநீக்கு
  16. http://www.vinavu.com/2010/03/13/peramabalur-joseph-eye-hospital-scam/ இணைப்பிலுள்ள செய்தியை படியுங்கள்.

    பதிலளிநீக்கு
  17. http://www.mciindia.org/ இது டாக்டர்கள் சங்கமல்ல, அது தன்னாட்சி பெற்ற ஒரு அமைப்பு.மேற்கொண்டு அதன் பணி மற்றும் மருத்துவர்களின் செயல்பாடுகள் பற்றி உங்களுக்கு அங்கு பதில் கிடைக்கும்

    பதிலளிநீக்கு
  18. நீங்கள் வினவில் வரும் அனைத்து செய்திகளையும் படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். நான் அந்த செய்தியைப் படித்தேன். தவறு நடந்ததை நான் ஒப்புக் கொள்கிறேன். ஆனால் நடந்த தவறு நீங்கள் சொல்வது போல் கண்ணைப் பறித்தது அல்ல என்று சொல்கிறேன்.

    பதிலளிநீக்கு
  19. நண்பர் சுரேஷ், இந்த சுட்டியில் http://targetstudy.com/professions/gynecologist.html மகப்பேறு மருத்துவராக எம்.பி.பி.எஸ் படித்து முடித்த பின் இரண்டு வருடம் தனியாக எம்.டி படிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது. உங்கள் பாடத்திட்டத்தில் மகப்பேறு மருத்துவம் இருந்தாலும், நிபுணத்துவம் பெற மேற்கொண்டு படிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது. சரியா தவறா என விளக்குங்கள்.

    பதிலளிநீக்கு
  20. //மகப்பேறு மருத்துவராக எம்.பி.பி.எஸ் படித்து முடித்த பின் இரண்டு வருடம் தனியாக எம்.டி படிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது // அனைத்து வகை எம்.டி. படிப்புகளும் மூன்றுகள்தான். இந்தியாவில் எங்கும் இரண்டு ஆண்டு எம்டி படிப்புகிடையாது. இது ஒன்றே போதும் . அந்தக் கட்டுரை வெகு மேம்போக்காக எழுதப் பட்டது என்பதற்கான ஆதாரம். எம்.டி(ஓபிஜி), டி.ஜி.ஓ. ஆகியன முறையே முதுகலை, பட்ட, பட்டய படிப்புகள். இவை இளங்கலை படித்தபின்பே படிக்க முடியும்.

    எப்படி எம்.ஈ., எம்.ஏ, எம் எஸ்ஸி படிப்புகள் இருப்பதால் பி.ஈ., பிஏ, பி.எஸ்ஸி ஆகிய படிப்புகள் தங்கள் வலிமையை இழக்காதோ அப்படியெ மருத்துவ இளங்கலைப் பட்டமும்.
    ========================================

    http://www.mciindia.org/ இது அஃபிஷியல் வெப்சைட் . இதில் நீங்கள் தெளிவாக தெரிந்து கொள்ளலாம். இதிலுள்ள விவரங்களை நீங்கள் நீதிமன்றத்தில்கூட உபயோகப் படுத்திக் கொள்ளலாம்.

    பதிலளிநீக்கு
  21. சுரேஷ் - நண்பரே! நீங்கள் சொன்ன கருத்துக்களில் தவறு இருப்பதாய் நான் சொல்லவரவில்லை! ஆனால், இந்த கட்டுரையின் நோக்கம் யார் மீதும் குற்றச்சாற்று செலுத்தவதற்கு இல்லை. அதற்கான ஆதாரம் இந்த கட்டுரை முழுவதும் நிரம்பியுள்ளது. இந்த கட்டுரையின் நோக்கம், ஒரு மருத்துவரை கொலை செய்யும் அளவிற்கு ஒருவருக்கு கோபம் வருகிறது என்றால், அது அந்த நொடியில் விழுந்த விதையாக இருத்தல் முடியாது. அதன் பின்னால் பொதிந்திருக்கும் நீண்ட கால வெறுப்பையும், தொடர்ச்சியான முற்றுகை போன்ற செய்திகளில் இருக்கும் ஆழத்தை நீங்கள் உணர வேண்டும். அந்த தார்மீக கோபம் மற்றும் நியாயத்தின் வெளிப்பாடே இந்த கட்டுரை என்பது என் கருத்து.

    பதிலளிநீக்கு
  22. நேர்மையான பதிவு.. அழகான கட்டமைப்பான எழுத்து. நிறைய எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
  23. சிறப்பான கருத்துக்கள். பின்னூட்டங்களில் முன்வைக்கப்பட்ட கருத்துக்களையும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.

    முன்பெல்லாம் மருத்துவம் சேவையாக பார்க்கப்பட்டது. இப்போழுது வியாபாரமாக பார்க்கப்படுகிறது. முன்பெல்லாம் மருத்துவர்கள் மீது மரியாதை இருந்தது. இப்பொழுதெல்லாம் - நோயாளி குணமடைந்து விட்டாலும் கூட - மருத்துவர்கள் மீது கோபம் வருகிறது; காரணம் அதிகரித்துவிட்ட மருத்தவக் கட்டணம்.

    அதிக கட்டணத்திற்கு காரணம் மருந்துகளின் விலை மருத்துவ மனையின் நிர்மான-நிர்வாகச் செலவுகள் இருக்கிறததே என்கிறார்கள்

    மருத்துவத்தை ஒரு சேவையாக அன்று அளித்தார்கள். இன்று ஏன் அளிக்கக் கூடாது? கேள்வி நியாமமானதுதான். ஆனால் ஏன் முடியவில்ல?

