வெள்ளி, ஜனவரி 29

உடல்நலம் மேம்பட செய்ய வேண்டியது என்ன?

உடல்நலம் என்றால் என்ன?

உடல்நலம் என்பது நோயற்றிருப்பதோ அல்லது பலவீனமாக இல்லாதிருப்பது மட்டுமல்ல, முழுமையான உடல்,உள்ளம் மற்றும் சமூக நலத்துடன் இருப்பது என உலக சுகாதார நிறுவனம் வரையறுக்கிறது. பொதுவாகக்  காட்சி மற்றும் அச்சு ஊடகங்கள் நோய் என்பதைத் தனிப்பட்ட மனிதரின் பிரச்சனையாகவும் அவரின் தனிப்பட்ட பொறுப்பாகவும் வெட்டிச் சுருக்கிவிடுகின்றன. ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி, யோகா என்பதை அடிக்கடி விளம்பரப்படுத்துகின்றன, இவை தேவையற்றவை என்பதல்ல என் கூற்று, இவை மட்டும் போதுமானதா என்பதே என் கேள்வி? இதையும் தாண்டினால் நோயாளி மற்றும் மருத்துவரின் கேள்வி பதிலுடன் முடித்துக் கொள்கின்றன. உண்மையில் உடல்நலன் என்பது இந்த வட்டத்திற்குள் மட்டும் சுற்றி வருவதா?

நோய்களும் இறப்புகளும் ஓர் உலகளாவிய பார்வை

உலக சுகாதார நிறுவன அறிக்கையின் படி 1. இருதய அடைப்பு 2. பாரிசவாதம் 3. சுவாசப்பை தொற்றுகள் 4. சுவாசப்பை அடைப்புகள் ஆகிய நான்கு நோய்களே உலகளவில் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்துவதானாலும் இதில் அதிக வருமானமுள்ள நாடுகளுக்கும் குறைந்த வருமானமுள்ள நாடுகளுக்கும் பாரிய வேறுபாடுகள் உள்ளன. அதிக வருமானமுள்ள நாடுகளில் நிகழும் பத்து மரணங்களில் ஏழு மரணங்கள் எழுபது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவராய் இருக்க, குறைந்த வருமானமுள்ள நாடுகளில் இது பத்திற்கு இரண்டாக உள்ளது மீதமுள்ள எட்டில் நான்கு மரணங்கள் 15 வயதிற்கும் குறைந்த சிறுவர்களாவர். வளர்ந்த நாடுகளிலோ 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் மரணம் 100 ல் 1 ஆக உள்ளது.

வளர்ந்த நாடுகள் தொற்றல்லாத நோய்களினாலேயே அதிகம் பாதிக்கப்படுகிறது (87%). சுவாசத்தொற்று நோய்கள் மட்டுமே இங்குப் பெரிதும் ஆதிக்கம் செலுத்துகின்றன. இதுவே இந்தியா போன்ற வளரும் நாடுகளில் 57% ஆகவும் இன்னும் ஏழ்மையான நாடுகளில் 37% ஆகவும் உள்ளது. ஏழ்மையான மற்றும் வளரும் நாடுகள் மலேரியா,வயிற்றுப்போக்கு, காசநோய் உள்ளிட்ட தொற்று நோய்களாலேயே அதிகம் பாதிக்கப்படுகின்றன. மேலே கண்ட புள்ளி விவரங்களிலிருந்து நாம் அறிவதென்ன? வளர்ந்த நாடுகளில் இருப்போருக்கும் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் மற்றும் ஏழை நாடுகளில் இருப்போரின் உடல்நலத்திற்கு இடையே பாரிய வேறுபாடுகள் உள்ளன. நம் போன்ற நாடுகளில் உள்ளோரின் உடல்நலத்தை மேம்படுத்த வேண்டுமென்றால் அடிப்படை சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டும் அதோடு சேர்ந்து மருத்துவ வசதிகளையும் மேம்படுத்த வேண்டும்.

இந்தியாவின் நிலை

சர்வதேச மருத்துவ இதழான “லான்செட்”, “இந்திய அரசு ஆண்டொன்றுக்குக் குறைந்தபட்சம் ஒன்றரை இலட்சம் கோடி ரூபாய் நிதியை மருத்துவம்-பொது சுகாதாரத்திற்கு ஒதுக்கீடு செய்தால் மட்டுமே, அடுத்த 20 ஆண்டுகளில் தொற்று நோய்களால் ஏற்படும் இழப்பு, தாய்-சேய் இறப்பு விகிதம் ஆகியவற்றை உலகத்தரத்திற்கு ஈடாகக் குறைக்க முடியும்” எனத் தெரிவிக்கிறது ஆனால் கடந்த 2015ல் நிதிநிலையில் பொதுச் சுகாதாரத்திற்கென்று ஒதுக்கப்பட்ட தொகை வெறும் 33,152 கோடி மட்டுமே. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுகாதாரத்திற்கென்று ஒதுக்கப்படும் தொகை வெறும் 1.3% மட்டுமே. நம் அருகில் உள்ள சைனாவில் இது 3%, அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் முறையே 7.6%,8.1% ஒதுக்கப்படுகிறது. இந்திய நோயாளிகளின் கடலிலிருந்து சில துளிகள்

500:1 என்ற விகிதத்தில் இருக்க வேண்டிய மக்கள்-மருத்துவர் விகிதம், 500:0.3 ஆக உள்ளது. இந்த விகிதமும் 29 சதவீத கிராமப்புற மக்களுக்குக் கிடைப்பதில்லை.