    பணத்தை மட்டுமே குறியாகக் கொண்ட போட்டிகள் நிறைந்த உலகம் இது. இந்தப் போட்டி சம்பாதிப்பதில் ஒரு 'கொலை வெறியை' உருவாக்கி இருக்கிறது. மருத்துவர்களிடம் மட்டுமல்ல அனைவரிடமும்தான். இதன் விளைாக எங்கு நோக்கினும் சமூகத்தில் பண வெறி தலை விரித்தாடுகிறது. ஓடு! ஓடு! என சமூகம் விரட்டுகிறது. ஓடும் போது அடுத்தவன் காலை வாரிவிட்டால்தான் - அவன் எக்கேடு கெட்டால் என்ன- தான் முந்த முடியும். இதுதான் இன்றை சமூகச் சூழல். இந்தத் சூழலில் மருத்துவர்கள் மட்டும் விதிவிலக்கா என்ன?

    எனவே இது ஒரு சமூகப் பிரச்சனை. தவறு செய்பவர்களை இருக்கின்ற சட்டங்களைக் கொண்டு தண்டிக்க வேண்டும். சட்டம் போதாத போது புதிய சட்டங்களைக் கொண்டு வர வேண்டும். எத்தனை சட்டங்கள் வந்தாலும் தண்டனைகள் வழங்கப்பட்டாலும் சமூகம் மாறாத வரை தவறுகளும் நிற்கப் போவதில்ல.

    சமூகமே சீழ் பிடித்து அழுகி நாறுகிறது. இதை சரிசெய்கிற எண்ணம் வர வேண்டும். இதற்காகப் போராட வேண்டும். இந்தப் போராட்டத்தினூடாகத்தான் தற்போது ஒருவர் தான் செய்கிற தொழிலில் ஒரு நியாயத்தோடு நடந்து கொள்ள முடியும்.

    அது இல்லாத போது மருத்துவர்கள் மீதான தாக்குதலும் நிற்காது. அதற்கெதிரான மருத்துவர்களின் போராட்டமும் ஓயாது.

    பதிலளிநீக்கு
  24. சிறப்பான கருத்துக்கள். பின்னூட்டங்களில் முன்வைக்கப்பட்ட கருத்துக்களையும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.

    முன்பெல்லாம் மருத்துவம் சேவையாக பார்க்கப்பட்டது. இப்போழுது வியாபாரமாக பார்க்கப்படுகிறது. முன்பெல்லாம் மருத்துவர்கள் மீது மரியாதை இருந்தது. இப்பொழுதெல்லாம் - நோயாளி குணமடைந்து விட்டாலும் கூட - மருத்துவர்கள் மீது கோபம் வருகிறது; காரணம் அதிகரித்துவிட்ட மருத்தவக் கட்டணம்.

    அதிக கட்டணத்திற்கு காரணம் மருந்துகளின் விலை மருத்துவ மனையின் நிர்மான-நிர்வாகச் செலவுகள் இருக்கிறததே என்கிறார்கள்

    மருத்துவத்தை ஒரு சேவையாக அன்று அளித்தார்கள். இன்று ஏன் அளிக்கக் கூடாது? கேள்வி நியாமமானதுதான். ஆனால் ஏன் முடியவில்ல?

    பணத்தை மட்டுமே குறியாகக் கொண்ட போட்டிகள் நிறைந்த உலகம் இது. இந்தப் போட்டி சம்பாதிப்பதில் ஒரு 'கொலை வெறியை' உருவாக்கி இருக்கிறது. மருத்துவர்களிடம் மட்டுமல்ல அனைவரிடமும்தான். இதன் விளைாக எங்கு நோக்கினும் சமூகத்தில் பண வெறி தலை விரித்தாடுகிறது. ஓடு! ஓடு! என சமூகம் விரட்டுகிறது. ஓடும் போது அடுத்தவன் காலை வாரிவிட்டால்தான் - அவன் எக்கேடு கெட்டால் என்ன- தான் முந்த முடியும். இதுதான் இன்றை சமூகச் சூழல். இந்தத் சூழலில் மருத்துவர்கள் மட்டும் விதிவிலக்கா என்ன?

    எனவே இது ஒரு சமூகப் பிரச்சனை. தவறு செய்பவர்களை இருக்கின்ற சட்டங்களைக் கொண்டு தண்டிக்க வேண்டும். சட்டம் போதாத போது புதிய சட்டங்களைக் கொண்டு வர வேண்டும். எத்தனை சட்டங்கள் வந்தாலும் தண்டனைகள் வழங்கப்பட்டாலும் சமூகம் மாறாத வரை தவறுகளும் நிற்கப் போவதில்ல.

    சமூகமே சீழ் பிடித்து அழுகி நாறுகிறது. இதை சரிசெய்கிற எண்ணம் வர வேண்டும். இதற்காகப் போராட வேண்டும். இந்தப் போராட்டத்தினூடாகத்தான் தற்போது ஒருவர் தான் செய்கிற தொழிலில் ஒரு நியாயத்தோடு நடந்து கொள்ள முடியும்.

    அது இல்லாத போது மருத்துவர்கள் மீதான தாக்குதலும் நிற்காது. அதற்கெதிரான மருத்துவர்களின் போராட்டமும் ஓயாது.

    பதிலளிநீக்கு

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது! :)