3 வயதுக்கும் கீழ் உள்ள குழந்தைகளில் 60 சதவிகிதத்தினர் குறைவான ஊட்டச்சத்து கொண்டுள்ளனர். ஆப்ரிக்க நாடுகளை விட இஃது அதிகமாகும்.

ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளில் மூன்றில் ஒன்று இந்திய குழந்தையாகும்.

உலகின் மொத்த காசநோயாளிகளில் 20% பேர் இந்தியர்கள்

நமது மருத்துவ அமைப்பு முறை

மக்கள் மருத்துவரை தெய்வமாக பார்த்த காலகட்டம் முடிந்து போய், மக்களைக் கண்டு மருத்துவர்கள் அஞ்சி தங்களையும் தங்கள் சொத்துக்களையும் அரசை நிர்ப்பந்தித்து சட்டமியற்றி காத்துக்கொள்ளும் படியான காலகட்டம் தற்போது ஏற்பட்டுள்ளது. சேவை என்பதை மறந்துவிட்டு லாபமீட்டும் ஒரு தொழிலாக மருத்துவதுறை மாறியதே இதற்குக் காரணம். நாற்பது ஆண்டுகள் அமெரிக்காவிலும் கேரளாவிலும் பணியாற்றிய குழந்தை மருத்துவர் திரு அலெக்ஸாண்டர் மேத்யூ அவர்களின் அனுபவத்தைச் சுருக்கமாக இங்கே பார்ப்போம். குறைவான மருந்துகள், குறைவான பரிசோதனைகள் எனப் பல குழந்தைகளின் ஆரோக்கியத்தை அவர் உறுதிப்படுத்தினாலும் நிர்வாகத்தின் இலாபத்தில் துண்டு விழுந்த காரணத்தால் பல மருத்துவமனைகளிலிருந்து வெளியேற்றப்படுகிறார் (ஆதாரம்: தி இந்து: ஆகஸ்ட்18, 2013).

2008-ல் திருச்சி ஜோசப் மருத்துவமனை, 2008-ல் மத்திய பிரதேசம் மண்டாலாவில் யோகிராஜ் மருத்துவமனை, 2010-ல் மத்திய பிரதேசம் இந்தூரில், 2011-ல் சத்தீஸ்கரில், 2014-ல் பஞ்சாப் அம்ருத்சரில் என்று ஒவ்வொரு கூட்டு அறுவை சிகிச்சை விபரீதங்களால் முடமானோர், உயிரிழந்தோரின் பட்டியல் நீண்டது. நாளொன்றுக்கு ஒரு மருத்துவர் 30 அறுவை சிகிச்சைகள் மட்டுமே செய்ய வேண்டும் என்கிறது உலக சுகாதார நிறுவனம். ஒரே அறுவை அரங்கில், சரியாய் கிருமி நீக்கம் செய்ய இயலா நிலையிலும் நாளென்றொக்கு பல பத்து அறுவை சிகிச்சைகளை இலக்காக வைத்து அவர்களை நிர்பந்தபடுத்தும் நிர்வாகத்தின் உத்தரவுக்கு அடிபணிந்து மருத்துவர்கள் அறுவை இயந்திரங்களாய் மாறி விடுகின்றனர். இம்மாதிரி சமயங்களில் கிளர்ந்தெழுந்து மக்களின் பக்கம் மருத்துவர்கள் நிற்க வேண்டும். எல்லா விதங்களிலும் மக்களுக்குப் பொறுப்பானவர்கள் மருத்துவர்களே

இவை தவிர கோடி கோடியாய் இலஞ்சம் பெற்று கொண்டு மருத்துவக் கல்லூரிகளை ஆரம்பிக்க உத்தரவளித்த கேதான் தேசாய், மருத்துவக் கல்லூரி அனுமதியில் மட்டும் ஆண்டுக்கு 10,000 கோடி புழங்கும் கருப்பு பணம் (டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி Dec 18, 2014), நம் மக்களிடம் சரியான தகவலைச் சொல்லாமல், புதிய மருந்துகளை அவர்கள் மேல் பிரயோகித்து அவர்களை சோதனைச்சாலை எலிகளாக்கும் பன்னாட்டு மருந்து நிறுவனங்கள், உடலுறுப்பு திருட்டு (சென்னையில் இருக்கும் கிட்னிவாக்கத்தை நினைவில் கொள்க), காப்புரிமை சட்டத்தையே வளைக்கும் திறனுள்ள மருந்து நிறுவனங்கள் என நம்முடைய அமைப்பு முறையில் உள்ள குறைகள் ஏராளம். இவற்றையெல்லாம் விரித்துக் கொண்டே போனால் ஒவ்வொன்றும் ஒரு நூல் எழுதும் அளவுக்கு பெரியவை.

இன்னும் இருக்கிறது ஏராளம்!

வளர்ந்த உலக நாடுகளில் தடை செய்யப்பட்ட பூச்சி கொல்லி மருந்துகளை நம் பயிரில் தெளிப்பதில், புலால் உணவை, அதிக புரதமளிக்கும் மாட்டிறைச்சியை மறுக்கும் பார்ப்பனிய கலாச்சாரத்தில், முட்டை மற்றும் இறைச்சியை மாநிலம் மாநிலமாய் தடை செய்யும் அதன் அரசியலில், பாரம்பரிய உணவுகளை ஒழித்து பீட்சா, உருளைக் கிழங்கு வறுவல் எனத் திணிக்கும் பன்னாட்டு நிறுவனங்களின் லாபத்தில், கோடிக்கணக்கான மக்களுக்கு முறையான கழிப்பிட வசதி இல்லாத சூழலில், பெருநகரங்களின் சுற்றுச்சூழல் சீர்கேட்டில், கோடிக்கணக்கான தொழிலார்களின் பாதுகாப்பற்ற பணிச்சூழலில், வீதிக்கு வீதி திறந்திருக்கும் டாஸ்மாக்கை ஒழிப்பதில் இருக்கிறது நம் மக்களின் உடல் நலம்.

தீர்வுதான் என்ன?

மருத்துவம் என்பது அரசின் கையில் எப்பொழுதும் இருக்க வேண்டியது, அமெரிக்காவைத் தவிர்த்த கனடா உள்ளிட்ட மேற்குலக நாடுகளில் அரசின் கைகளிலேயே மருத்துவம் என்பது இன்றளவும் உள்ளது. அங்குள்ள மக்களும் சிறப்பான மருத்துவ சேவையை இலவசமாகப் பெறுகின்றனர். மாறாக அமெரிக்காவிலோ காப்பீடு உள்ளவர்கள் கூட சரியான மருத்துவ சேவையை பெற முடியாமலும், காப்பீடு இல்லாதவர்கள் நோயற்று இருப்பதற்குப் பிரார்த்தனையிலும் கழிக்கின்றனர். (காண்க மைக்கேல் மூரின்: Sicko.) மேற்கு ஆப்பிரிக்க நாடுகள் மிகப்பெரும் மருத்துவ நெருக்கடியான எபோலாவில் சிக்கித் தவித்து கொண்டிருந்த பொழுது மருத்துவம் சமூக மயமாக்கப்பட்ட கியூபாவில் இருந்துதான் 456 மருத்துவர்கள் எபோலாவால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்குச் சென்றனர். அதே சமயத்தில் அமெரிக்காவிலிருந்து வெறும் 10 மருத்துவர்களும், பிரிட்டனிலிருந்து 30 பேர் மட்டுமே சென்றது குறிப்பிடத்தக்கது. 2005ல் காஷ்மீரில் (பாகிஸ்தான்) நிலநடுக்கம் ஏற்பட்ட பொழுது கூட கியூபா 2400 மருத்துவர்களை அனுப்பி வைத்தது. கியூபாவின் 50,000 மருத்துவர்கள் உலகின் 60 ஏழை நாடுகளில் பணிபுரிகிறார்கள். தன் நாட்டில் மட்டுமல்லாது உலகின் பல்வேறு நாடுகளில் இருக்கும் ஏழைகளின் துயர் துடைக்கும் இவர்களே உண்மையான மருத்துவர்கள், இதுவே சிறப்பான மருத்துவ அமைப்பு முறை.


உடல்நலம் காப்பதிலும் நோயை விரட்டுவதிலும் தனி மனிதனின் பங்கென்பது மிகக்குறைவே. நாளொன்றுக்கு ஒரு வேளை உணவு உண்பவர்கள் கோடிக்கணக்கில் வாழும் நாட்டில் உடற்பயிற்சியும், யோகாவும், தனி மனித சுகாதாரமும் அவர்களின் உடல்நலனில் பெருமளவு மாற்றத்தை ஏற்படுத்தாது. ஊரெங்கும் கொடூரமான தொற்றுநோய் பரவியிருக்கும் பொழுது நம்மை மட்டும் நாம் காத்து கொள்ளலாம் என்பது எவ்வளவு புத்திசாலித்தனமானது! அது போன்றதே இன்று இருக்கும் வாழ்க்கை சூழலில் தனிப்பட்ட ஒருவரின் உடல்நலத்தை மட்டும் காத்து கொள்ளலாம் என்பது. நமது மருத்துவ துறை வளர்ச்சி அடைய, மக்களின் உடல்நலனைக் காக்க, நோய் வராமல் தடுக்க வேண்டுமானால், தனியார் பங்களிப்பை படிப்படியாக மருத்துவ துறையில் இருந்து குறைத்து கொண்டு அரசின் பங்களிப்பை அதிகரிக்கச் செய்ய மருத்துவர்கள், பொதுமக்கள் என அனைவரும் இணைந்து  போராடுவதே ஒரே வழி.

வெள்ளி, ஜனவரி 22

குடிமகன்களுக்கான கள்ளுப்பாடல்


தமிழத்தில் மதுவிலக்கு அமல்படுத்தவே முடியாதென்று சட்டசபையில் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அறிவிக்கிறார். இதை மதுகுடிப்போர் சங்கமும் வரவேற்றுள்ளது. சுகந்திரமாய் டாஸ்மாக்கில் குடிமகன்கள் குடித்து கொண்டே இருக்க அரசு என்றும் உறுதுணையாய் இருக்கும், மதுவிலக்கிற்கு எதிரான போராட்டங்களை இரும்பு கரம் கொண்டு ஒடுக்குமென்பதே நடந்த, நடக்கவிருக்கும் உண்மை.  

குடிப்பவர்க்கு போலிசு பாதுகாப்பு
அதை எதிர்ப்பவர்க்கு சிறை
மது விற்பனையே அரசின் கொள்கை
அதுவே இன்றைய நிலை

இன்று அதிக சுகந்திரமும், பாதுகாப்பும் தமிழ்நாட்டில் கொண்டோர் மது குடிப்பவர்களே, அவர்கள் அதை உற்சாகமாய் கொண்டாடி பாடி களிக்கவே இந்த “ கள்ளுப்பாடல்”.

யார் கண்டது நாளையே, இதே போன்ற பாடல் கூட தமிழ்நாட்டின் தேசியகீதமாகலாம்.

பல்லவி 
ஆடுவோமே - குவாட்டர் போடுவோமே:
குடிகாரர்க்கு  சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று(ஆடுவோமே)

சரணங்கள் 
1.பார்ப்பானை ஐயரென்ற காலமும் ஆச்சே -கொள்ளை 

ஜெயாவை அம்மாவென்ற காலமும் ஆச்சேஓட்டு பிச்சை 
ஏற்பாரைப் பணிகின்ற காலமும் ஆச்சே - நம்மை 
ஏய்ப்போருக்கு ஏவல் செய்யுங் காலமும் ஆச்சே.(ஆடுவோமே)  

2.எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு-நாம்  

எல்லோருக்கும் குடியின்பமென்ப துறுதியாச்சு
மது வெறி கொண்டே யூதுவோமே-இதைத்
தரணிக்கெல் லாமெடுத் தோதுவோமே(ஆடுவோமே)

3.
எல்லாரு குடிகாரென்னுங் காலம் வந்ததே- பொய்யும்
ஏமாற்றுந் செழிக்கின்ற காலம்வந்ததே - இனி
நல்லோர் பெரியரென்ருக்கும் நாசம் வந்ததே -கெட்ட
நயவஞ்சகக் காரருக்கு காலம் வந்ததே.(ஆடுவோமே)

4.
உழவுக்குந் தொழிலுக்கும் நிந்தனை செய்வோம் - டாஸ்மாக்கில்
குடித்துகளித் திருபோரை வந்தனை செய்வோம்
விழலுக்கு நீர்பாய்ச்சி மாயமாட்டோம் -வெறும்
குடும்பத்துக் குழைதுடலம் ஓயமாட்டோம்.(ஆடுவோமே)

5.
குடியருக்கு நாடுநம தென்பறிந்தோம் - இது
நமக்கே யுரிமையா மென்பறிந்தோம் - இந்தப்
பூமியி லெவர்க்குமினி அடிமைசெய்யோம்குடி
போதைக் கேயடிமை செய்துவாழ்வோம்.(ஆடுவோமே)

வியாழன், ஜனவரி 14

கல்யாணத்துக்கு பின்னாடி நாங்க படுற கஷ்டம்...

இந்தக் கட்டுரையை படிப்பதற்கு முன்பு இணைப்பிலுள்ள முத்து சிவாவின் கட்டுரையைப் படித்து விடுங்கள். நாட்டில் யாராருக்கெல்லாமோ எதற்கெல்லாமோ போராடுகிறார்கள் ஆனால் பேச்சுலர்களுக்கு நடக்கும் கொடுமையை ஒருவரும் தட்டி கேட்கவில்லையெனப் புலம்புகிறார். இக்கரைக்கு அக்கரை பச்சை, கல்யாணமானவங்க பிரச்சனையை பத்திதான் இந்த பதிவு. பேச்சுலர்ஸாவது தைரியமா புலம்பிறலாம் ஆனா கல்யாணமானவங்க அதையும் கூட பொண்டாட்டி பக்கத்துல இருக்காளான்னு பாத்துட்டுதான் புலம்ப முடியும். என் ராசாவின் மனசிலே படத்தில் கவுண்ட மணி வீட்டினுள்ளே அடி வாங்கிவிட்டு வெளியே வந்து சவுண்டு விடுவாரே அது போலத்தான் உள்ளது கல்யாணமானவங்க நிலமை. கல்யாணத்துக்கு முன் பத்தி கட்டுரைல அவர் சொல்லிட்டாரு, கல்யாணத்துக்குப் பின்பு என்ன பிரச்சனைனு நம்ம பாப்போம்.
  1. தியேட்டர்ல சீட்டு மாறி உக்காற்ரதுதான் பேச்சுலர்க்கு பிரச்சனை, பொண்டாட்டி மேக்கப் பண்ணி, டிரெஸ் மாத்தி, குழந்தைகளை ரெடி பண்ணி போயிட்டு திரும்பி வற்ர வரை கல்யாணமான ஆண்களுக்கு எல்லாமே பிரச்சனை.
  2. நல்ல ஏரியாவுல வீடு கிடைச்சாலும் வீட்டு ஓனர் பிரச்சனை, தண்ணி பிரச்சனை, பிள்ளைங்க பள்ளிக்கூடம் பக்கத்துல இருக்கனும்னு ஏகப்பட்ட பிரச்சனை. அதோட பேச்சுலர்ஸ் எல்லாம் வாடகையை ஏத்தி விட்டுறீங்க அது வேற பிரச்சனையாகுது.
  3. சனி, ஞாயிறு ஆபிஸ் வேலையே பாத்துடலாம். வீட்டுக்கு வந்தா ஒட்டடை அடிச்சு, ஜன்னலெல்லாம் துடைச்சு,  சமையல்ல உதவி செஞ்சுனு நம்ம வேலை லிஸ்ட் நீண்டுகிட்டே போகுது. யாருயா உங்களுக்கு சொன்னது கல்யாணமானவங்க சனி, ஞாயிறு வீட்ல நிம்மதியா தூங்க முடியுதுன்னு…
  4. ஏன் கல்யாண்மானவங்க, இன்னுமா கல்யாணம் பண்ணலனு பேச்சுலர்ஸ கேட்குறாங்க… யாம் பெற்ற துன்பம் பெருக இவ்வையகம்னுதான். கல்யாணமானவனும் சொல்ல மாட்டான், சொன்னா பேச்சுலரும் நம்ப மாட்டான்.
  5. விசேசம்னு வந்தா முதல்ல கஷ்டபடுறது கல்யாணமானவந்தான்யா… சீரு, முறைனு, மொய்னு கடன்பட்டு செய்யுறது யாரு? அவந்தான்யா…
  6. கல்யாணமானா போனே பேச முடியாது. யார்ட்ட பேசுற, என்ன பேசுறேங்குற கேள்வி வீட்டுகாரம்மாட்ட இருந்து வந்துட்டே இருக்கும். இதைக்கூட தாங்கிக்கலாம் ஆனா கல்யாணம் ஆகுறதுக்கு முன்னாடி மட்டும் எவ்ளோ நேரம் எங்கூட பேசுன, இப்ப ஏன் பேசுறது இல்லைனு பண்ற டார்ச்சர மட்டும் தாங்கவே முடியாது. அதுக்கு அப்புறம் போன்ல பேசுற ஆசையே போய்டும். இது மட்டும் இல்லையா Fb, Google பாஸ்வேர்டு வாங்கி வச்சுட்டு நம்ம யாருக்கு லைக் போடுறோம், யாருக்கு Friend request கொடுக்குறோம், என்ன மெயில் அனுப்புறோம்னு உளவு பாக்குறது தனி. இந்தக் கொடுமையெல்லாம் அனுபவிச்சாதான் தெரியும்.
  7. தம்பி, பொண்ணுங்கல்லாம்தான் இப்ப குப்பைல புரண்டுகிட்டு இருக்குங்க. கல்யாணமான ஆம்பளைங்கதான் வீடு கூட்டிட்டு இருக்காங்க. அதனாலதான் உங்க நண்பர் உங்களை ஏன் வீடு குப்பையா இருக்குன்னு கேட்குறாரு.
  8. ஹையோ, ஹையோ இன்னும் இந்தத் தம்பி பச்ச புள்ளையாட்டமே பொண்ணுங்க எல்லா வீட்டு வேலையும் செய்யும்னு நம்பிகிட்டு இருக்குறாரு. ரூம் கூட்டுறது, துணி துவைக்குறது முதற்கொண்டு கக்கூசு கழுவுற வரை எல்லாமே பசங்கதான்யா பண்றாங்க.
  9. பாயிண்ட் நம்பர் நாலுல சொன்னதுதான். திருப்பி அதை ஒரு நாலுவரி கதைல பாத்துடலாம். ஒரு காட்டுக்கு நாலு நண்பர்கள் போனாங்களாம், அங்க ஒரு கை மட்டும் உள்ள போற மாதிரி சின்ன பொந்து இருந்துதாம். முதல்ல ஒருத்தன் அதுல கைவிட்டானாம், உள்ள இருந்த தேள் அவனை கொட்டிருச்சாம். என்னடா இருக்குனு அடுத்தவன் கேட்க அவன் சொன்னானாம் உள்ள ஜிலு ஜிலுனு காத்து வருதுன்னு. அதை நம்பி ஒவ்வொருத்தனும் கையை உள்ள விட, வரிசையா கையை விட்ட எல்லாருமே தேள்கிட்ட கொட்டு வாங்குனாங்களாம். ஒருத்தன் கூட இன்னொருத்தனுக்குத் தேள் இருக்குற உண்மைய சொல்லலையாம். அந்த மாதிரிதான் கல்யாணமானவங்க எப்போ கல்யாணம்னு பேச்சுலர்ச பாத்து கேட்கிறது. அதுக்கு மறைமுகமான அர்த்தம் நீ அடுத்து எப்ப கொட்டு வாங்க போறேன்னுதான்.
  10. பாஸூ கல்யாணமானவங்கல்ல ரொம்ப பேரு கேண்டீன்லதான் சாப்பிடுறாங்க. வீட்டுச் சாப்பாட்டுக்கு கேண்டீன் சாப்பாடு எவ்வளவோ தேவலம். வீட்டு சாப்பாடு சாப்பிடுறவங்க எல்லாம் மைனாரிட்டிதான். அந்த மைனாரிட்டிலியும் மெஜாரிட்டி கேண்டீன் சாப்பாடு வெட்டி செலவு, அது உங்களுக்கு ஒத்துகாதுன்னு மனைவி இம்சை பண்ணி சாப்பாடு அனுப்புறதால சாப்பிடுறவங்க.
  11. சமைக்குறது மட்டுமில்லயா வீட்டுக்கு போய் பாத்திரத்தை கழுவறதும் கல்யாணமான ஆம்பிளங்கைதான்யா… ஏன்யா வயித்தெரிச்சலை கிளப்புறீங்க.
  12. நாங்களும் நண்பனோட படம் பாக்கத்தான் ஆசைப்படுவோம், ஆனா எங்களுக்கு அனுமதி கிடைக்கனுமே… போகக்கூடாதுன்னா போகக்கூடாது அப்படின்னு வீட்டுக்காரம்மா சொன்ன பின்னாடி நாங்க எப்படிய்யா வர்றது? தியேட்டர்ல இல்லையா, வீட்டுல கூட நமக்கு பிடிச்ச மாதிரி, யூ டியூப்ல கூட ஒரு படம் தனியா பாக்க முடியாது.
  13. பாயிண்ட் நம்பர் நான்கு மற்றும் ஒன்பதைத் திரும்ப படிக்கவும்.
  14. கல்யாணமானவங்களுக்கு ஞாயிற்றுக் கிழமை என்ன சமைக்குறதுங்குற பிரச்சனையே இல்லை. ஒன்னு நாங்கதான் சமைக்கனும் அது ஒரு வேளை போரடிச்சா ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு ஹோட்டலுக்கு கூட்டிட்டு போகனும். அந்த ஹோட்டல்ல சாப்பாடு சரி இல்லைனாலும் நாங்கதான் திட்டு வாங்கனும்.


என்னோட நண்பன் ஒருத்தன்கிட்ட எப்படி உனக்கு பொண்ணு வேணும்னு கேட்டேன்? அதுக்கு அவன் சொன்னான், நல்லா சமைச்சு போடனும், துணி துவைக்கனும், வீடு கூட்டனும், கை கால் அமுக்கனும், வாரா வாரம் நல்லா எண்ணைய் தேய்ச்சு விடனும்னு. நான் மனசுக்குள்ளேயே சிரிச்சுகிட்டேன், இரு மகனே இருன்னு. இப்ப அவனுக்கு கல்யாணமாகி அழுதுகிட்டே அந்த வேலையேல்லாம் அவனே பாத்துகிட்டு இருக்கான். ஆசைப்படாதே, அவதிப்படாதே… யாரோ ஒருத்தர் ஒரு பட்டிமன்றத்துல சொன்னாரு, கல்யாணம் நிச்சயம் பண்ணி, கல்யாணம் ஆகுற வரைதான் ஆம்பளைக்கு சந்தோசம். கல்யாணம் ஆகுறதுக்கு முன்னாடி ஆகலையேன்னு கவலை, ஆன பின்னாடி ஆயிருச்சேன்னு கவலை. அது முற்றிலும் உண்மை.

ஆகவே கல்யாணம் ஆகாத தம்பிகளே, கல்யாணமான ஆம்பிளையா இருக்குறது ஒண்ணும் சாதாரண விஷயம் இல்ல. எத்தனை சிக்கல், எத்தனை டென்ஷன், எத்தனை கண்ணீர், எத்தனை நன்றி, எத்தனை மன்னிப்பு, எத்தனை புகழ்ச்சி, எத்தனை சகிப்புதன்மை, எத்தனை வேலை இன்னும் எத்தனை எத்தனையோ...   

யாருப்பா அது விழுந்து விழுந்து சிரிக்கிறது? ஓ பேச்சுலரா.. உங்களுக்கும் கல்யாணம் ஆகும், அப்ப படிச்சு பாருங்க ஆனந்த கண்ணீரே வரும். 

பி.கு: இக்கட்டுரை என்னை சுற்றி நடப்பவைகளை (என் தனிப்பட்ட வாழ்வையல்ல :p ) வைத்து எழுதியது. சமூகத்தின் உண்மையான நிலைகள் வேறு மாதிரியும் இருக்கலாம். யாரையும் புண்படுத்தும்/இழிவுபடுத்தும் நோக்கமுடையதல்ல. 


புதன், ஜனவரி 13

வர்க்க உணர்வு


சில உடல் உபாதைகளுக்காக எனது தாயுடன் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்றிருந்தேன். மருத்துவமனை நல்ல சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருந்தது. பொதுவாய் தனியார் மருத்துவமனையின் சேவையே சிறப்பாய் இருப்பதாக ஒரு தவறான எண்ணம் நிலவுகிறது. ஆனால் பல தனியார் மருத்துவமனைகளின் சேவை, அரசு ஆரம்ப சுகாதார மையங்களின் சேவையை விட மோசமாக இருக்கிறது, ஆரம்ப சுகாதார நிலையங்கள் அனைத்தும் நன்கு தூய்மையாக பராமரிக்கப்படுகின்றன, பரிசோதனை முடிவுகளும் உடனுக்குடன் வருகின்றது, மருத்துவர்களும் நோயாளியைச் சிறப்பாக கவனிக்கின்றனர். கடந்த ஒரு வருடமாகவே பல்வேறு உடல் உபாதைகளுடன் காலம் தள்ளுவதால், சில தனியார் மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவமனைகளுடன் ஏற்பட்ட பரிச்சியத்தின் விளைவாகவே எனது இந்தக் கூற்று வருகிறது. தனியார் மருத்துவமனைகளுடனான எனது அனுபவத்தை எழுத ஆரம்பித்தால் அதுவே தனிக்கட்டுரையாகிவிடும். அதை பிறிதொரு சமயம் பார்க்கலாம். அரசு சரியான முறையில் அரசு மருத்துவமனைகளை ஊக்குவித்தால், அவை இன்னும் சிறப்பான சேவையை வழங்க முடியும்.



இங்கும் மருத்துவர்கள் கவனமாக எனது பிரச்சனைகளை கேட்டறிந்து, மேலும் சில பரிசோதனைகளுக்காக உள்ளேயே எழுதி அனுப்பினர். பரிசோதனை கூட வாயிலில் காத்திருந்தோம். 25 வயது மதிக்கத்தக்க இசுலாமிய பெண்மணி ஒருவர் என் தாயின் அருகில் அமர்ந்தார். சிறு வயதிலேயே திருமணம் ஆகியிருக்கும் போல, ஆறு வயது மகளையும் உடன் அழைத்து வந்திருந்தார். சிறிது நேரத்திலேயே என் அம்மாவிடம் சரளமாக பேச ஆரம்பித்தார்.

”தொண்டிக்கும் அங்கிட்டு இருந்து வர்றேம்மா, பஸ்சுக்கே 150 ரூவாய்க்கும் மேல ஆகுதும்மா… இங்க நல்லா பாக்குறாங்க, ஒரு மாசத்துக்கு முன்னாடியே தைராய்டு ஆப்ரேசனுக்கு வந்தேன், சரியாய்டுச்சு. இப்போ காதுல உணர்ச்சியே இல்லை, ஒரு பக்கமா கேட்கவே மாட்டேங்குது, அதான்மா வந்திருக்கேன்” என சொன்னார்

ஏன் என்ன ஆச்சு? என அம்மா கேட்க…

”ஒருத்தன் அடிச்சுட்டான்மா, ஆப்ரேசன் ஆகி மூணுநாள்லயே என் புருசன் வேலைக்கு மெட்ராசுக்கு போயிட்டாரு. நான் தர்காகுக்கு போயிட்டு வீட்டுக்கு வந்தேன். வந்த உடனே என்னைய அடிச்சுட்டான்மா அவன்” என்றார்.

ஏம்மா? நீ என்ன பண்ண? சும்மா இருக்குறப்பயா உன்னை அடிச்சான்?

”அம்மா முதல்ல நாங்க வாடகை வீட்ல இருந்தோம், அப்புறம் என் வீட்டுகாரரு பாட்டி வழி வீடு ரிப்பேராகி கிடந்தது. அதை ரிப்பேர் பண்ணி இப்ப அங்க இருக்கோம், நாங்க இருக்குறது குச்சு வீடு, பக்கத்துல இருக்குற மச்சு வீட்டுகாரனுக்கு நாங்க வந்ததே பிடிக்கல. நாங்க வந்ததுல இருந்து பிரச்சனை பண்ணிகிட்டே இருக்கான், அவரு இல்லாத நேரம் பாத்து அடிச்சுபுட்டான்மா” என வேதனையுடன் தெரிவித்தார்.

“அவனை சும்மாவா விட்ட?”

”நான் என்னம்மா பண்னட்டும், அடிச்ச உடனே நான் மயங்கி விழுந்துட்டேன்”

”என்னம்மா இப்படி சொல்ற, இப்படி அடிச்சு ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆயிருச்சுன்னா என்னம்மா பண்ண? என அம்மா ஆதங்கத்துடன் வினவ…
அட போங்கம்மா… அடிச்சது மட்டுமில்லாம, ”ஒரு அடிக்கு உயிரா போய்டும்னு அவன் சம்சாரம் கேட்குதும்மா”

திமிருதான்…போலிசுல ஏதும் சொல்லலையா?

”சொன்னோம்மா, அவங்க ஒரு நியாயம் சொல்லுவாங்கன்னு பாத்தா…. அலைய விட்டுட்டே இருக்கான்மா, அதான் குடுத்த கேசயும் வாபஸ் வாங்கிட்டோம்.” போலிசு என்றைக்கு உழைக்கும் வர்க்கத்துக்கு துணையாக இருந்த்திருக்கிறது என நினைத்து கொண்டேன். 

”ஆண்டவந்தான் நம்மளை காப்பாத்தனும், ஆனா துஷ்டனை கண்டா தூர விலகுங்குறத, அந்த ஆண்டவந்தான் சரியா பண்றான். கெட்டவங்கிட்ட போறதே இல்லை, நல்லவங்களைதான் எப்பவும் சோதிக்கிறான்”, என்றார் அம்மா.

ஆமாம்மா.. “நல்லவங்களுக்கே காலமில்ல, ஆண்டவன் எங்க நல்லவங்கள காப்பத்துறார்” என்றார். பொதுவாய் இசுலாமியர் என்றாலே மதநம்பிக்கை ஆழமாக இருக்கும் என்பதற்கு மாறாக, ஆச்சரியப்படுத்தும் விதமாக இருந்தது அவர் பதில்..

”ஏற்கனவே எங்ககிட்ட இருந்த சொத்தையெல்லாம், அபகரிச்சுட்டாம்மா, இப்ப இருக்குறது இந்த ஒரு வீடுதான், இதையும் எப்படியும் புடிங்கிறாலும்னு பாக்குறான்மா”

”வாடகை வீடுன்னாலும் எங்கயாவது நீ போயிறலாம்மா…சொந்த வீடை விட்டுட்டு எங்க போவீங்க நீங்களும், சரி எப்படியாவது சமாதானமா போக பாருங்க” என்றார் அம்மா வருத்ததுடன்

”நான் எதுவுமே பேசறது இல்லைமா, பேசுனாதான பிரச்சனைனு வாயே தொறக்குறது இல்லம்மா, எப்ப இதெல்லாம் விடியப்போகுதோ தெரியலை”
அடிச்சது உங்க சொந்தக்காரனா?

இல்லம்மா, சொந்தம் இல்லை…

உங்காளுங்களா அப்ப?

இல்லைம்மா… எங்காளுங்க இல்லை..

முஸ்லீம் இல்லையா? அப்ப இந்துவா உங்களை அடிச்சது?

இல்லைம்மா அவன் முஸ்லீம்தான்…

என்னம்மா சொல்ற? முஸ்லீம்ங்குற.. ஆனா உங்க ஆளுங்க இல்லைனு சொல்ற?.

”அம்மா அவனும் முஸ்லீம்தான், நாங்களும் முஸ்லீம்தான். ஆனா அவங்க பணக்கார ஜாதி, நாங்க ஏழை ஜாதிம்மா… நாங்க இரண்டுபேரும் எப்படி ஒண்ணாக முடியும்” என்றார் சம்மட்டியடியாக..

”ஆமாம்மா நீ சொல்றது சரிதான்” என அம்மாவும் அந்த உண்மையை ஒத்து கொண்டார்.


முஸ்லீம்களை பொது அடையாளத்தின் கீழ் திரட்ட முடியாது என்பதே இந்துத்துவவாதிகளின் குற்றச்சாட்டாக இருக்கிறது. இஸ்லாமியர்கள் மிகுதியும் இஸ்லாமிய இயக்கங்களிலேயே இருப்பதால் அவர்களை பொது அடையாளத்தின் கீழ் திரட்டுவது கடினமென்றே பலரும் நினைக்கின்றனர். இதையே காரணம் காட்டி வர்க்கம் என்ற ஒன்று இருப்பதையே சில அறிவுஜீவிகள் ஒத்துக் கொள்வதில்லை. வர்க்கமாய் மக்கள் ஒன்றிணைய வேண்டுமென நாம் முழங்கும் போதெல்லாம், அடிப்படைவாதிகள் முஸ்லீம்கள் முஸ்லீம்களுடனேயே இனைய வேண்டும், இந்துக்கள் இந்துக்களுடனேயே இணைய வேண்டும், தமிழர்கள் தமிழர்களுடனேயே இணைய வேண்டும் என்கின்றனர். மதம், இனம், மொழி, ஜாதி என எத்தனையெத்தனை விசயங்கள் மக்களை வேறுபடுத்தினாலும், அவர்கள் அனைவரும் ஒன்றிணைவது வர்க்கம் எனும் இந்தப் புள்ளியில்தான். பாட்டாளி வர்க்கம் இதை இயல்பாகவே உணர்ந்திருக்கிறது, இந்த வர்க்க உணர்வைத்தான் இசுலாமிய பெண்மணியும் தன் வார்த்தைகளால் உணர்த்துகிறார். ”மக்களிடமிருந்து கற்று கொள்ளுங்கள், மக்களுக்குக் கற்றுக்கொடுங்கள்” எனும் மாவோவின் மேற்கோள் உணர்த்தும் பொருளும் இதுதான்.

படம் உதவி: தி இந்து